முதலிரவில் முகத்திரையை எடுக்க ரூ.90 லட்சம்: பெண் வீட்டார் மீது `கொலை முயற்சி வழக்கு - என்ன நடந்தது?
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முஸ்கான் சிங். இவருக்கும் கல்பனா என்றப் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று கல்பனா தன் முகத் திரையை அகற்ற ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்கான் சிங் அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே, அன்று இரவே, கல்பனா தன் நகைகளை எடுத்துக்கொண்டு தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அதைத் தொடர்ந்து, கல்பனாவின் குடும்பத்தினர் அடிக்கடி வந்து முஸ்கான் சிங் குடும்பத்தாரிடம் பணம் கேட்டு சண்டையிட்டிருக்கின்றனர். சிலமுறை, வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், கேட்கப்பட்ட பணத்தைத் தராவிட்டால் மணமகன் குடும்பத்தினரை உயிரோடு எரித்துவிடுவோம் என்று மணப்பெண் வீட்டார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ்அப் மூலமாகவும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கடந்த மார்ச் 26-ம் தேதி, இந்தப் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியது. மணப்பெண் வீட்டார் மணமகனின் வீட்டுக்குச் சென்று ஆபாசமாகத் திட்டியதோடு, அங்கிருந்த பி.என்.ஜி (PNG) எரிவாயு குழாயைச் சேதப்படுத்தி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிரோடு எரிக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மணமகன் வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததால், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தற்போது போலீசார் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


