SIR: `நானே நேரடி உதாரணம்; இது என்னுடைய அடையாள அட்டை; ஆனால் அதில் உள்ள படம்.! - உச்ச நீதிமன்றத்தில் மம்தா | Live
`இதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருப்பதை உணர முடிகின்றது - மம்தா
உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி, ``என்னால் நேரடியாகவே உதாரணம் சொல்ல முடியும். உதாரணத்திற்கு என்னுடைய அடையாள அட்டை புகைப்படத்தை காட்டுகிறேன். அது உண்மையில் என்னுடைய புகைப்படமே அல்ல. அது ஒரு செய்தித்தாளிலிருந்து எடுத்து தேர்தல் ஆணையம் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் எஸ் ஐ ஆர் நடைமுறைகளை பயன்படுத்தி வாக்காளர்களை நீக்கும் பணிகளை மட்டும் தான் தேர்தல் ஆணையம் செய்கிறது.
எங்கள் மாநிலத்திலேயே ஒரு பெண்மணி திருமணத்திற்கு பிறகு அவரது மாமியார் வீட்டிற்கு செல்கிறார். அந்த பெண்ணிடம் நீங்கள் புதிதாக வந்திருக்கக்கூடிய வீட்டின் முகவரியை ஏன் இன்னும் உங்கள் பெயருக்கு மாற்றாமல் இருக்கிறீர்கள் போன்ற கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.
படிக்க சென்ற பல மாணவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. வேலைக்காக சென்றவர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த விவகாரத்தில் மேற்கு வங்க மாநிலம் குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அசாம் மாநிலத்தில் இப்படியான ஒரு நடைமுறைகளை செய்யவில்லை?" என மம்தா பானர்ஜி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, ``இரண்டு வருடங்களில் செய்ய வேண்டிய ஒரு பணியை இரண்டு மாதங்களில் செய்து முடிக்க தேர்தல் ஆணையம் முயற்சிப்பதன் மூலம், இதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருப்பதை உணர முடிகின்றது. எங்கள் மாநிலத்திலேயே ஏராளமான பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆதார் அட்டையை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். மாநில அரசு கொடுக்கும் சாதி சான்றிதழ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இருப்பிட சான்றிதழையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மாட்டேன்" என்கிறார்கள் என மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.
அப்போது, ``ஆதார் தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே இந்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருப்பதால் அது குறித்து எதுவும் பேச முடியாது" என தலைமை நீதிபதி பதிலளித்தார்.
மம்தா பானர்ஜி தொடர்ந்த மனு மீது இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
`நான் ஒரு தனி கட்சிக்காக போராடவில்லை. என் ஒட்டுமொத்த மாநில மக்களுக்காக..."
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக வாதங்களை முன்வைத்து வருகிறார்...
``எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. 6 கடிதங்கள் தேர்தல் ஆணையத்துக்கு எழுதினோம். எந்த பதிலும் இல்லை.
பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை .
நான் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். எனக்கு நீங்கள் வழங்கி உள்ள இந்த வாய்ப்புக்கு நன்றி உள்ளவளாக இருக்கிறேன். நாங்கள் கதறிக் கொண்டிருந்தபோது எங்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை என்று நான் நினைத்தேன். நான் ஒரு தனி கட்சிக்காக போராடவில்லை. என் ஒட்டுமொத்த மாநில மக்களுக்காக போராடுவதற்காக தான் இங்கு வந்திருக்கிறேன்" என மம்தா பானர்ஜி உருக்கமான பேச்சு

அப்போது பேசிய தலைமை நீதிபதி, ``மேற்கு வங்க மாநில அரசு தனியாகவே இங்கு ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. உங்கள் வழக்கையும் நாங்கள் விசாரிக்கிறோம். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவி வருகிறார்கள். ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கடந்த ஜனவரி 19ஆம் தேதி எங்களுக்கு விளக்கினர். அதற்கு பின்னர் நாங்களும் சில வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்திருக்கிறோம். நீங்கள் தாக்கல் செய்துள்ள இந்த புதிய மனுவில் நிறைய சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி இருப்பதை பார்க்கிறோம். அதற்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்" என தலைமை நீதிபதி பதில்
``தீர்வாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" - நீதிமன்றம் கேள்வி
``ஆவணங்களில் உள்ள பெயர்கள் பொருந்தவில்லை என ஏராளமானோர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது. எனவே இதை தொடர்பான நோட்டீஸ்கள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால்
அதில் மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் பெயர்களில் சிறிய மாற்றம் இருந்தது எனக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருக்கிறது. உதாரணத்திற்கு Roy என்ற பெயர் தவறுதலாக ஏதாவது ஒரு ஆவணத்தில் ray என அச்சிடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். காரணம் இது போன்ற பல்வேறு பெயர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களது இரண்டாவது பெயராக உள்ளது. அதனால்தான் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டோம்" என மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் வாதம்
அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, ``ஆனால் ஏற்கனவே இது தொடர்பாக நோட்டீஸ்கள் என்பது அனுப்பப்பட்டு விட்ட நிலையில் அவற்றை திரும்ப பெறுவது என்பது நடைமுறையில் சாத்தியமா?" என கேள்வி எழுப்பினர்.

``அதேபோல வெறும் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமல்ல, வாக்காளர்களின் தந்தை அல்லது தாத்தாவின் பெயர்களிலும் கூட இப்படியான சில மாற்றங்கள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தை பொருத்தவரை நிறைய பேருக்கு நடுவில் குறிப்பிடப்படும் பெயர் என்பது இருக்கும். அது சில சமயங்களில் விடுபட்டு போகலாம். இன்னொரு பக்கம் வங்க மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உச்சரிப்பில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. எனவே அதனால் பெயர்களில் பிழைகள் என்பது ஏற்படலாம் இப்படி ஏராளமான உதாரணங்களை சொல்லிக் கொண்டே போக முடியும்" என மம்தா பாலாஜி தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
``சரி நீங்கள் இவ்வளவு பிரச்சினைகளை சொல்கிறீர்கள் ஆனால் இதற்கான தீர்வாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், ``உள்ளூர் பேச்சு வழக்கு முறை உச்சரிப்பில் உள்ள மாற்றங்கள் என்பது இந்தியா முழுவதுமே இருக்கக் கூடிய ஒன்று. இதை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? என தேர்தல் ஆணையத்திடம் தலைமை நீதிபதி கேள்வி.
``எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளின் கீழ் ஒரு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை உச்ச நீதிமன்றமும் முந்தைய விசாரணையில் உத்தரவாக பிறப்பித்து இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததற்கு பிறகு பெயர் வயது மற்றும் பாலினம் ஆகிய விவரங்கள் மட்டும்தான் இருக்கிறது. தவிர என்ன காரணத்திற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட நபர் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை" எனக் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் கூறினார்
அதற்கு பதில் அளித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோய்மாலியா பக்ஷி, ``ஆனால் அந்த தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் எங்களிடம் சொல்லி இருக்கிறார்களே" என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர், ``அப்படியான காரணங்களை மக்களிடம் வெளிப்படையாக தேர்தல் ஆணையம் சொல்லவில்லை" என கூறினார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, ``ஒரு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார் என்றால், அதற்கான காரணத்தை அவர் தெரிந்து கொள்ள உரிமை பெற்றவர் ஆகிறார்" எனக் கூறினார்.
`அடுத்த நான்கு நாட்களுக்குள் இது எப்படி சாத்தியமாகும்?
``எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை முடிக்க இன்னும் நான்கு நாட்கள் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் இதுவரை பதிவு செய்யப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை 32 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 1.36 கோடி பேர் முரண்பாட்டு பட்டியலில் இருக்கிறார்கள். சுமார் 63 லட்சம் நபர்களின் பெயர் சேர்ப்பு அல்லது நீக்குதல் தொடர்பான முடிவு இன்னும் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நான்கு நாட்களுக்குள் இது எப்படி சாத்தியமாகும்?" என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் ஸ்யாம் திவான் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
தொடங்கியது விசாரணை!
எஸ் ஐ ஆர் விவகாரத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் தொடங்கியது.
முன் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ஸ்யாம் திவான், நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி ஆகியோரும் மம்தா பானர்ஜிக்கு அருகில் நிற்கிறார்கள்!
உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..!
மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வரும் நிலையில், மம்தா பானர்ஜியே தனது வழக்கிற்காக ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்
மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சுய பதிவு விவரங்களில்,`நான் சட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். எனவே நீதிமன்றங்களில் வாதாடும் நடைமுறைகள் முழுமையாக தெரியும். உச்ச நீதிமன்றத்தின் மாண்புகள் குறித்த தகவல்களையும் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நீதிமன்றத்தில் நடந்து கொள்வேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மம்தாவின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது" என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


