Sarvam Maya:``உங்களின் இந்த அன்பான செயலுக்கு - சூர்யா ஜோதிகாவின் அன்பளிப்பு; நெகிழ்ந்த நிவின் பாலி!
பேய் படமென்றாலே அச்சமூட்டும் ஜம்ப் ஸ்கார், பழிவாங்கல் கதை, க்ளைமாக்ஸில் தெய்வ சக்தி உதவியுடன் தீய சக்தியை ஒழிப்பது என்பது போன்ற பார்முலா வரையறைக்குள்தான் கதை நகரும். ஆனால், இவை அத்தனையையும் தவிர்த்து புன்முறுவலோடு ரசிக்க வைக்கும் ஃபீல் குட் பேய்ப்படமாக உருவானதுதான் ‘சர்வம் மாயா’.
ஃபகத் ஃபாசிலின் ‘பாச்சுவும் அத்புத விளக்கும்’ படத்தை இயக்கிய அகில் சத்யன் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இவர் மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநரான சத்யன் அந்திகாடின் மகன். இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருந்தார்.
View this post on InstagramA post shared by Nivin Pauly (@nivinpaulyactor)
ஒரு காலத்தில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த நிவின் பாலி, தொடர் சறுக்கல்களுக்குப் பிறகு தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் திரைப்படம் இது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரியா ஷிபு படத்தின் மற்றொரு பலம்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், சரண் வேலாயுதத்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரும் பக்கத்துணையாக இருந்தன. மல்லுவுட்டில் பெரும் வசூலை அள்ளிய சர்வம் மாயா தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் - நடிகை ஜோதிகாவும் நடிகர் நிவின் பாலிக்கு பரிசுகளையும், வாழ்த்துகளையும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் வாழ்த்தில், ``அன்புள்ள நிவின், சர்வமயா படத்தின் வெற்றிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது. மிக நேர்த்தியாகவும், இயல்பாகவும், பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் வகையிலும் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் அளிக்கும் அன்பைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதேபோல் இன்னும் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களிலும், மைல்கற்களையும் நீங்கள் எட்ட வாழ்த்துகிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தனர்.
சூர்யா - ஜோதிகா தம்பதி அனுப்பிய பரிசை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிவின் பாலி "உங்கள் இருவரின் இந்த அன்பான செயலுக்கு மிக்க நன்றி சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடம்..." என நெகிழ்ந்திருக்கிறார். இதற்கு முன்பு, சூர்யா - ஜோதிகா தம்பதி இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரமான ரியா ஷிபுவுக்கும் பரிசுகளை அனுப்பி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


