முதல்வர் விஜய்யின் மெகா ப்ளான்; பாராட்டிய வைகோ; முன்வைக்கப்பட்ட கோரிக்கை! - தோழமை கூட்ட ஹைலைட்ஸ்

முதல்வர் விஜய் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தவெக. தோழமை கட்சியினர் மத்தியில் முதல்வர் விஜய் என்ன பேசினார்? கூட்டத்தின் ஹைலைட்ஸ் என்ன?

தவெக - தோழமை கட்சிகளின் கூட்டம்

கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் மாலை 4 மணிக்கு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் விஜய் 3.45 மணியளவில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார். எல்லாருக்கும் முன்பாக 3:15 மணிக்கே காங்கிரஸின் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் ஹோட்டலுக்கு வர தொடங்கிவிட்டனர். முதல்வர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக வைகோவும் திருமாவும் தங்களுடைய சகாக்களோடு வந்திருந்தனர். ஐ.யூ.எம்.எல் கட்சியினர் மட்டும் முதல்வரின் வருகைக்குப் பிறகு ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தனர்.

கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மட்டும் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு சிறிய கெட் டு கெதர் சந்திப்பு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில் உள்ளே வந்தவுடனேயே வைகோ, திருமா, காதர் மொய்தீன், மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரை அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கே சென்று கைகுலுக்கி வரவேற்றிருக்கிறார் முதல்வர் விஜய். கூட்டத்தில் சூடான சிக்கன் பக்கோடாக்களும் பனியாரமும் பரிமாறப்படவே, ஆவி பறக்க பேச்சை தொடங்கியிருக்கிறார் முதல்வர் என்கிறார்கள் ஆளும் கட்சிக்கு நெருக்கமான சிலர்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

வழக்கம்போல அவரது ஸ்டைலிலேயே அளந்து அளந்து 5 நிமிடம் மட்டுமே பேசியிருக்கிறார். உங்கள் எல்லாருடைய ஆதரவோடும்தான் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் முன்பு உறுதிக் கொடுத்ததை போல லஞ்சம் ஊழலற்ற நிர்வாக மற்றும் மதச்சார்பின்மையில் எப்போதும் உறுதியாக இருப்பேன். அதைப்பற்றி உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். தோழமைகளாக கூடியிருக்கும் நாம் தமிழக மக்களின் நலனை முன்னிறுத்த கூடிய வலுவான சமூகநீதி கூட்டணியாக மாற வேண்டும்.

அந்த கூட்டணி வருகிற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றிலும் ஒன்றாக இருந்து நீண்ட காலத்துக்கான கூட்டணியாக இது இருக்க வேண்டும். கூட்டணிக்கான பெயரை கூடிப் பேசி முடிவெடுப்போம். என் மனதில் ஒரு பெயர் இருக்கிறது. நீங்களும் உங்களின் பரிந்துரைகளை சொல்லுங்கள். கூடி முடிவெடுப்போம் என சுருக்கமாக தனது மெகா ப்ளானை முன்வைத்திருக்கிறார். மேலும், தலைவர்கள் மத்தியில் மட்டுமே இந்த கூட்டணியென்று இருக்கக்கூடாது, களத்தில் தொண்டர்களும் கைகோர்த்து வேலை செய்ய வேண்டும். அதற்காக மாவட்டந்தோறும் இந்த தோழமை கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற முடிவும் கூட்டத்தில் ஒருமித்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

என்னோட எம்.எல்.ஏக்களும் ராஜினாமா பண்ணியருந்தா நானும் கம்பீரமா உட்காந்திருப்பேன்.... என பேச்சை தொடங்கினாராம் வைகோ.

இந்த ஆட்சி வந்ததுக்கு அப்புறம் ஊழல் இல்லாம போயிருச்சு. கமிஷன் இல்லை. கரப்ஷன் இல்லை. மக்கள் எல்லாம் இப்படி ஒரு ஆட்சியை பார்க்கதான் இத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தாங்க என ஏகத்துக்கும் புகழ காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல் தரப்பினரும் அதை ஆமோதித்து முதல்வரையும் தவெக அரசையும் பாராட்டியிருக்கின்றனர். குறிப்பாக, ப.சிதம்பரம் சில துறைகளை குறிப்பிட்டு இந்த துறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களெல்லாம் வரவேற்கத்தக்கவை என கூற முதல்வர் குஷியாகியிருக்கிறார்.

இதில்தான் திருமாவோடு வந்திருந்த விசிகவின் சிறுத்தைகள் சிலர் கொஞ்சம் சங்கடமைந்தனர் என்கின்றனர். திமுக அரசை நாமும்தான் ஆதரித்திருக்கிறோம். அப்படியிருக்க தவெக ஆட்சியில் ஊழல் இல்லை என்றால், நாம் ஆதரித்த திமுக ஆட்சியில் ஊழல் இருந்ததை கண்டுகொள்ளாமல்தான் இருந்தோம் என நாமே ஒத்துக்கொள்கிறோமா? என்று தங்களுக்குள்ளாகவே கிசுகிசுத்திருக்கின்றனர்.

கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்க ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்கிற விஷயத்தையும் தோழமை கட்சியினர் முதல்வரிடம் முன்வைத்திருக்கின்றனர்.

கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர்களையும் எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவிட வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம் என்கின்றனர். அதற்கு என்ன செய்யலாம் என்றும் தன்னுடைய சகாக்களிடம் ஆலோசிக்க தொடங்கிவிட்டாராம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.