ஆயுர்வேத மூலப்பொருட்களின் பேரில் ரூ.33 லட்சம் மோசடி: நைஜீரியர்கள் கைதும், பின்னணியும்!

சென்னையை சேர்ந்த ஒருவரிடம், ரூ.33,30,000 பணத்தை மோசடி செய்துள்ளனர் நைஜீரியாவை சேர்ந்துள்ள சிலர்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த புகாரில், “நைஜீரியா நாட்டை சேர்ந்த நேராரமோரிசன் என்ற பெயரிலான ஒருவர் LINKEDIN மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் இந்தியாவில் இருந்து "MONOTROPA UNIFLORA" என்ற ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய ஒரு வணிக கூட்டமைப்பை முன்மொழிந்ததாகவும், மூலப்பொருட்கள் வாங்குவதற்கு கமிஷன் தருவதாகவும் கூறினார்.

அதை உண்மையென நம்பிய நான், ரூ.33,30,000/- பணத்தை அவர்கள் சொன்ன இரண்டு வங்கி கணக்குகளில் எட்டு பணப்பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்தேன். ஆனால் முதலீடு செய்த பிறகு நைஜீரியா நாட்டு நபர் கூறியபடி எந்தவொரு கமிஷன் கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் நான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்தேன். அந்த நபர்கள் என்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

image

அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (419, 420 IPC, 66D IT Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மும்பையிலிருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று, அங்கு கார்கர் ஏரியாவில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா (32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இமானுவேல் (32) மற்றும் எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) ஆகியோரை கடந்த 21 ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் விசாரணைக்குப் பிறகு மோசடி செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், லேப்டாப்கள், வங்கிகணக்கு அட்டைகள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின் அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, இன்று குற்றவாளிகளை சென்னை கொண்டு வந்து பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எழும்பூர்) ஆஜர்படுத்த இருக்கிறார்கள்.

image

புலன் விசாரணையில் மேற்படி நைஜீரிய நபர்கள் கார்கர், மும்பையில் தங்கியிருந்து கொண்டு LINKEDIN சமூகவலைதளம் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஆயுர்வேத ஆயில் சப்ளை - கமிஷன் என்ற மோசடியில் ஈடுபட்டு வருவதும் முதலீடு செய்தால் கமிஷன் தருவதாக பேசி வருவதும் தெரியவந்தது. மேலும் போலியான ஆயுர்வேத மூலப்பொருட்களை அனுப்பி ஆசை காட்டி நம்பவைத்து, பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது சிறிதாக பணம் கட்டச் சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றுவதும் தெரியவந்தது.

எனவே இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யும் போதும் அவற்றை அனுப்பும் போதும் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை உண்மை என்று நம்பிக் கொண்டு, தங்களது பணத்தை யாரிடமும் அனுப்பக்கூடாது என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் ‘நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்களிடம் பணம் எதுவும் கொடுக்ககூடாது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கமிஷன் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது’ என்றும் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.