பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF - சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில், தனியார் துறையின் மிகப்பெரிய தங்கம் சுரங்கம் மற்றும் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலையை ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா மற்றும் டெக்கான் கோல்டு மைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சுமார் 405 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

இந்த ஆலையின் முதல் யூனிட்டைத் திறந்து வைத்த முதல்வர், அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக இரண்டாவது ஆலைக்கான அடிக்கல்லையும் நாட்டினார். மொத்தம் 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக 600 ஏக்கரில் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தங்கச் சுரங்கம்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வையொட்டி, ஜொன்னகிரி கிராமத்தின் பெயரை ஸ்வர்ணகிரி என மாநில அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.

கர்நாடகாவின் புகழ்பெற்ற கோலார் தங்க வயல் (KGF) போன்ற பெருமையை இந்த ஸ்வர்ணகிரி திட்டம் ஆந்திராவிற்குப் பெற்றுத்தரும் என அம்மாநில அரசு நம்புகிறது. இந்த ஆலை தனது முதல் ஆண்டில் 400 கிலோ தங்கத்தையும், இரண்டாவது ஆண்டில் 900 கிலோ தங்கத்தையும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆலை முழுத்திறனை எட்டும்போது ஆண்டுக்கு 2 டன் தங்கம் வரை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், உற்பத்தியாகும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீத ராயல்டி தொகை மாநில அரசுக்குக் கிடைக்கும். இதன் மூலம் முதல் ஆண்டில் 57 கோடி ரூபாயும், இரண்டாவது ஆண்டில் 144 கோடி ரூபாயும் அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு கே.ஜி.எஃப் மூடப்பட்ட பிறகு, இந்தியாவில் கர்நாடக அரசின் ஹட்டி (Hutti) சுரங்கத்தில் மட்டுமே தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு வந்தது. முற்றிலும் முடங்கிக்கிடந்த ஒரு பகுதியில் தங்க இருப்பைக் கண்டறிந்து அதை உற்பத்திக்குக் கொண்டு வருவது என்பது அதிக செலவு மற்றும் ஆபத்து நிறைந்த நீண்ட காலப் பணியாகும். ஜியோ மைசூர் நிறுவனம் கடந்த 1990-களிலேயே இங்குத் தங்கம் இருப்பதற்கான முதற்கட்ட ஆராய்ச்சிகளைத் தொடங்கியது.

தங்கச் சுரங்கம்
தங்கச் சுரங்கம்

பின்னர் 2026-ல் சுரங்க குத்தகைக்கு விண்ணப்பித்து, தமிழ்நாடு வம்சாவளியைச் சேர்ந்தவரின் நிறுவனமான திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் டெக்கான் கோல்டு மைன்ஸ் நிறுவனங்களின் ஆதரவோடு 405 கோடி ரூபாய் முதலீடு செய்து தற்போது வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் 2015 மற்றும் 2021-ஆம் ஆண்டு சுரங்கச் சட்ட சீர்திருத்தங்கள், தனியார் நிறுவனங்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக விற்க வழிவகை செய்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

கர்நாடகாவின் கோலார் தங்க வயல் (KGF) சுமார் 120 ஆண்டுகளில் 800 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியாவிற்கு அளித்துள்ளது. உலகிலேயே மிக ஆழமான (3.2 கி.மீ) சுரங்கமாக இருந்த அது, ஒருகட்டத்தில் தங்கம் குறைந்து போனதால் கைவிடப்பட்டது. ஆனால், தற்போதைய ஸ்வர்ணகிரி திட்டம் இந்தியாவின் தங்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும்.

இங்குச் சுமார் 82 லட்சம் டன் தாதுக்கள் இருப்பதாகவும், ஒரு டன் தாதுவிலிருந்து சராசரியாக 1.49 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 12 டன் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கியச் சுரங்கம் 8 முதல் 9 ஆண்டுகள் வரை தடையின்றி இயங்கும். கே.ஜி.எஃப் போல பூமிக்கு அடியில் ஆழமாகச் செல்லாமல், இது நிலப்பரப்பிலேயே தோண்டப்படும் திறந்தவெளிச் சுரங்கமாக (Open-pit mine) உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.