1980 டு 2026: ரஜினியின் அதே குணம், கமலுடன் கைகோக்கும் அதே பலம்!

``கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.

இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு குணம்: மற்ற நடிகர்களைப் பற்றியோ நடிகைகளைப் பற்றியோ அநாவசியமாக `கமென்ட் அடிக்க மாட்டார். ஏன், வாயையே திறக்க மாட்டார். ஒரு முறை பில்லா ஷூட்டிங்கின் போது இவரிடம் மற்ற நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வேண்டுமென்றே மெதுவாகப் பேசிப் பார்த்தேன். ஊம்! மூச்..! என் பேச்சை லாகவமாக இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதால் விட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம் சிரித்துக் கொண்டே வேறு எதைப் பற்றியோ எனக்கு சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருந்தார்.

rajini kamal

சில நடிகர்கள் நடிக்க செட்டுக்குள் வந்துவிட்டால் பேசுவதற்கு அல்லது பக்கத்து செட்டுக்கு என்று வெளியே போய் விடுவார்கள். ஆனால் ரஜினி அப்படியல்ல!

"நீங்கள் போகலாம்" என்று டைரக்டர் சொன்ன பிறகுதான் நகருகிறார்.

நாம் முன்பு எப்படி இருந்தோம். இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று பக்காவாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

எந்த முடிவு எடுப்பதானாலும் நிதானமாக - நன்கு யோசித்துத் தான் முடிவெடுப்பார்... கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கத் தன் சொந்தக் காரியங்களைச் செய்யமாட்டார்."

விகடன் 7.12.1980 இதழில் நிருபர் பாலா என்பவர் ரஜினி குறித்து இதை எழுதியிருக்கிறார்.

அன்று அவர் எழுதிய வரிகள், 45 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அப்படியே பொருந்துவதுதான் சூப்பர் ஸ்டார் பிம்பத்தின் ரகசியம். அன்று பில்லா ரஜினியாக இருந்தவர், இன்று வேட்டையன் தாண்டி கூலி வரை வந்துவிட்டாலும், சில குணங்கள் மாறவே இல்லை.

அன்று செட்டில் வம்பு பேச மறுத்த அதே ரஜினிதான் இன்றும். சமகாலப் போட்டியாளராகக் கருதப்படும் கமல்ஹாசனைப் பற்றி ஒருபோதும் எதிர்மறையாகப் பேசியதில்லை. மாறாக, ஒவ்வொரு மேடையிலும் "எனது அருமை நண்பர் கமல்" என்றே தொடங்குவார்.

rajini kamal
ரஜினி - கமல்

அன்று இருந்த அதே லாகவம், இன்றும் அரசியல் அல்லது சினிமா சர்ச்சைகளின்போது ரஜினியிடம் வெளிப்படுகிறது. எதை உள்வாங்க வேண்டும், எதை அப்படியே விடவேண்டும் என்பதில் அவர் இன்னும் பக்காவாகவே இருக்கிறார்.

"நீங்கள் போகலாம்" என்று இயக்குநர் சொல்லும் வரை காத்திருக்கும் அந்த ஒழுக்கம்தான், இன்று லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்கள் வரை ரஜினியை வியந்து பாராட்ட வைக்கிறது. கமல் ஒரு சகலகலா வல்லவர் என்பதால் படத்தின் ஒவ்வொரு துறையிலும் தன் பங்களிப்பை வழங்குவார். ஆனால் ரஜினி, தன்னை ஒரு இயக்குநரின் நடிகராக (Directors Actor) இன்றும் நிலைநிறுத்திக்கொள்கிறார்.

எப்போது படம் பண்ண வேண்டும், யாரிடம் பண்ண வேண்டும் என்பதில் இன்றும் அவர் காட்டும் நிதானமே, நான்கு தலைமுறைகளைக் கடந்தும் அவரை முதலிடத்தில் வைத்திருக்கிறது.

1980-களில் ரஜினி - கமல் இருவரும் தனித்தனிப் பாதையில் பயணிக்க முடிவெடுத்தபோது இருந்த அதே தெளிவு, இன்று மீண்டும் இணைய முடிவெடுக்கும் போதும் இருக்கிறது. அன்று மற்ற நடிகர்களைப் பற்றிப் பேசாத அதே பண்புதான், இன்று கமல் தயாரிப்பிலோ அல்லது கமல் Full-length ரோலில் வரும் படத்திலோ ரஜினி தயக்கமின்றி நடிக்கக் காரணமாக இருக்கிறது.

rajini kamal
rajini kamal

கமல் தொழில்நுட்ப ரீதியாகப் படத்தைச் செதுக்கினால், ரஜினி அந்தப் படத்திற்குத் தேவையான மாஸ் மற்றும் நிதானமான நடிப்பை வழங்கி சமன் செய்வார்.

தன் பலம் என்ன, தன் நண்பனின் பலம் என்ன என்பதை உணர்ந்த இரண்டு மேதைகள் இணைவது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய அப்டேட்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.