இஸ்ரேல்: ``மோடி ஹக் மிகவும் சிறப்பு வாய்ந்தது.! - நெகிழ்ந்த நெதன்யாகு

பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை வரவேற்று, இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார். அப்போது, ``இந்தியப் பிரதமர் மோடி எனது நண்பர் மட்டுமல்ல, அவர் எனது சகோதரர். உலகெங்கும் மோடி ஹக் (Modi Hug) என்று அழைக்கப்படும் மோடியின் அணைப்பு வைத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மோடி இஸ்ரேலில் தரை இறங்கியபோது அந்த அன்பான அரவணைப்பை பெற்றேன்.

மோடி - நெதன்யாகு

பல நாட்டுத் தலைவர்கள் நெசெட்டிற்கு வந்திருந்தாலும், மோடியின் இந்த வருகை என்னை ஆழமாக நெகிழ வைத்துள்ளது. அவர் இஸ்ரேலின் சிறந்த நண்பர் மற்றும் இருநாட்டு உறவின் நாயகர். கடந்த முறை மோடி இங்கு வந்திருந்தபோது மத்திய தரைக்கடல் கடற்கரையில் காலணிகளைக் கழற்றிவிட்டு நீரில் நடந்தோம். அதன் பிறகு பல அதிசயங்களைச் செய்துள்ளோம். நமது வர்த்தகத்தை இரண்டு மடங்காகவும், ஒத்துழைப்பை மூன்று மடங்காகவும், பரஸ்பர புரிதலை நான்கு மடங்காகவும் உயர்த்தியுள்ளோம்.

இந்தியா 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் சக்தி. இஸ்ரேல் சிறிய நாடாக இருந்தாலும் செயலில் மாபெரும் சக்தி. இந்த கூட்டணிதான் இரு நாடுகளின் வலிமையையும் பன்மடங்கு பெருக்கும் காரணி. மேலும், உலக அரங்கில் யூதர்களுக்கு எதிரான போக்கு அதிகரித்து வரும் நிலையில், யூதர்களை ஒருபோதும் துன்புறுத்தாமல் அன்புடன் வரவேற்ற ஒரே நாகரிகம் இந்தியா தான் என்பதை இஸ்ரேல் ஒருபோதும் மறக்காது. இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலிமையாக இருக்கின்றன. உண்மையை உரக்கச் சொல்லி இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் ஒரு உலகத் தலைவர் மோடி.

மோடி - நெதன்யாகு
மோடி - நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போர், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான தற்காப்புப் போர். காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இஸ்ரேல் ஒரு பாதுகாப்புச் சுவராக இருப்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளதால்தான் ஆதரவளிக்கிறது. அக்டோபர் 7 அன்று நடந்த படுகொலைகள், தீய சக்திகளின் அச்சை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. அந்த சக்திகளை இஸ்ரேல் முறியடித்து வருகிறது. தீவிரவாத இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிராக மிதவாதம், முன்னேற்றம், மனித கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையை நம்பும் நாடுகளுடன் இணைந்து ஒரு இரும்பு கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.