பட்ஜெட் 2026: 3 கோடி லட்சாதிபதி தீதி-களை உருவாக்கும் இலக்கை அரசு எட்டவுள்ளது! - குடியரசுத் தலைவர் | Live
மாவோயிச பயங்கரவாதத்திற்கு எதிராக... - திரௌபதி முர்மு
மாவோயிச பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆயுதங்களைக் கைவிட்டு வருபவர்களுக்குக் கண்ணியமான மறுவாழ்வு உறுதி செய்யப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தயாரிப்புகள் உலகச் சந்தைகளை எட்டியுள்ளன. மின்னணுப் பொருட்களின் உற்பத்தி கடந்த 11 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்து 11 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் (PLI) கீழ் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
2025-ல் பாதுகாப்பு உற்பத்தி 1.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. பாதுகாப்பு ஏற்றுமதி 23,000 கோடி ரூபாய் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்துர் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாடங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. - திரௌபதி முர்மு
3 கோடி லட்சாதிபதி தீதி-களை உருவாக்கும் இலக்கு - முர்மு

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் 125 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இது விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்குப் புதிய வசதிகளை உருவாக்கும். 3 கோடி பெண்களை லட்சாதிபதி தீதிகளாக (Lakhpati Didis) மாற்றும் இலக்கை அரசு மிக விரைவில் அடையவுள்ளது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னிறுத்தி, அவர்களுக்காகப் பிரத்யேகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. - திரௌபதி முர்மு
பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சாதனை அரசு - திரௌபதி முர்மு

ஸ்ரீ குரு தேஜ் பகதூர், பிர்சா முண்டா, சர்தார் படேல் மற்றும் பூபன் ஹசாரிகா போன்ற சிறந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் தியாக தினங்கள் கொண்டாடப்பட்டன. முன்னோர்களின் பங்களிப்பை நினைவுகூர்வது புதிய தலைமுறைக்கு உத்வேகம் அளிப்பதோடு, வளர்ந்த பாரதம் நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துகிறது. கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 70,200 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணவீக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுக்குள் வைத்திருப்பதில் இந்தியா தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த ஆண்டு வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லாக அமையும். - குடியரசு தலைவர்
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா - முர்மு

இந்தியா 350 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தியுடன் உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் வலிமையால் பால் உற்பத்தியில் முதன்மையாகவும், நீலப் பொருளாதாரத்தின் வளர்ச்சியால் உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராகவும் இந்தியா திகழ்கிறது. செல்போன் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் கட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது புதிய தலைமுறை ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது. வருமான வரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று மாற்றத்தின்படி, 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் பொருளாதார நிம்மதியை வழங்கியுள்ளது. - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
சமூக நீதிக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு - முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு தன் பட்ஜெட் உரையைத் தொடங்கியிருக்கிறார். அவரின் உரையில், ``இந்த அரசு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வழியில் சமூக நீதிக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அனைவருடனும், அனைவருக்கும் வளர்ச்சி (Sabka Saath, Sabka Vikas) என்ற தாரக மந்திரத்துடன் நேர்மையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிர்வாகத்தை அரசு வழங்கி வருகிறது. திட்டமிடப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்கள் மூலம் ஜப்பானிய மூளை அழற்சி போன்ற நோய்கள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சசி தரூர்!

பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்டக் குழுக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து அவர் விளக்கமளித்தபோது, ``கூட்டம் குறித்து ஒரு நாள் முன்னதாகவே தகவல் கிடைத்ததால் பங்கேற்க முடியவில்லை" எனத் தெரிவித்திருந்தார். எனினும், சசிதரூர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
காலை 11 மணிக்கு உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அதன் அடிப்படையில் காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு, அடுத்த மாதம் 13-ம் தேதிவரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதிவரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
