நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்
நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.
இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் அந்தக் காரைத் திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் இறந்து கிடந்தனர். இறந்து கிடந்த வாலிபர் கையில் துப்பாக்கி இருந்தது. இறந்து கிடந்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருந்தார்.
இதே போன்று அந்த வாலிபரும் துப்பாக்கியால் சுட்டு இறந்திருந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் சுமித் (32) மற்றும் ரேகா (26) என்று தெரிய வந்தது. ரேகா நொய்டாவில் வசித்து வந்தார்.
ஆனால் சுமித் டெல்லியில் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் நேற்று முதல் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். அவர்களது உடல் கிடந்த கார் பதிவு எண் மூலம் அவர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.
சுமித் தனது காதலியை காதலர் தினத்தில் சந்திப்பதற்காகத் தனது காரில் டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு வந்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சுமித் தனது காதலியைச் சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
எனக்கு துரோகம் செய்துவிட்டாள்
சுமித் மொபைல் போனைச் சோதித்துப் பார்த்தபோது, அதில் தற்கொலைக்கான காரணத்தை சுமித் குறிப்பிட்டு இருந்தார். சுமித்தின் போனில் ஒரு வாட்ஸ்அப் செய்தி காணப்பட்டது.
அந்த செய்தியில், "நானும், சுமித்தும் இறக்கப் போகிறோம். ரேகாதான் இதற்குப் பொறுப்பு. ஏனென்றால் அவள் என்னுடன் 15 ஆண்டுகள் வாழ்ந்து என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் இப்போது அவள் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.
அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று சுமித் மேலும் கூறினார்.
இருவருமே தலையில் சுட்டு இறந்திருந்தனர். அவர்களது உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


