மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுகம்!
ரோபோடிக் அறுவைசிகிச்சையில் பத்தாண்டு கால நிபுணத்துவம் கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிகிச்சை தரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, நவீன Toumai™ MT-1000 Pro ரோபோடிக் அறுவைசிகிச்சை எந்திரத்தை நிறுவியிருக்கிறது.
ரோபோடிக் சாதன உதவியுடன் மேம்பட்ட சிகிச்சையை பரவலாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது. இந்த அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பம், சிக்கலான பல அறுவைசிகிச்சைகளில் துல்லியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்து, சிகிச்சை முடிவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடல்-இரைப்பை சிகிச்சை, கல்லீரல்-பித்தநாளவியல், சிறுநீர்ப்பாதையியல், மகளிர் மருத்துவ பிரிவு, மார்பகம், தைராய்டு அறுவைசிகிச்சை, குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட பல சிக்கலான அறுவைசிகிச்சைகளை இந்த நவீன Toumai™ MT-1000 Pro ரோபோடிக் சாதனத்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். பிரபல நடிகரும், இசையமைப்பாளரும், கொடையாளருமான திரு. விஜய் ஆண்டனி மற்றும் முன்னணி நடிகர் திரு. பிரசாந்த் தியாகராஜன் ஆகியோர் இந்த அதிநவீன ரோபோடிக் சாதன அறிமுக விழாவில் பங்கேற்று அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் S. குருசங்கர் மற்றும் MSSH-ன் மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். மருத்துவமனையின் மூத்த மருத்துவக் குழுவினரான குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன், அத்துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீர்ப்பாதையியல் துறையின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் பால் வின்சென்ட், அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் விஜய பாஸ்கர், மகளிர் மகப்பேறு மருத்துவ துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் பத்மா மற்றும் MSSH-ன் இயக்குநர் திரு. திலீப் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த அதிநவீன ரோபோடிக் சாதன அமைப்பானது, சமீபத்திய தலைமுறையைச் சேர்ந்த ரோபோடிக் அறுவைசிகிச்சைத் தளங்களில் ஒன்றாகும்; 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பிரபல மருத்துவ நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றன. உலகளவில் பல்வேறு உறுப்புகளுக்கான அறுவைசிகிச்சை பிரிவுகளில் ரோபோடிக் உதவியுடன் செய்யப்பட்ட 18,000-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் 3D உயர்-வரையறை காட்சித்திறன், மருத்துவரது மணிக்கட்டின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் அதிநவீன ரோபோடிக் கருவிகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது மருத்துவ நிபுணர்களுக்கு உதவும் மேம்பட்ட இமேஜிங் திறன்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாக்டர் S. குருசங்கர் இந்நிகழ்வில் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக, ரோபோடிக் அறுவைசிகிச்சையானது, மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. Toumai™ MT-1000 Pro ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பின் அறிமுகம், அடுத்த தலைமுறை ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் எமது பயணத்தில் அடுத்த அத்தியாயத்தைக் குறிக்கிறது; மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை எங்களது அறுவைசிகிச்சை நிபுணர்களின் நிபுணத்துவத்துடன் இணைப்பதன் மூலம், பாதுகாப்பான அறுவைசிகிச்சைகளை வழங்கி, விரைவில் வீடு திரும்ப வழி செய்வதே எங்களது நோக்கம். தென் தமிழக மக்களுக்கு அதிநவீன சுகாதார சேவையை எளிதில் பெறக்கூடியதாக மாற்றுவதில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்” என்றார்.
டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி இந்நிகழ்வில் பேசுகையில், "இந்த ரோபோடிக் தளத்தை குடல்- இரைப்பை அறுவைசிகிச்சை, கல்லீரல்-பித்தநாள மற்றும் கணைய அறுவைசிகிச்சை, சிறுநீர்ப்பாதையியல், மகளிர் நோயியல், கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை, குடலிறக்க அறுவைசிகிச்சை மற்றும் பல்வேறு சிக்கலான புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் எனப் பல சிறப்புப் பிரிவுகளில் பயன்படுத்தலாம். உடலில் குறுகலான இடங்களில் அதிகம் துல்லியம் தேவைப்படும் அறுவைசிகிச்சைகளில் இது சிறப்பான பங்களிப்பை வழங்கும்" என்று கூறினார்.

டாக்டர் மோகன் இதுகுறித்து கூறியதாவது: “சிறிய அளவிலான தழும்புகள், குறைவான வலி, மிகக் குறைந்த ரத்த இழப்பு, குறைவான நோய்த்தொற்று அபாயம், மருத்துவமனையில் தங்கும் காலம் குறைந்து விரைவாக குணமடைதல், வழக்கமான பணிகளுக்கு விரைவாகத் திரும்புதல் ஆகிய பல நன்மைகளை ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பின் உதவியோடு செய்யப்படும் சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்குகின்றன. இதில் இடம்பெற்றிருக்கும் மேம்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் வசதி மற்றும் மணிக்கட்டு போன்ற கருவிகள், சிக்கலான அறுவைசிகிச்சைகளின் போது முக்கிய நரம்புகள் மற்றும் மென்மையான உறுப்புகளைப் பாதுகாக்க அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுகின்றன".
வழக்கமான அறுவைசிகிச்சைகளைப் போலல்லாமல், ரோபோடிக் உதவியுடனான அறுவைசிகிச்சை என்பது சில சிறிய கீறல்கள் மூலம் செய்யப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறையாகும். ரோபோடிக் அமைப்பு ஒருபோதும் தன்னிச்சையாக செயல்படாது; ஒவ்வொரு அசைவும் அறுவைசிகிச்சை நிபுணரால் பிரத்யேக கன்சோலில் இருந்து முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பம் அறுவைசிகிச்சை நிபுணரது கைகளின் அசைவுகளை மிகவும் துல்லியமான செயல்களாக மாற்றுகிறது. அதே நேரத்தில் மருத்துவர்களது கைகளின் இயற்கையான நடுக்கத்தை விலக்கி, மிக நுட்பமான மற்றும் கடினமான பகுதிகளிலும் கூட சிறப்பான துல்லியத்தை உறுதிசெய்கிறது.
3D உயர்-வரையறை காட்சி அமைப்பை கொண்டுள்ள இச்சாதனம், அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு பெரிதாக்கப்பட்ட தோற்றத்தை வழங்கி, சிக்கலான அறுவைசிகிச்சைகளின் போது அதிக துல்லியத்தை உறுதிசெய்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


