Doctor Vikatan: கசப்பான வெள்ளரிக்காய்... பாம்பு ஏறியதுதான் காரணமா... அதைச் சாப்பிடலாமா?

Doctor Vikatan: வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் மூலிகைமணி அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி

வெள்ளரிக்காய் கசப்பாக இருந்தால், அது பாம்பு தீண்டிய காய் என்று கிராமங்களில் இன்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையானதல்ல.

வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மைக்கு உண்மையான அறிவியல் காரணம் என்னவென்றால், அதிகப்படியான வெயில் அல்லது தண்ணீர் இல்லாத வறட்சியான சூழலில் வளரும் வெள்ளரிக்காய்களில் குகுர்பிடேசின் (Cucurbitacin) எனும் சத்து அதிகரிப்பதுதான். கசப்பான வெள்ளரிக்காயைச் சாப்பிடுவதால் ஒன்றும் பிரச்னை இல்லை என்று சிலர் அதைச் சாப்பிடுவதுண்டு. ஆனால், கசப்பான வெள்ளரிக்காய், பலருக்கு வயிறு தொடர்பான உபாதைகளை (Stomach upset) ஏற்படுத்தக்கூடும். வயிற்று வலி, வாந்தி, ஏப்பம், குமட்டல் போன்ற தொந்தரவுகள் உண்டாகலாம். சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து, இரண்டு, மூன்று நாள்களுக்கு நீடிக்கலாம், சில சமயம் வாந்தியில் ரத்தம் வரும் அளவிற்கு (Blood vomiting) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த குகுர்பிடேசின் சத்து இருக்க வாய்ப்புள்ளது.

கசப்பான  வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த குகுர்பிடேசின் சத்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய காய்கறிகளைச் சமைப்பதற்கு முன், அவற்றின் மேல் தோலை நீக்கிவிட்டு, ஒரு சிறிய துண்டைச் சுவைத்துப் பார்த்துவிட்டு, கசப்புத்தன்மை இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு பயன்படுத்துவது சிறந்தது. கசப்பாக இருந்தால் கண்டிப்பாகச் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.