மக்கள் தொகை கணக்கெடுப்பு: Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா? - மத்திய அரசின் பதில் என்ன?
மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நிலையான லிவ் இன் உறவில் இருக்கும் தம்பதிகளை திருமணமான தம்பதிகளாகக் கணக்கெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய-விவரப் பதிவேற்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கேள்விக்கு அளித்துள்ள விளக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"சுய-விவரப் பதிவேற்றத்தின் போதோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ, ஒன்றாக வசிக்கும் (live-in relationship) ஒரு ஜோடியை திருமணமான தம்பதியாகக் கருதலாமா?" என்ற கேள்விக்கு, அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், அந்த ஜோடி தங்கள் உறவை ஒரு நிலையான பிணைப்பாகக் கருதினால், அவர்கள் திருமணமான தம்பதிகளாகவே நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தம்பதிகள் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாகத் தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்படுவார்கள். மக்கள் தாங்களாகவே இணையதளம் வழியாகவோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ இந்தத் தகவலைப் பதிவு செய்யலாம்.
இந்த விவகாரத்தில் தற்போதுதான் முதல்முறையாகப் மத்திய அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுவதால் இந்தத் தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.
இருப்பினும், கடந்த கால கணக்கெடுப்புகளிலும் கூட, ஒன்றாக வாழும் திருமணதிற்கு அப்பாற்பட்ட ஜோடிகள் தங்களை "திருமணமானவர்கள்" என்று கணக்கெடுப்பாளரிடம் தெரிவித்தால், அவ்வாறே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுட்டனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல், வீட்டு வசதிகள் குறித்து கேட்கப்பட்டுள்ள கட்டத்தில் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளில், ஒரு வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகும். இந்தக் கணக்கெடுப்புப் பணி 45 நாட்கள் நடக்க இருக்கிறது.
முதல் கட்டமான வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் அறிவிப்பின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும்.
45 நாட்கள் நடக்கும் இக்கணக்கெடுப்பின் முதல் 15 நாட்கள் சுய விபர பதிவேற்றத்திற்காகவும், அதைத்தொடர்ந்து வரும் 30 நாட்களில் கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்து விபரங்களைச் சேகரிப்பதாகவும் இருக்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பதிலளிப்பவர்கள் தங்கள் பதில்களுக்கு எந்தவிதமான ஆவண ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உண்மையான தகவல்களைத் தெரிவித்தால் போதுமானது.

பதிலளிப்பவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புது டெல்லி மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி சுய விபரப் பதிவேற்றம் தொடங்குகிறது. இதில் ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.
இந்தச் சுய-விவரப் பதிவேற்ற வசதி, ஆங்கிலம் மற்றும் 15 இந்திய மொழிகளில் இருக்கும். குடும்பத் தலைவர் சுயவிபர தகவல்களைப் பதிவேற்றம் செய்யப்படலாம்.
குடும்பத் தலைவர் ஆண் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர ஒடிபி அடிப்படையிலான மொபைல் சரிபார்ப்பை முடித்த பிறகு, குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பான குடும்ப உறுப்பினர் எவரும் இதனைச் செய்யலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


