திருச்சி: `கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம்தான்; ஆனால்..! - ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (09-03-2026) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ கழகத்தின் 12-ஆவது மாநில மாநாட்டில் கலந்துகொண்டு ஆற்றிய எழுச்சியுரையின் விவரம் இங்கே!
"எல்லாச் சாலைகளும், திருச்சியை நோக்கி! எல்லாத் திசைகளும், திருச்சியை நோக்கி! எல்லா மக்களும், திருச்சியை நோக்கி! திரும்பும் திசை எல்லாம், கருப்பு சிவப்பு! திரும்பும் திசை எல்லாம், அண்ணாவின் தம்பிகள்! திரும்பும் திசை எல்லாம், கலைஞரின் உடன்பிறப்புகள்! தெற்கே குமரியில் இருந்து வடக்கே கும்மிடிப்பூண்டி வரை, தமிழ்நாடே இந்தச் சிறுகனூரில் திரண்டு, சிறுகனூர் பெருகனூராக ஆகியிருக்கிறது.
எதிரிகளால் வீழ்த்த முடியாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் சேனை இங்கு திரண்டிருக்கிறது. இந்தச் சேனையின் தலைமைத் தொண்டனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அழைப்பை ஏற்று வந்திருக்கும், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய முதல் வணக்கம்!
வரவேற்புரை ஆற்றிய மாநாட்டின் தலைவர், கழக முதன்மைச் செயலாளர் என்னுடைய ஆருயிர் சகோதரர் கே.என். நேரு அவர்களே!
உடல்நிலை காரணமாக இங்கு வர முடியவில்லையென்றாலும், தொலைக்காட்சியில் இந்த மாநாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் கழகப் பொதுச் செயலாளர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களே!
கழக பொருளாளர் அருமைச் சகோதரர் டி.ஆர். பாலு அவர்களே!
துணைப் பொதுச்செயலாளர்கள்:
ஐ. பெரியசாமி அவர்களே,
முனைவர் பொன்முடி அவர்களே,
என்னுடைய அன்புத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களே,
திருச்சி சிவா அவர்களே,
ஆ. இராசா அவர்களே,
அந்தியூர் செல்வராஜ் அவர்களே,
மு.பெ. சாமிநாதன் அவர்களே!
இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட அனைத்து அணிகளின் செயலாளர்களே, பொறுப்பாளர்களே!
தலைமைக் கழக நிர்வாகிகளே!
ஆற்றல்மிக்க மாவட்டக் கழகச் செயலாளர்களே!
சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள் - இந்நாள் உறுப்பினர்களே!
அன்புச் சகோதரர் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களே!
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!
இந்த மாநாட்டிற்காக இரவு பகலாக உழைத்த ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழக நிர்வாகிகளே!
உங்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

கடந்த மூன்று மாதங்களாக நாம் நடத்துவது மாநாடுகள்தான்! தம்பி உதயநிதி அவர்கள் மண்டல வாரியாக நடத்திய, இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள்; என்னுடைய அன்புத் தங்கை கனிமொழி அவர்கள் நடத்திய மகளிரணியின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் மாநாடுகள்; சென்னை - மதுரை - கோவை - திருப்பத்தூர் என மண்டல அளவில் நடத்தப்பட்ட பூத் நிர்வாகிகள் பயிற்சி மாநாடுகள் என்று இலட்சக்கணக்கான நிர்வாகிகளை அழைத்து மாநாடுகள் நடத்தி, தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கினோம்! அதற்கெல்லாம் உச்சமாக இன்று பத்து லட்சம் பேர் பங்கெடுத்திருக்கும் பெரிதினும் பெரிய மாநாடாகத் திருச்சியில் இந்த மாநில மாநாடு நடந்து கொண்டிருக்கிறது!
இங்கு நான் வந்தபோது மாநாட்டின் நுழைவாயிலிலிருந்து, மேடை வரும் வரைக்கும் நீங்கள் எனக்குக் கொடுத்த வரவேற்பு அட... அட... அட... உங்கள் முகத்தில் பார்த்த அந்த மகிழ்ச்சி இருக்கிறதே, என்னுடைய வயதைக் குறைத்திருக்கிறது! அந்த தெம்போடு நிற்கிறேன். கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாளுக்குத் தொலைபேசியில் எனக்கு மற்ற மாநிலத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்து சொன்னபோது, என்னுடைய வயதை நம்ப முடியவில்லை என்று சொன்னார்கள். இந்த மாதிரி என்னை இளமையாக வைத்திருக்கக் காரணமே நீங்கள் தான்! உங்கள் அன்புதான்!
ஆன்மீக நண்பர்கள் சொல்வார்கள், “என்ன தவம் செய்தனை”. அது போன்று, உங்களை எல்லாம் உடன்பிறப்புகளாகப் பெற, நான் என்ன தவம் செய்தேனோ! கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் தலைமைத் தொண்டனாக என்னைத் தேர்ந்தெடுத்தது நீங்கள்தான்! இந்தத் தாய்த்தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்க காரணமும் நீங்கள்தான்! உங்களால்தான் நான் வளர்ந்தேன்! உங்களால்தான் நான் உயர்ந்தேன்! உங்களுக்காகத்தான் நான் வாழ்கிறேன்! இந்தப் பாசப்பிணைப்பு - உடன்பிறப்புகள் என்ற இந்த உயிர்த்துடிப்பு - இதெல்லாம் இன்றைக்கு நேற்று ஏற்பட்ட பந்தமா? திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலம்தொட்டு, 75 ஆண்டுகளாகத் தொடரும் அன்பு இது!

பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், அவர் வழிவந்த நானும் இந்தப் பாச உணர்வைத்தான் உங்களிடம் பார்க்கிறோம். கழக வரலாற்றில் எத்தனையோ திருப்புமுனைகளுக்கு அடித்தளமிட்ட, தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் இந்த மாநில மாநாட்டை நடத்துகிறோம்!
இந்த மாநாடு எதற்கு என்று நிறைய பேர் கேட்கிறார்கள்! ஒரு கிரிக்கெட்டில், முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம்தான்... அதேசமயம், இறுதி ஓவர்களில் அடித்து ஆடி, கடைசி பந்தில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து ஜெயிப்பதுதான் ஒரு கிராண்ட் ஃபினிஷிங்காக இருக்கும்! அப்படிப்பட்ட வெற்றியை, 2026-இல் நாம் பெறுவதற்குதான் இந்த மாநாடு!
அதற்காகத்தான், இந்த மாபெரும் மாநில மாநாட்டை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் ஆருயிர் சகோதரர் திருச்சியின் தீரர் கே.என்.நேரு அவர்கள்! முதலில் தலைவராக, அவருக்கு என்னுடைய சார்பிலும், மேடையில் இருக்கும் தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் சார்பிலும், ஏன், எதிரில் இருக்கும் உங்கள் அனைவரின் சார்பிலும், நம்முடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
நம்முடைய நேருவிடம் மாநாடு என்று சொல்லிவிட்டாலே போதும்! அவருக்குள் ஒரு புது எனர்ஜி வந்துவிடும். நாம் நினைப்பதை விட, எப்போதும் பிரம்மாண்டமாக நடத்துவதுதான் நேருவின் ஸ்டைல்!
அதனால்தான் நான் எப்போதும் சொல்வது... மாநாடு என்றால் நேரு! நேரு என்றால் மாநாடு! இப்போது கூட பாருங்கள்… 200 ஏக்கர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, 200 இடங்களை வெல்ல வேண்டும் என்று குறிப்பால் தொண்டர்களுக்குச் சொல்லிவிட்டார்! நமக்கான இடத்தைத் தயார் செய்து கொடுத்துவிட்டார். இனிமேல் தொடர்ந்து நாம் அடித்து ஆட வேண்டும். இந்த மாபெரும் மாநாட்டிற்காக அயராது உழைத்த அவருக்கும், அவருக்குத் துணை நின்ற ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும், என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
இன்றைக்கு நாம் முழங்கும், “ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்”... இது ஏதோ, தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் அல்ல இது! நம்மை எல்லாம் உருவாக்கிய, திராவிட முன்னேற்றக் கழகம் தொடரட்டும் என்பதுதான் இதன் உண்மையான பொருள்!

திருச்சியை மாநாட்டிற்காக நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம்? இது தமிழ்நாட்டின் மையப் பகுதி மட்டுமல்ல; இதுதான் கழகத்தின் மாநாட்டுப் பகுதி! இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருப்பது, பன்னிரண்டாவது மாநில மாநாடு! இந்த பன்னிரண்டு மாநில மாநாடுகளில், ஏழு மாநாடுகள் திருச்சியில்தான் நடந்திருக்கிறது! 1956-இல் இரண்டாவது மாநில மாநாடு; 1990-இல் ஆறாவது மாநில மாநாடு! 1996-இல் எட்டாவது மாநில மாநாடு! 2006-இல் ஒன்பதாவது மாநில மாநாடு! 2014-இல் பத்தாவது மாநில மாநாடு! 2021-இல் பதினோராவது மாநில மாநாடு; இதோ இப்போது பன்னிரண்டாவது மாநில மாநாடு!
ஈரோடு தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மாளிகை கட்டி வாழ்ந்தது, இதே திருச்சியில்தான்! தனித்தனி இயக்கம் நடத்தியபோதும் கொள்கையால் ஒருபோதும் பிரியாத தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் வெவ்வேறு வழக்குகளில் ஒரே சிறையில் இருந்தது, இதே திருச்சியில்தான்! இரயில்வே சந்திப்பின் ஒரு முனையில் தந்தை பெரியாரும், மறுமுனையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை நடத்தியதும், இதே திருச்சியில்தான்! கல்லக்குடி போராட்டத்தில் கைதான தலைவர் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டதும் இதே திருச்சியில்தான்! அப்போது, 1953-இல், கைக்குழந்தையாக இருந்த என்னை என்னுடைய அன்னையார் தயாளு அம்மாள் கொண்டு வந்து தலைவர் கலைஞரிடம் காட்டியதும், இதே திருச்சி சிறையில்தான்.
இதுமட்டுமா, தலைவர் கலைஞரை முதன்முதலில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய குளித்தலை தொகுதி இருந்ததும், இதே திருச்சியில்தான்! அடுத்து பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு ஐம்பெரும் முழக்கங்களைத் தந்ததும், இதே திருச்சியில்தான்! அதனால்தான் சொல்கிறேன்... திருச்சி என்றாலே, திருப்பம்! திருச்சி என்றாலே, எழுச்சி! திருச்சி என்றாலே, உணர்ச்சி! திருச்சி என்றாலே, மகத்தான வெற்றி! அப்படிப்பட்ட திருச்சியில் இன்றைக்கு ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத்தான் நாம் கூடியிருக்கிறோம்.
1956-இல் இதே திருச்சி மாநாட்டில்தான், இலட்சக்கணக்கான தொண்டர்கள் வாக்களிக்கக் கழகம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை, பேரறிஞர் அண்ணா எடுத்தார். அது நடந்து, 70 ஆண்டுகள் ஆகிவிட்டது! இந்தத் தருணத்தில், தந்தை பெரியாரால் கொள்கை உரம்பெற்று, பேரறிஞர் அண்ணா அவர்களால் பக்குவப்படுத்தப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் வழிநடத்தப்பட்ட நாம்தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்!

இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக நம்முடைய கழகத்தை ஆட்சியில் அமர்த்தினார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா! அவரது வழியில் ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து, உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையில் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்தோம்! இப்போது ஏழாவது முறை மட்டுமல்ல, இனி எந்நாளும் கழகம்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சூளுரைக்கத்தான் இங்கு கூடியிருக்கிறோம்! இதுதான் நம்முடைய கடமை! அனைவரின் பெரும் கடமை!
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால், நான் முதலமைச்சர் ஆகவும், சில பேர் அமைச்சர்கள் ஆகவும், பல பேர் எம்.எல்.ஏ ஆகவும், சொல்கிறோமா? இல்லை. நம்முடைய தமிழினத்தைக் காக்கத் தகுதியும் - திறமையும் - உழைப்பும் கொண்ட ஒரே படை நம்முடைய கருப்பு சிவப்புப் படைதான்! நமக்கென்று மாபெரும் வரலாறு இருக்கிறது. நமக்கென்று ஒரு லெகசி இருக்கிறது. தமிழைக் காத்தவர்கள் நாம்! தாய்த்தமிழ்நாட்டிற்குப் பெயர் வைத்தவர்கள் நாம்! நம்முடைய மாநிலத்தை எல்லா நிலையிலும் உயர்த்தியவர்கள் நாம்! இப்போது கூட தமிழ் மண்ணுக்குக் காவல் அரணாக இருப்பவர்கள் நாம்தான்! தமிழ்நாடு, நம்மை நம்பித்தான் இருக்கிறது; நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் இருக்கிறோம்! அதற்காகதான் சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, தொய்வில்லாமல் தொடர வேண்டும்! அதற்காக நாம் உழைக்க வேண்டும். அதற்கேற்ப சூளுரைக்க வேண்டும்.
இந்த நேரத்தில், தந்தை பெரியார் 1971 தேர்தலின்போது சொன்னதை, நினைத்துப் பார்க்கிறேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான், தமிழ்ச்சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படும்” என்றார். இப்போதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்!
இங்கே வந்ததும் என்னுடைய நினைவிற்கு வந்தது., 2021 தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில், இதே இடத்தில் ஏழு இலக்குகளை உறுதிமொழிகளாக நான் அறிவித்தேன். அதில் முதல் இலக்கு - வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு! இரண்டாவது இலக்கு - மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! மூன்றாவது இலக்கு - குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! நான்காவது இலக்கு - அனைவருக்கும் உயர்தரக் கல்வி – உயர்ந்த மருத்துவம்! ஐந்தாவது இலக்கு - எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! ஆறாவது இலக்கு - உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! ஏழாவது இலக்கு - அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு!
நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறேன்., இந்த ஏழு இலக்குகளையும் நம்முடைய ஐந்தாண்டு ஆட்சியின் திட்டங்களால் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்! அதனால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! இதையெல்லாம், நம்முடைய எதிரிகளே, இன்றைக்கு மனதிற்குள் ஒப்புக்கொள்வார்கள். யாராலும் மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை இது! தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுகூட, “நம்பர் ஒன் மாநிலம் - தமிழ்நாடு’ என்று சொல்கிறார்கள். உலக பத்திரிகைகளே, ‘சூப்பர்ஸ்டார் ஸ்டேட் தமிழ்நாடு’ என்று பாராட்டுகிறார்கள். அந்த அளவிற்கு நாம் கெத்தாக முன்னேறி இருக்கிறோம்!

கடந்த ஐந்து ஆண்டுகளில், நாம் செய்திருக்கும் சாதனைகளை நினைத்துப் பாருங்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை பிரச்சினைகளைத் தகர்த்து நாம் முன்னேறி இருக்கிறோம்! மூன்று நாட்களுக்கு முன்பு கூட, சென்னையில், 2030-க்கான 14 உறுதிமொழிகளை, “ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்” என்று நான் அறிவித&
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


