புதுமுகங்களை வைத்து வசூலை அள்ளிய வாழ 2; உடனடியாக அறிவிக்கப்பட்ட வாழ 3 - நெகிழும் இயக்குநர்

மல்லுவுட்டில், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பலநடையில் போன்ற திரைப்படங்களை இயக்கி அனைத்துப் பக்கமும் அறியப்பட்டவர் இயக்குநர் விபின் தாஸ்.

குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்திற்குப் பிறகு இவர் கதாசிரியராகப் பணியாற்றிய வாழ: பயோபிக் ஆஃப் பில்லியன் பாய்ஸ் திரைப்படம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்து பெரும் வெற்றியைப் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதனைப் பிரான்சைஸாகவும் மாற்றினார்கள். முதல் பாகத்தைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, வாழ 2: பயோபிக் ஆஃப் பில்லியன் ப்ரோஸ் திரைப்படம் வெளியானது.

இப்படத்தின் கதாசிரியரும் விபின் தாஸ்தான். இரண்டாம் பாகம் வெளியான சில நாட்களிலேயே பெரும் வசூலை அள்ளி, மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றிருக்கிறது.

வாழ திரைப்பட பிரான்சைஸில் பெரியளவில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் இல்லாமல் இத்தகைய வசூலை அள்ளியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகத்திற்குக் கிடைத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, மூன்றாம் பாகத்தின் அறிவிப்பை தற்போது உடனடியாகவே வெளியிட்டிருக்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தை, விபின் தாஸின் உதவி இயக்குநர் சவின் இயக்கியிருந்தார். மூன்றாம் பாகத்தையும் விபின் தாஸின் உதவி இயக்குநரான விஸ்வன் ஸ்ரீஜித் இயக்குகிறார்.

முதல் இரண்டு பாகங்களில் ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்திக் கதை நகர்ந்திருந்தது. மூன்றாம் பாகத்தில் பெண் கதாபாத்திரங்களை முதன்மையாக அமைத்திருக்கிறார்களாம். அதன்படி, மூன்றாம் பாகத்திற்கு பயோபிக் ஆஃப் பில்லியன் கேர்ள்ஸ் என டேக்லைன் வைத்திருக்கிறார்கள்.

மூன்றாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட வாழ பிரான்சைஸ் திரைப்படங்களின் கதாசிரியர் விபின் தாஸ், "வாழ தொடர் நாங்கள் நினைத்ததை விடப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.

View this post on Instagram

A post shared by Vipin Das (@vipindashb)

சினிமாவுக்குப் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இதனைத் தொடங்கினோம். வரும் காலங்களிலும் அதே கொள்கையைத் தொடருவோம்.

எழுத்து, இயக்கம், நடிப்பு அல்லது இசை என எந்தத் துறையாக இருந்தாலும், திறமையாளர்களுக்கு எப்போதும் கதவு திறந்திருக்கும் ஒரே தொடர் இதுதான். இந்த தலைப்பும் ரசிகர்களுமே எங்களின் பலம்.

ரசிகர்களின் அமோக ஆதரவு மற்றும் ஆலோசனைகளை ஏற்று வாழை 3 - பில்லியன் பெண்களின் பயோபிக் (Vaazha 3 – Biopic of a Billion Girls) படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எப்போதும் போலவே, எனது இயக்கக் குழுவில் முக்கியப் பங்காற்றிய விஸ்வன் ஸ்ரீஜித் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் இல்லாமல், இந்தத் திரைப்பட பிரான்சைஸ் இத்தனை பெரியளவிற்கு வளர்ந்திருப்பது, அனைத்து சினிமாக்களிலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.