சென்னையில் சொந்த வீடு வாங்கனும்னா இத்தனை மாசம் ஆகுமா? - ஆய்வில் வெளியான ஷாக் தகவல்!
மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று முன்தினம் (பிப்.,08) வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயித்திருக்கிறது ஆர்.பி.ஐ.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் இதனூடே அதிகரிக்கப் போகிறது.
இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என பல நடுத்தர மக்களின் நிலையே குலைந்துவிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், Moneycontrol-Liases Foras House Purchase Affordability Index இந்தியாவின் முக்கிய நகரங்களின் சராசரி மாத வாடகையைக் கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
![]()
32 நகரங்கள் கொண்ட பட்டியலில் வீட்டு வாடகையை முதன்மையாக கொண்டும், சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அடிப்படை வசதிகள், பயண தொலைவுகள் முதலியவற்றை கருத்தில்கொண்டும் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் most affordable city in India என்ற பட்டியலில் பெங்களூரு மட்டும் தனித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தூர், ராஜ்கோட், வதோதரா, கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.
ஏனெனில் பெங்களூருவில் குடியிருப்போரில் சராசரியான அதிகபட்ச சம்பளமே சுமார் 90 ஆயிரத்துக்கு இருப்பதால் 330 மாதங்களுக்கான வாடகையை வைத்து தாராளமாக வீட்டை வாங்கிட முடியும். இல்லையேல் அதற்கும் குறைவான மாதக்கணக்கில் தவணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் அமையும். இந்த வரிசையில்தான் ஐதராபாத்திற்கு 472 மாதங்கள், கோவைக்கு 498, டெல்லிக்கு 449, கொச்சிக்கு 401, கொல்கத்தாவுக்கு 358, திருவனந்தபுரத்திற்கு 494 என பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
ஆனால் சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 511 மாதங்கள் ஆகுமாம். ஏனெனில் சென்னை வாசிகளின் சராசரி அதிகபட்ச சம்பளமே 40 ஆயிரத்துக்குள் இருப்பதால் இத்தனை மாதங்கள் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் ஒப்பிட்டு பார்த்தால் சென்னையில் ஒரு வீடு வாங்க கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். தோராயமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கான கடனை அடைக்கவே மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயாவது கட்ட நேரிடும். இந்த EMI கட்டணம் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 32 நகரங்களிலேயே ஆந்திராவின் விசாகப்பட்டினம்தான் மிகவும் கட்டுப்படியே ஆகாத நகரமாக இருக்கின்றன. ஏனெனில் வைசாகில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 606 மாதங்களுக்கு வாடகை கட்ட வேண்டி வரும். அதாவது வாழ்க்கையின் பாதி நாட்களான 50 வருஷத்தை செலவிட வேண்டும்.
இப்படியாக புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா, கவுகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களின் கணக்கீடுகள் நீள்கின்றன. இதன் மூலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுவோர் சராசரியாக வாழ்நாளில் ஈட்டக்கூடிய வருமானத்தை வாடகையாகவோ, மாதத் தவணையாகவோ கட்ட வேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

