`என் மகனைப் பற்றிய செய்திகளை தவிர்க்கிறேன்; ரத்த அழுத்தம்.! - CJP தலைவர் அபிஜித் திப்கே பெற்றோர்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே தலைமை ஏற்று நடத்தி வருகிறார். மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தப் போவதாகவும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவின் பெற்றோர் தெரிவித்தனர்.
அபிஜித்தின் தந்தை பகவான் திப்கே மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டுக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். அவர் சாம்பாஜி நகரில் உள்ள தனது இல்லத்தில் இது குறித்து அளித்த பேட்டியில், "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது உட்பட மாணவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
விரைவில் நடவடிக்கை இல்லை என்றால், நானும் எனது மனைவியும் மகாராஷ்டிராவில் போராட்டத்தை தொடங்குவோம். குறைபாடுள்ள தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு எனது குடும்பத்தினரோ அல்லது நெருங்கிய உறவினர்களோ நீட் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் அபிஜீத்துக்கு தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை. எங்கள் மகன் தனக்காக போராடவில்லை. அரசு அமைப்பில் ஏற்பட்ட தோல்விகளால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களுக்காக அவர் குரல் எழுப்புகிறார்என்றார்.
இந்தப் போராட்ட இயக்கத்திற்கு "எதிரி நாடுகள்" நிதி அளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் பகவான்ராவ் நிராகரித்தார்; அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறினார்.
"அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தங்கள் கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும்," என்றும் அவர் கூறினார். அபிஜீத்தின் தாயார் அனிதா டிப்கே இது குறித்து கூறுகையில், ``எனது மகன் போராட்டத்தைத் தொடங்கியபோது முதலில் கவலைப்பட்டோம். தற்போது நாடு முழுவதிலுமிருந்து கிடைத்து வரும் ஆதரவு எங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
என் மகனைப் பற்றிய செய்திகளைப் பார்ப்பதைத் தவிர்க்கிறேன். ஏனெனில் அது என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் போராட்டக் களத்தில் (ஜந்தர் மந்தரில்) என் மகனுக்குத் தாமாக முன்வந்து உதவுவதைக் காணும்போது தனது கவலைகள் குறைகிறது. அவன் தனியாக இல்லை என்பதையும், ஏராளமான மக்கள் அவனுடன் துணை நிற்கிறார்கள் என்பதையும் அறிந்து எனக்கு மன அமைதியை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
அபிஜித் பெற்றோர் கடந்த 19ம் தேதி டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், டெல்லி காவல்துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் அது போராட்டத்தின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடும் என்று அஞ்சிய அபிஜீத், அவர்களை அங்கு வராமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


