StartUp சாகசம் 58: `திருநெல்வேலியிலிருந்து இப்படி ஒரு நிறுவனமா? - ChatMaxima சாதித்த கதை

இன்றைய எண்ணிம யுகத்தில், வணிகம் வெற்றிபெறுவது என்பது வெறும் தரமான தயாரிப்புகளை விற்பனை செய்வதில் மட்டும் இல்லை, வாடிக்கையாளர் சேவையிலும் இருக்கிறது. வாடிக்கையாளர் சேவை என்பதே வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் நம்மிடம் ஈர்க்கும் ஒரு வழி.

பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறிய நிறுவனங்களால் தர இயலவில்லை என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில், சரியான வாடிக்கையாளர் சேவையை யாரெல்லாம் சிறப்பாகத் தருகிறார்களோ அவர்களைத் தேடியே மக்கள் வருவார்கள். அப்படிக் கொடுக்கும்போது நம் வாடிக்கையாளர்கள் நமக்காக பிறரிடம் வாய்வழிப் பரப்புரை செய்வார்கள். இது நமது பரப்புரைச் செலவைக் குறைக்கும், லாபத்தை அதிகரிக்கும்.

இன்றைய நவீன யுகத்தில் பல வகையான மெசஞ்சர்ஸ் உள்ளன. அவற்றில் எதன் வழியாகக் கேட்டாலும் நம்மால் பதில் அளிக்கக்கூடிய வகையில் நம் வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம்.

வாடிக்கையாளர் சேவை

1. ஒருங்கிணைந்த உரையாடல் (Omnichannel Chat)

வாடிக்கையாளர் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் அல்லது இணையதளம் என எதன் வழியாகக் கேட்டாலும், உடனடி பதில் அளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்கள் மூலம் 24/7 வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்யலாம். இது வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, விற்பனையைத் தூண்டும் உரையாடல் வணிகமாக (Conversational Commerce) மாறியுள்ளது.

2. சமூக வலைதள விற்பனை (Social Commerce)

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவை இப்போது வெறும் விளம்பரத் தளங்கள் அல்ல, அவை நேரடி விற்பனை மையங்கள். பயன்பாட்டை விட்டு வெளியேறாமலே வாடிக்கையாளர் பொருட்களை வாங்கும் Shoppable Posts மற்றும் நேரலை ஷாப்பிங் (Live Shopping) இன்று மிக அவசியம்.

3. டிஜிட்டல் அனுபவம் (Mobile & Web)

வாடிக்கையாளரின் மொபைலே உங்கள் கடையின் கட்டுப்பாட்டு அறை. வேகமான இணையதளம், பிரத்யேக மொபைல் பயன்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் பொருட்களை வாங்க மறந்தால் நினைவூட்டும் புஷ் நோட்டிபிகேஷன்ஸ் ஆகியவை விற்பனையைப் பல மடங்கு உயர்த்தும்.

இவை அனைத்தையும் தமிழ்நாட்டின் திருநெல்வேலியிலிருந்து இயங்கும் ஒரு நிறுவனம் முன்னோடியாகச் செயல்படுத்தி, சாட்மேக்சிமா எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வாரம் ஸ்டார்ட்அப் சாகசம் தொடரில் சாட்மேக்சிமா நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை அவர்களின் சாகசக் கதையைக் கேட்போம்.

``ChatMaxima உருவானதன் பின்னணி என்ன? இதை உருவாக்க வேண்டும் என்ற அந்தப் பொறி எந்தத் தருணத்தில் தோன்றியது?"

``2009-ல் தொழில்முனைவில் அடியெடுத்துவைத்ததிலிருந்து இது 17-வது ஆண்டு. ChatMaxima என்னுடைய மூன்றாவது ஸ்டார்ட்அப் முயற்சி. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாலபாடம், Lean Team மூலமும் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதுதான். முதலீட்டாளர்களை எதிர்பார்க்காமல் சுயமாக (Bootstrapped) வளர்ந்த எனது முந்தைய இரண்டு நிறுவனங்களிலும் இதை மெய்ப்பித்துக் காட்டினோம்.

விற்பனை, தயாரிப்பு என எல்லாத் துறைகளிலும் லீன் மாடலை வெற்றிகரமாகச் செயல்படுத்திய எங்களை, ஒரே ஒரு துறை மட்டும் திணறடித்தது — அது வாடிக்கையாளர் சேவை. நிறுவனம் வளர வளர, வாடிக்கையாளர் சேவை என்பது பெரும் சவாலாக மாறியது. இது வெறும் ஆட்களைப் பணியமர்த்துவது சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. ஒரு சர்வதேசத் தயாரிப்பை உருவாக்கும்போது, வெவ்வேறு கலாச்சார சூழலில், காலநிலைகளில் (Time Zones) வாழும் வாடிக்கையாளர்களைக் கையாள வேண்டியிருக்கும்.

மறுபக்கத்தில், இன்றைய தலைமுறை (Gen Z) மின்னஞ்சல் அனுப்பவோ, போன் செய்து காத்திருக்கவோ விரும்புவதில்லை. அவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்கிறார்கள். இன்னொரு தரப்பினர் வாட்ஸ்அப்பையும் பேஸ்புக்கையுமே விரும்புகிறார்கள். அங்கே செய்தி அனுப்புகிறார்கள். சில நிமிடங்களில் பதில் கிடைக்காவிட்டால், அடுத்த பிராண்டுக்குத் தாவிவிடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனராக நான் அனுபவித்த வலி இது! எத்தனை பேரை வேலைக்கு எடுத்தாலும், 24 மணி நேரமும் பல மொழிகளில் பதிலளிப்பது மனிதர்களால் இயலாத காரியம் என்பதை உணர்ந்த அந்தத் தருணத்தில்தான் ChatMaxima பிறந்தது! நான் மட்டுமே பயன்படுத்தினால் எப்படி என்று யோசிக்காமல், எல்லாருக்கும் கொடுக்கலாமே என்று சேவையாக ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது."

"WhatsApp, Instagram, Telegram எல்லாத்தையும் ஒரே Platform-ல் கொண்டுவர — மிகவும் சவாலான தொழில்நுட்பச் சவால் என்ன?"

``நிச்சயமாக, இது இரண்டு மூன்று இமயமலைகளை ஒரே நேரத்தில் ஏறுவதற்குச் சமமான ஒரு சவால்! முதல் மலை — Omnichannel Integration. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவமான இணைப்பு முறை (API) இருக்கும். இவை அனைத்தையும் ஒரே மொழியில் பேச வைப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகக் கடினம்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது அந்த முதல் மலை ஒரு சிறிய குன்று போலத்தான் தெரிகிறது. காரணம், நாங்கள் இந்த ஆம்னி சேனல் தளத்தைக் கட்டி முடித்து சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாரான வேளையில்தான் அந்தப் பிரம்மாண்டமான Generative AI அலை வீசத் தொடங்கியது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் Sachin: A Billion Dreams ஆவணப்படத்தில் ஒரு அழகான விஷயம் சொல்லப்பட்டிருக்கும். சச்சினின் வளர்ச்சியும் இந்தியாவின் வளர்ச்சியும் எப்படி ஒரே காலகட்டத்தில் இரு இணையான கோடுகளாகப் பயணித்தனவோ, அதேபோல்தான் சாட்மேக்சிமாவின் கதையும்! Generative AI தொழில்நுட்பம் வளர வளர, அதைக் கைபிடித்தே ChatMaximaவும் வளர்ந்தது.

நாங்கள் திட்டமிட்டு ஒரு AI-Native நிறுவனமாக ஆரம்பிக்கவில்லை. ஆனால், காலம் எங்களை அப்படி மாற்றியது. நாங்கள் வளர்ந்த அதே வேகத்தில் AI தொழில்நுட்பமும் வளர்ந்தது. ஏதோ ஒரு பழைய காரில் புது இன்ஜினைப் பொருத்துவது போல் அல்லாமல், வளரும்போதே AI-உடன் இணைந்து, அதற்கேற்பத் தன்னை மறுசீரமைத்துக்கொண்டோம்.

இந்த ஓட்டம் ஒருபோதும் நிற்பதில்லை. Gemini-யோ OpenAI-யோ ஒரு புதிய மாடலை வெளியிட்டால், அடுத்த காலாண்டு வரை காத்திருக்காமல் அதே நாளில் அந்தத் தொழில்நுட்பத்தை எங்கள் தளத்தில் இணைத்து புதுப்பித்துக்கொள்கிறோம். இந்தத் தொடர் ஓட்டம்தான் (Relentlessness) சாட்மேக்சிமாவை ஒரு Living, Breathing AI Product-ஆக மாற்றியிருக்கிறது!"

`ஏற்கனவே பல நிறுவனங்கள் இதில் ஈடுபட்டிருக்கும்போது உங்கள் சிறப்பம்சம் என்ன?

``வெளிப்படையாகச் சொல்லப்போனால், இன்று சந்தையில் இருக்கும் பல நிறுவனங்கள் AI வருவதற்கு முன்பே உருவானவை. அவர்கள் தங்கள் பழைய தளத்தில் AI வசதியை ஒரு கூடுதல் அம்சமாகப் பின்னாளில் சேர்த்தார்கள். ஆனால், நாங்கள் அப்படியல்ல — அடித்தளமே (Ground up) AI-ஆல் ஆனது.

எங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்காட்டும் மிக முக்கியமான விஷயம் — No-Code வசதி. ஒரு வரிக் குறியீடு கூடத் தெரியாதவர்களுக்கும் AI தொழில்நுட்பத்தைக் கொண்டுசேர்த்திருக்கிறோம்.

உதாரணமாக, திருநெல்வேலி, மதுரை அல்லது திருச்சியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் உரிமையாளரை எடுத்துக்கொள்வோம். அவருக்கு தகவல்நுட்பக் குழு கிடையாது. Large Language Models அல்லது Prompt Engineering பற்றிப் படிக்க நேரமும் இல்லை. அவருக்குத் தேவையெல்லாம் தன் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

சாட்மேக்சிமா மூலம், வெறும் 5 நிமிடங்களில் அந்த உரிமையாளர் தனது மொத்த வணிகத்தையும் AI-க்குக் கற்றுக்கொடுக்க முடியும்.

தயாரிப்புகளின் பட்டியல் (Product Catalogue), அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs), வணிகம் செயல்படும் விதம் — இவற்றை அப்லோட் செய்தால் போதும், AI உங்கள் வணிகத்தைப் புரிந்துகொள்ளும். அதை உங்கள் வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தோடு இணைத்துவிட்டால், பிறகு 24 மணி நேரமும் வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு அதுவே பதிலளிக்கும். கூடுதல் பணியாளர்கள் தேவையில்லை, எந்த ஒரு செய்தியையும் தவறவிடப் போவதில்லை!

இது வெறும் வாடிக்கையாளர் சேவையோடு மட்டும் நின்றுவிடுவதில்லை.

திருப்பூர் ஜவுளி வியாபாரிக்கு ஒரு வாடிக்கையாளர் வாட்ஸ்அப்பில் ஆர்டர் கொடுத்தால், சாட்மேக்சிமா தானாகவே அதை ஒரு Google Sheet-ல் பதிவேற்றி, விலைப்பட்டியல் (Invoice) தயாரித்து, வாடிக்கையாளருக்கு அனுப்பிவிடும். 20 நிமிட வேலை சில நொடிகளில் முடிந்துவிடும்.

வீட்டில் செய்யப்பட்ட உணவகம் நடத்தும் ஒரு சுயஉதவிக் குழுவினால் தினமும் காலை வரும் நூற்றுக்கணக்கான மதிய உணவு ஆர்டர்களை ஒருங்கிணைத்து, உறுதிப்படுத்தி, பட்டியலிடுவதை இந்த Generative AI தானாகவே செய்யும்.

இவை எதிர்காலக் கனவுகள் அல்ல — இன்று தமிழ்நாட்டின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் சிறு, குறு தொழிலதிபர்கள் மிக எளிதாகச் செய்யக்கூடிய மாற்றங்கள்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல கோடிகள் செலவழித்துப் பெறும் அதே தொழில்நுட்ப வலிமையை, ஒரு சாதாரணக் கடைக்காரரின் கைக்கும் கொண்டுசேர்த்திருப்பதுதான் சாட்மேக்சிமாவின் மிகப்பெரிய வெற்றி!"

`திருநெல்வேலியில் இருந்து ஒரு தகவல்நுட்ப நிறுவனமா என பலர் யோசித்தாலும், முதல் 100 வாடிக்கையாளர்களைப் பெற்றது எப்படி?

``இன்றைய உலகில் தொழில்நுட்பம்தான் மிகப்பெரிய சமநிலையை (Equalizer) உருவாக்கியிருக்கிறது. தொழில்நுட்பம் உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்றோ, உங்கள் பின்னணி என்ன என்றோ ஒருபோதும் கேட்பதில்லை. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களே இன்று Dark Store மாடலில், கண்ணுக்குத் தெரியாத இடங்களிலிருந்து டிஜிட்டல் மூலம் இயங்கும்போது, திருநெல்வேலியிலிருந்து ஒரு நிறுவனரால் ஏன் சாதிக்க முடியாது?

எங்கள் முதல் 100 வாடிக்கையாளர்கள், எங்களை நம்பிய நண்பர்கள் மற்றும் தொழில்முறை வட்டாரங்கள் மூலமாகவே வந்தார்கள். சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் உதவியது. உண்மையில், வாடிக்கையாளர்களை இணைப்பது பெரிய சவாலாக இருக்கவில்லை — அவர்களைத் தக்கவைப்பதுதான் (Retention) உண்மையான சவால்.

சாட்மேக்சிமா அவர்களின் தொழிலுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற வேண்டும். அதற்காக நான் ஒரு விஷயம் செய்தேன் — அந்த முதல் 100 வாடிக்கையாளர்களையும் நானே நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தேன். அவர்களின் ஒவ்வொரு சிக்கலையும் கேட்டு, அதற்கேற்ப எங்கள் தயாரிப்பை மாற்றியமைத்தேன்.

அந்த முதல் 100 பேர் வெறும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல — அவர்கள் எங்களுடன் இணைந்து இந்தத் தயாரிப்பை உருவாக்கியவர்கள் (Co-builders). அவர்கள் கேட்ட ஒவ்வொரு வசதியும், அவர்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு அதிருப்தியும்தான் இன்று சாட்மேக்சிமாவைச் செதுக்கியிருக்கிறது.

இது ஆரம்பக் காலத்தோடு முடிந்துவிடவில்லை. இன்றும்கூட, எனது நேரத்தில் 50 சதவீதத்தை வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கே செலவிடுகிறேன். கட்டுப்பட்டுவிட்ட அட்டவணைகளோ, அறிக்கைகளோ சொல்லாத பல உண்மைகளை ஒரு வாடிக்கையாளரின் நேரடி உரையாடல் சொல்லிவிடும்.

வாடிக்கையாளருக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிறுவனர்தான் இறுதியில் வெற்றி பெறுவார் — இதை எனது 17 ஆண்டுகால தொழில் அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது!"

``எல்லா AI-உடனும் இணைத்துள்ளோம் என்கிறீர்களே... இதற்கான தொழில்நுட்பச் சவால் அதிகமாக இருந்திருக்கும்போது, தேவையான நிரலாளர்கள் திருநெல்வேலியிலேயே கிடைக்கிறார்களா?"

``இன்று எனது குழு உண்மையான ஒரு Global Team. அமெரிக்கா, இங்கிலாந்து, பெங்களூரு எனப் பல இடங்களிலிருந்தும் பொறியாளர்கள் பங்களிக்கிறார்கள். Remote Work என்பது ஒரு வரப்பிரசாதம்.

இரண்டாவதாக, ஒரு விஷயத்தை நான் இங்கே உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். தொழில்நுட்பத் திறமையைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இங்கே திறமைக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், அவர்களிடம் ஒரு சிறிய இடைவெளி இருக்கிறது — அது உலகளாவிய அனுபவம் (Exposure). சர்வதேசத் தரத்திலான தயாரிப்புகளை உருவாக்குவது எப்படி, உலகளாவிய வாடிக்கையாளர்களின் மனநிலை என்ன, சர்வதேசத் தரம் என்றால் என்ன என்பதில் அவர்களுக்குப் போதிய அனுபவம் தேவைப்படுகிறது. அந்த இடைவெளியை நிச்சயம் சரிசெய்ய முடியும். ஆங்கில மொழி சார்ந்த மனத்தடையும் இருப்பது உண்மை.

இதை முன்னிட்டு தற்காலிகத் தீர்வாக, தற்போது நாங்கள் ஒரு Hybrid மாடலில் இயங்குகிறோம். நெல்லையில் இருக்கும் எனது பிரதானக் குழுவும், உலகெங்கும் பரவியிருக்கும் தொழில்நுட்பக் குழுவும் இணைந்து பணியாற்றுகின்றனர். நெல்லைக் குழுவினருக்கு நான் தொடர்ந்து சவால்களை அளிக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் எதிர்பார்த்ததை விட அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவருகிறார்கள்!

இன்னும் சில ஆண்டுகளில், ஒரு முழுமையான திருநெல்வேலி குழு மூலம் உலகத்தரம் வாய்ந்த ஒரு தயாரிப்பை உருவாக்குவதே எங்களது திட்டம். சரியான வாய்ப்பும் சவாலும் கிடைத்தால், ஒரு மூன்றாம் நிலை நகரத்தில் இருக்கும் இளைஞனால் உலகின் எந்தத் தொழில்நுட்ப ஜாம்பவானுக்கும் ஈடுகொடுக்க முடியும் என்பதற்கான ஒரு மாதிரியாக இருப்போம் என்று நம்புகிறேன்.

`சாட்மேக்சிமாவின் எதிர்காலத் திட்டம் என்ன?

``ஒரு சிறிய உதாரணத்துடன் இதைத் தொடங்குகிறேன். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது வெறும் மெழுகுவர்த்திக்கு மாற்றாகத்தான் இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அது மனித நாகரிகத்தையே மாற

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.