”ஆமாம் அதானி ஆஃபிஸ்ல இருந்து தான் பேசுறோம்”-மின்கட்டணம் செலுத்த சென்று 7 லட்சம் இழந்த பெண்
மின்சார கட்டணம் செலுத்தும் தேதி காலாவாதியாகி விட்டதாக எஸ்எம்எஸ் வந்ததை நம்பி, மின்சார கட்டணம் செலுத்தும் போது ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர்.
ஆமாம் நாங்கள் அதானி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தான் பேசுகிறோம், உங்களுடைய வீட்டிற்கு மின்துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கு இந்த மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பணத்தை கட்டுங்கள் எனக்கூற, அந்தபெண்ணும் அப்படியே டவுன்லோடு செய்து ஓடிபியையும் பகிர்ந்ததை அடுத்து, அவருடைய அக்கவுண்டிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் சைபர் கிரைம் மோசடி மூலம் ஆன்லைன் வழியே பணம் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு இரையாகி, மொபைல் போன்கள் மூலம் பெறப்படும் எஸ்எம்எஸ், லிங்க் மற்றும் செய்திகளுக்கு பதிலளித்த பிறகு பணத்தை இழந்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், மின்கட்டண தாமதம் தொடர்பாக போலி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட சைபர் மோசடியில் சிக்கி ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

ANI-ன் அறிக்கையின்படி, மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு, அவருடைய கணவரின் தொலைபேசியில் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் மின் கட்டணம் குறித்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பில் கட்டுவதற்கு இன்னும் குறைவான நேரம் மட்டுமே உள்ளதாகவும், அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. அந்த செய்தி குறிப்புடன், மின் துண்டிப்பை உடனடியாக தடுப்பதற்கு பணம் செலுத்த இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் அறிவிப்பாக இருக்கும் என நினைத்து அந்த பெண் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரின் போன்காலை எடுத்த ஒரு நபர், தான் ஒரு ”அதானி மின்வாரியத்தின் அலுவலக ஊழியர்” என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தன்னுடைய கஸ்டமரிடம் கணிவாக பேசிய அவர், நீங்கள் கவலைபடவேண்டாம் பில் செலுத்துவதில் நான் உங்களுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். மேலும் "டீம் வியூவர் குய்க் சப்போர்ட்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.
அடையாளம் தெரியாத அந்த நபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய 65 வயது மூதாட்டி, அந்த செயலியை பதிவிறக்கியதோடு மட்டுமல்லாமல், அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் அவருக்கு அழைத்து தனக்கு வந்த ஓடிபியையும் கூறியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4,62,959, ரூ.1,39,900 மற்றும் ரூ.89,000 என மூன்று பரிவர்த்தனைகளில் பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அவரது கணக்கில் இருந்து ரூ.6,91,859 பணம் பிடிக்கப்பட்டது.

ஆன்லைன் வழியாக பெரிய பரிவர்த்தனைகளைப் பார்த்ததும், எஸ்பிஐ மோசடி நிர்வாகக் குழு உடனடியாக பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு சமீபத்திய பரிவர்த்தனை உங்களது தரப்பிலிருந்து தான் நடைபெற்றதா என்பதை உறுதிசெய்துள்ளது, ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சைபர் மோசடியில் தான் பணத்தை இழந்துள்ளோம் என்பதை தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண், தனது மகளுடன் அந்தேரி காவல் நிலையத்திற்குச் சென்று மோசடி குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர் மீது IPC 420, 66(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதிலும் இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி நடந்துவருகிறது. அவரசகால அழைப்பு என மின் கட்டணம் செலுத்துவது, வங்கியில் இருந்து கணக்கை புதுப்பித்தல் போன்ற லிங்க் மற்றும் எஸ்எம்எஸ்-களை பகிர்ந்து விவரங்களை சேகரிக்கும் சைபர் மோசடி கும்பல், தொடர்ந்து பண மோசடியில் ஈடுப்பட்டு வருகிறது. உங்களுடைய மொபைல் போன்களுக்கு இப்படி வங்கி அல்லது மின்வாரியத்திலிருந்து செய்திகுறிப்பு வந்தால் அது முறையானது தானா என்பதை அறிந்துவிட்டு பிறகு ஒடிபி போன்றவற்றை பகிருங்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவியுங்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


