நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் திருப்பம்; 11ஆம் வகுப்பு மாணவன் உட்பட நால்வர் கைது
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக 11ஆம் வகுப்பு மாணவன் உட்பட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே பத்திநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் மைக்கில். அவரின் மனைவி உஷாதேவி (68). உஷாதேவி, தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று உஷாதேவியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு அவரது உறவினரொருவர் சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவு பூட்டியிருந்தது தெரியவந்துள்ளது. சந்தேகமடைந்த அவர், பின் கதவு வழியாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, உஷாதேவி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவரது உறவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு உஷாதேவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து உஷாதேவியின் கழுத்தில் காயங்கள் இருந்ததும், அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததும் உறவினர்களுக்கு தெரியவந்திருக்கிறது. மேலும் வீட்டில் உள்ள சிசிடிவி-DVR உடைக்கப்பட்டு இருந்தது, அவர்களுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால் உறவினர்கள் இராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில், பல்லவிளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனொருவர், உஷாதேவியின் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவன் நகைக்காக தான் உஷாதேவியை கொலை செய்திருக்கிறான் என்பது தெரியவந்தது.

அம்மாணவனை கைது செய்த காவல்துறையினர், சம்பவத்திற்கு துணையாக இருந்ததாக பல்லவிளையை சேர்ந்த இரஞ்சித் மற்றும் நகையை வாங்கிதாக கோலியான்குளத்தை சேர்ந்த உதயபிரகாஷ், அவருடைய மனைவி சகாயசுபா ஆகிய மூன்று பேரையும் சேர்த்து கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


