Doctor Vikatan: ஓவர் சுத்தம்... ஓசிடி பிரச்னை... மனநோயா, மீள்வது எப்படி?
Doctor Vikatan: என் 23 வயது மகளுக்கு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. எப்போதும், எதிலும் அதீத சுத்தம் எதிர்பார்க்கிறாள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் டென்ஷன் ஆகிக் கத்துகிறாள். தன்னுடைய இந்தப் பிரச்னைக்கு ஓசிடி என்றொரு பெயரும் சொல்கிறாள். இது என்ன பிரச்னை... அதிலிருந்து அவளை மீட்க என்ன வழி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப்
உங்கள் மகளுக்கு இருப்பதாகச் சொல்லும் ஓசிடி (Obsessive Compulsive Disorder) பாதிப்பு, உளவியல்ரீதியான ஒன்றுதான். தீர்வுகளைப் பார்ப்பதற்கு முன் ஓசிடி என்றால் என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
ஒருவர் வீட்டை மிகத் தூய்மையாகவும், அந்தந்தப் பொருள்கள் அந்தந்த இடத்தில் இருக்க வேண்டும் என நினைப்பதைப் பார்த்து, அவர்களுக்கு ஓசிடி இருப்பதாக நகைச்சுவையாகச் சொல்வது வழக்கமான ஒன்று. ஆனால், சுத்தமாக இருப்பது மட்டுமே ஓசிடி கிடையாது. மன உளைச்சலைத் தரும் (Distressing) ஓர் எண்ணம், மீண்டும் மீண்டும் (Repetitive) நம் மனதில் வந்துகொண்டே இருப்பதைக் குறிப்பது இது. அந்த எண்ணத்தை மனதிலிருந்து போக்குவதற்காக, நாம் ஏதேனும் ஒரு பழக்கத்தைத் திரும்பத் திரும்பச் செய்வது.
சுத்தப்படுத்துதல் சார்ந்த ஓசிடி (Cleanliness OCD) பிரச்னை உள்ளவர்களுக்குத் தன் சுற்றுப்புறம் அல்லது உடல் சுத்தமாக இல்லை என்ற எண்ணம் (Obsession) மீண்டும் மீண்டும் வந்து, கடுமையான மன உளைச்சலையும் பதற்றத்தையும் (Anxiety) ஏற்படுத்தும். இதனால், அந்த இடத்தை அல்லது பொருளை உடனடியாகவும், திரும்பத் திரும்பவும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டாயச் செயல் (Compulsion) ஏற்படும். கைகள் சுத்தமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப கழுவுவது, அளவுக்கு அதிகமாக கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது என இருப்பார்கள். இதனால் கைகளில் வெடிப்பு (Cracks), புண் (Sore), வறட்சி (Dryness) போன்றவைகூட ஏற்படலாம்.

சுத்தம் என்ற பெயரில் மணிக்கணக்கில் (2, 3 அல்லது 5 முதல் 6 மணி நேரம் வரை) குளிப்பது, பாத்ரூம், குழாய், மக் போன்றவற்றைத் தொடர்ந்து கழுவுவார்கள். இது அளவுக்கு அதிகமான செயல் என அவர்களுக்கே தெரிந்தாலும், அவர்களால் அதை நிறுத்த முடியாது. இந்தச் செயலால் பலருக்கும் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படும் அளவுக்கும் போகலாம்.
சிலர் தாங்கள் மட்டும் சுத்தமாக இருக்க நினைப்பதைத் தாண்டி, வீட்டு உறுப்பினர்களையும் அப்படி இருக்கக் கட்டாயப்படுத்துவார்கள். வெளியே சென்று வந்த குடும்ப உறுப்பினர்களைத் திரும்பத் திரும்பக் குளிக்கச் சொல்வது, தொடுவதற்குத் தடை விதிப்பது போன்றெல்லாம் நடந்துகொள்வார்கள். இந்தப் பிரச்னையால் கணவன்-மனைவிக்கிடையே தகராறுகள் ஏற்பட்டு, பிரிந்து வாழும் நிலைகூட ஏற்படுவதை எங்கள் அனுபவத்தில் பார்க்கிறோம்.
ஓசிடி பிரச்னையைச் சரிசெய்ய உளவியல் சிகிச்சைகள் (Psychological Treatments) பல உள்ளன. அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்போது (Severity) மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகள் உட்கொள்ளலாம். பெரும்பாலான நிலைகளில் மருந்துகள் மற்றும் உளவியல் தெரபி இரண்டும் இணைந்த சிகிச்சை சிறந்த பலனைத் தரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

