தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

பாலபாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரது மூத்த மகனான கனகராஜ் மட்டும் படர்ந்தபுளியிலுள்ள தாத்தா பாண்டி, பாட்டி மாடத்தி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்த கனகராஜ், தொடக்கத்தில் திருவள்ளூரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

எட்டயபுரம் காவல் நிலையம்

அப்போது, மதுபோதைக்கு அடிமையாகி தினமும் தகராறு செய்து வந்ததால், திருந்தி வாழட்டும் என்ற நினைப்பில், கனகராஜை இங்கு அனுப்பி வைத்துள்ளனராம். இங்கும் கஞ்சா போதைக்கு அடிமையான கனகராஜ், அடிக்கடி பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளாராம்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி பைக்கைச் சரி செய்ய வேண்டுமெனக் கூறி பாட்டியிடமிருந்து தங்கக்கம்மல், மோதிரத்தைப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாடத்தி அம்மாள், மகன் பாலச்சந்திரனுக்கு தகவல் கூறியுள்ளார்.

மறுநாள் பாலச்சந்திரனுக்கு போன் செய்த கனகராஜ், ”பைக்கைச் சரி செய்ய பணம் வேண்டும் இல்லையென்றால் பாட்டியைக் கொன்றுவிடுவேன்” என, மிரட்டியுள்ளாராம்.

“நாளை காலை படர்ந்தபுளிக்கு நேரில் வருகிறேன். வந்து பேசிக்கொள்வோம்” எனக் கூறியுள்ளாராம். மறுநாள் காலையில் வந்த தந்தையிடம், மது மற்றும் கஞ்சா போதையில் பணம் கேட்டு சண்டை போட்டதுடன், தந்தையைத் தாக்க முயன்றுள்ளார்.

எட்டயபுரம் காவல் நிலையம்
எட்டயபுரம் காவல் நிலையம்

ஆத்திரத்தில் இரும்புக்கம்பியால் மகனைத் தாக்கியுள்ளார் தந்தை. எனினும், கனகராஜ் மீண்டும் தந்தையைத் தாக்க முயன்றபோது, கிரைண்டர் கல்லைத் தூக்கி கனகராஜின் தலையில் தூக்கி போட்டுள்ளார்.

இதில், காயமடைந்த மகன் கனகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கனகராஜ் மீது எட்டயபுரம், நாலாட்டின்புதூர் காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.