மெட்ரோ அரசியல்: மக்கள் வரிப்பணமும் டெல்லியின் மிரட்டலும் - விளாசும் பி.டி.ஆர்

பா.ஜ.க வேட்பாளார்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மத்திய அமைச்சர்களும், சில மாநில முதல்வர்களும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர். அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும்போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வந்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``இந்த தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றால் மதுரைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்" என்றார். அவரின் இந்தப் பேச்சு தமிழ்நாடு அரசியலில் அனலைக் கிளப்பியது.

தேவேந்திர பட்னாவிஸ்

முதல்வர் ஸ்டாலின், ``மெட்ரோவை வைத்து பா.ஜ.க மிரட்டப் பார்க்கிறது" என விமர்சித்தார். இந்த நிலையில், இன்று மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில், ``ஒரு மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்ய மெட்ரோவை விடச் சிறந்த திட்டம் வேறெதுவும் இல்லை. நான் நியூயார்க்கில் வங்கியாளராகப் பணியாற்றியபோது, ஏழை - பணக்காரர் என்ற வித்தியாசமின்றி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் செல்ல அனைவரும் சப்வே மெட்ரோவையே நாடுகின்றனர்.

மெட்ரோ போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உலக வங்கி முதல் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி வரை சர்வதேச நிறுவனங்கள் மிக எளிதாகக் கடன் வழங்குகின்றன. சென்னை மெட்ரோ முதற்கட்ட பணியில் சுமார் 20% நிதியை மத்திய அரசும், 20% நிதியை மாநில அரசும் வழங்கின. மீதமுள்ள 60% நிதி சர்வதேச வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

வழக்கமாக, ஒரு மாநில அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை மத்திய நிதிக்குழுவும், இந்திய அரசியலமைப்பின் கீழ் மத்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யும். ஆனால், மெட்ரோ போன்ற திட்டங்களுக்குப் பன்னாட்டு வங்கிகளிடமிருந்து பெறப்படும் குறைந்த வட்டி கடன்கள், மாநில அரசின் அந்தப் பொதுக் கடன் எல்லைக்குள் வராது. இது மாநில அரசு மற்ற நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஏதுவாக அமையும். இப்படி கிடைக்கும் கடனை முடக்கும் வகையில்தான் ஒன்றிய அரசின் இராண்டாம் கட்ட மெட்ரோ திட்ட நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் எழுந்தது.

தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாகத் தமிழ்நாடு, மத்திய அரசுக்கு அதிக வரிப்பணத்தைச் செலுத்தி வருகின்றன. அவ்வாறு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை மீண்டும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு வழங்காமல், அதை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. தற்போதைய பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் வரிப்பணத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

மோடி, நயினார் நாகேந்திரன், டி.டி.வி.தினகரன்

இதற்கு சில உதாரணமாக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட கல்விக்கான நிதியை புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தருவோம் என்று நிபந்தனை விதிப்பது. சட்டப்படி வழங்கவேண்டிய நிதியை, மும்மொழி கொள்கை போன்ற அரசியல் காரணங்களுக்காகத் தடுப்பது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணியின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.47,000 கோடி. இதில் 15% மாநில அரசு, 15% மத்திய அரசு, மீதமுள்ள 70% கடன் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டது. இதற்கான கடனை வழங்க பன்னாட்டு வங்கிகள் தயாராக இருந்தாலும், மத்திய அரசு தனது பங்கை வழங்காமல் இழுத்தடிப்பது திட்டத்தை பாதிக்கிறது.

மக்களின் வரிப்பணத்தை அரசியலுக்காக பிணைக் கைதியாக வைத்திருக்கும் போக்கையே நாம் காண்கிறோம். அதனால்தான், இந்தத் தேர்தலை தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என முதல்வர் குறிப்பிடுகிறார். மெட்ரோ திட்டம் என்பது ஒரு போக்குவரத்து வசதி மட்டுமல்ல, அது மாநில சுயாட்சி மற்றும் நிதி உரிமையின் அடையாளமாகவும் மாறியிருக்கிறது.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) நாம் சமர்ப்பித்தோம். ஆனால், மத்திய அரசு, ` மதுரை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போதுமான மக்கள் தொகை இல்லை என்கிறார்கள். இதே காரணத்தைக்கூறிதான் கோவை மெட்ரோ திட்டத்தையும் நிராகரித்தார்கள்.

பி.டி.ஆர்
பி.டி.ஆர்

ஆனால், இதே காலகட்டத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா போன்ற வடமாநில நகரங்களுக்கும், சரியாகச் செயல்பட முடியாதளவு பயணிகள் வருகை குறைவாக இருக்கும் இந்தூர் மெட்ரோவிற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ், "எங்கள் வேட்பாளர் ஜெயித்து மோடியை சந்தித்தால் தான் மெட்ரோ வரும்" என்று பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒரு மாநகரத்தின் 20 லட்சம் மக்களின் தேவையை, ஒரு தேர்தல் வெற்றியை வைத்துப் பிணையக் கைதியாக மாற்றுவது அரசியல் அறமற்ற செயல்.

நிதி ஆணையத்தின் பரிந்துரைகளைத் தாண்டி, மத்திய அரசு தனது விருப்ப நிதியை வடமாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது. வடஇந்திய மாநிலங்களுக்கு நிறைய வரிப் பகிர்வு கொடுக்கும் ஒன்றிய அரசு, தென்னிந்திய மாநிலங்களின் வரிப்பணத்தில்தான் அரசியல் செய்கிறது.

பி.டி.ஆர்
பி.டி.ஆர்

அரசாங்கம் என்பது வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பொதுவானது. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் தான் நிதி தருவோம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 293 மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழக அரசு தனது சொந்த நிதியை அட்வான்ஸாக வழங்கியாவது திட்டங்களைச் செயல்படுத்தும், ஆனால் மத்திய அரசின் இந்த பாரபட்சமான அணுகுமுறையை மக்கள் முன் வைக்க வேண்டியது எங்களது கடமை." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.