தூத்துக்குடி: `எவ்வளவு சொல்லியும் கேட்கல - திருமணம் மீறிய உறவால் அக்காவை கொன்ற தம்பி
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரும், ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இதனிடையே கருத்துவேறுபாடு காரணமாக கணவ ந் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுமித்ரா, புளியங்குளத்திலுள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு சுமார் 11 மணியளவில் சுமித்ராவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளர்கள் சென்று பார்த்தபோது சுமித்ரா ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை யாரோ வீடு புகுந்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்தது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், சுமித்ராவின் உடன்பிறந்த தம்பி மற்றும் மற்றொருவர் கூட்டாக இந்த கொலையை செய்துள்ளது தெரிய வந்தது. பின்னர், சுமித்ராவின் தம்பி முத்துராஜாவை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள வசந்தை போலீஸார் தேடி வருகின்றனர். முத்துராஜாவிடம் நடத்திய விசாரணையில், “எனது அக்கா அவரது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக சிலர் என்னிடம் கூறினார்கள்.

இதனால் அவரை கண்டித்தேன். பலமுறை கூறியும் தகாத உறவை அவர் கைவிடவில்லை. புளியங்குளத்திலிருந்து செய்துங்கநல்லூருக்கு வந்த போதிலும், அவர் வீட்டிற்கு சிலர் வந்து செல்வதாக எனக்கு தகவல் வந்தது. அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். என் நண்பர் வசந்த்தை அழைத்துக்கொண்டு அக்கா வீட்டிற்கு சென்றேன். வசந்த் வீட்டின் வெளியே காவலுக்கு நின்றான். வீட்டிற்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த அக்காவை எழுப்பி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


