Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..! - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்
கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தத் திருமணத்தைப் பதிவு செய்ய, செம்புக்காவு துணைப் பதிவாளர் நேரில் சென்றிருந்தார்.
நீண்டகால நட்பிற்குப் பிறகு இல்லற வாழ்வில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினர், மதச் சடங்குகளைத் தவிர்த்து இந்திய அரசியலமைப்பின் சாட்சியாகக் கொண்டு மோதிரம் மாற்றித் தங்கள் திருமணத்தை உறுதி செய்தனர்.
View this post on InstagramA post shared by Berry Garden (@berrygardenweddings)
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய வேடன், ``அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு, எங்கள் எதிர்காலக் குழந்தைகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்," எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ‘கூதந்த்ரம்’ பாடலுக்காகக் கேரள மாநில அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வென்றிருந்தார் வேடன். இந்த விருதைப் பெற திருவனந்தபுரம் சென்றபோதும், நவமி அவருடனே இருந்தார். 2025- ஆண்டு வேடன் எழுதிப் பாடியிருந்த மௌனலோவா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே, இந்தப் பாடலை நவமிக்காகவே எழுதினேன் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. இந்தத் தம்பதியினருக்குச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


