LIK: டூட் படத்தில அவர் நடிச்சது முதல்ல பிடிக்கல, ஆனா.!- பிரதீப் ரங்கநாதன் குறித்து ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

லவ் டுடே, டிராகன், டூட் படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இப்படம் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.

LIK

இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே பாலாஜி, " இப்போது இருக்கக்கூடிய தமிழ் சினிமாவில் நீங்கள் யாருடைய ரசிகர் என்று என்னை கேட்டால் நான் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர் என்று சொல்லுவேன்.

நான் இரண்டு வருடங்களாக கருப்பு படத்தை எழுதி, இயக்கிக் கொண்டிருந்த இந்த இடைவேளையில் ரஜினி சார், விஜய் சார் நடித்த படங்கள் வெளியானது.

அவர்கள் நடித்த படங்களை எல்லாம் எங்களுடைய டீமோடு சேர்ந்து தியேட்டருக்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

அதேபோல எங்கள் டீமோடு சென்று முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்ட படம் டூட்.

நிறைய இளம் தலைமுறைகளை நீங்கள் கவர்த்திருக்கிறீர்கள் பிரதீப். எனக்கு உங்களைப் பார்க்கும்போது மிகப்பெரிய ஸ்டாரை பார்ப்பதுபோலத் தான் தோன்றுகிறது.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. டூட் படத்தில் முதல் 30 நிமிடங்கள் எனக்கு நீங்கள் நடித்தது பிடிக்கவில்லை. ஆனால் 35-வது நிமிடத்தில் இருந்து நீங்கள் நடித்தது எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் பிரதீப். வாழ்த்துகள்" என பிரதீப் ரங்கநாதனைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.