ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?- டாக்டரின் அட்வைஸ் என்ன?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை.

தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்போது குடிக்கலாம் என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா.

“தமிழர் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்குத் தனி இடமுண்டு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகமாக கூழ் தயாரிக்கப் பயன்படுத்துவர்.

இவற்றை மாவாக அரைத்து, இரவு முழுவதும் நொதிக்கவிட்டு காலையில் காய்ச்சிக் கூழாகத் தயாரிப்பார்கள். இவ்வாறு நொதிக்கவிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் எளிதாகக் கிரகிக்கப்படும்.

சித்த மருத்துவர் சங்கீதா

மேலும், வயிற்றில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் ‘ப்ரோபயாட்டிக்’ தன்மையும் இதில் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதால் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது.

முதுவேனில் காலத்தில் வெயிலும், இடையிடையே மழையும் இருப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். அந்த நேரத்தில் அம்மை போன்ற வைரஸ் நோய்களும் பரவக்கூடும்.

உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் வெப்பமும் உயரும்.

இதனால் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. உடல் சூட்டைக் குறைக்க அதிகமாகத் தண்ணீர் அருந்துதல், பழங்கள், மோர், இளநீர், கூழ் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

பழங்காலத்தில் மக்கள் அதிக தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். உடல் சோர்வு மற்றும் வெப்பத்தைக் குறைக்க சாலையோரங்களில் பந்தல் அமைத்து இலவசமாக கூழ் வழங்கும் பழக்கமும் இருந்தது.

கேழ்வரகில் அரிசியைவிட பல மடங்கு கால்சியம் உள்ளது. கம்பில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து காணப்படும்.

இது மூலநோய்க்கு நல்லது. கர்ப்பிணிகளுக்கும் எளிதில் செரிக்கும் உணவாகும். ஆனால், தோல் அரிப்பு அல்லது சிரங்கு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கம்பை அளவோடு சாப்பிடுவது நல்லது.

கம்மங் கூழ்
கம்மங் கூழ்

அதேபோல், அதிகமாகப் புளித்த கூழ் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், 3 முதல் 12 மணி நேரம் வரை ஊறவைத்து நொதித்த கூழ்தான் உடலுக்கு நல்லது. முறையாக நொதிக்காத கூழை அருந்தினால் வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கூழைக் காய்ச்சிய பிறகு 1 முதல் 3 மணி நேரத்துக்குள் அருந்துவது நல்லது. மோர் சேர்க்காமல் கட்டியாக உருட்டி வைத்தால், அதை ஒரு நாள் வரை பாதுகாத்து பின்னர் கரைத்துச் சாப்பிடலாம்.

சிலருக்கு முதன்முறையாக கூழ் குடிக்கும்போது உடல் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தவிர்க்கலாம். சிறு குழந்தைகளுக்கு கூழின் சுவை உடனே பிடிக்காமல் இருக்கலாம். சேர்ப்பது சிரமமாக இருக்கலாம். பொதுவாக 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்” என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.