முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை வாசிக்க, ஆமோதித்த அழகிரி; கலைஞர் குடும்பத்தில் களைகட்டிய விசேஷம்!
பிப்ரவரி 22 சென்னையில் நடந்த முதல்வர் வீட்டு விசேஷத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க. அழகிரியும் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்ததில், கோபாலபுரம் உறவுகள் அனைவருடைய கண்கள் பனித்து இதயங்கள் இனித்த சம்பவம் அரங்கேறியதாகச் சொல்கிறார்கள்.
முதல்வரின் அத்தை மகன் அமிர்தத்தின் மகள் கலைச்செல்வியின் மகளான இலக்கியாவுக்கு கிரிதரா என்பவருடன் பிப்ரவரி 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
’தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் சேர்க்கிறார்கள்’ என வீடியோ போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமாரை நினைவிருக்கிறதா, அவருடைய மகள்தான் இலக்கியா.
அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கே கூட அனுமதி இல்லை எனச் சொல்லிவிட்டார்களாம். முழுக்க கோபாலபுர குடும்பத்தினரின் நிகழ்ச்சியாக இருக்கட்டுமென நினைத்தார்களாம்.
முதல்வர் மனைவியுடன் சரியான நேரத்துக்கு வர, அவருக்கு முன்பே அண்ணன் அழகிரியும் மனைவியுடன் வந்து காத்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் மறைந்த மு.க.முத்துவின் மகன் அறிவுநிதியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டபோது அண்ணன், தம்பி இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை என ஒரு சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.
மதுரையில் அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் சேர்ந்த விஷயத்தில், அண்ணன் மீது வருத்தத்தில் இருக்கிறார் முதல்வர் எனப் பேச்சுகளும் கிளம்பிய பின்னணியில் நடந்தது இந்த நிகழ்ச்சி.
தம்பி வந்ததும் முகம் மலர வரவேற்ற அழகிரி அருகே இருந்த சேரைக் காட்ட, அங்கேயே அமர்ந்து விட்டார் முதல்வர்.

இருவரும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் கோபாலபுரத்து உறவுகள். மாறன் சகோதரர்களில் தயாநிதி மனைவியுடன் வந்திருந்தார். கலாநிதி சார்பில் காவேரி மட்டும் கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
தொடர்ந்து நிச்சயதார்த்த உறுதிமொழிப் பத்திரத்தை முதல்வரே வாசிக்க, அருகே அதை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தாராம் அழகிரி.
வரும் ஆகஸ்டில் திருமணம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

