Modi : NDA பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றும் மோடி | Live
"ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா?"- எடப்பாடி பழனிசாமி
"பாரத பிரதமர் இந்த மண்ணில் கால் வைத்ததும் சூர்யன் மறைந்துவிட்டது. இந்த மக்கள் கூட்டமே சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு அறிகுறி. பழனிசாமி , தினகரன் பரஸ்பரம் நற்சொல் பரிமாற்றம். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. பெரும்பான்மையான இடங்களில் இந்தக் கூட்டணி வெல்லும். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நாங்கள் நிதியை பெற்றோம். அதிமுக ஆட்சியில் டெல்லியில் இருந்து பெற்றது ஏராளம்" என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி உரை

பாமக தலைவர் அன்புமணி உரையாற்றி வருகிறார். " இன்னும் சில மாதங்களில் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். ஊழல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். கொடுங்கோல் அரசு, கஞ்சா அரசு தான் திமுக. ஐந்தாண்டுகளில் பல விஷயங்களில் திமுக பூஜ்ஜியமாகத்தான் திமுக இருக்கிறது. ஸ்டாலின் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார்" என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
நாங்கள் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள்"- டிடிவி தினகரன்
"தொடர்ந்து 3 முறை இந்திய பிரதமராக இருந்து நாட்டை உயர்த்தி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. எடப்பாடி பழனிசாமியை முழுமனதோடு ஏற்கிறோம். நாங்கள் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது. "- டிடிவி தினகரன்
நயினார் நாகேந்திரன்

"வெல்லும் கூட்டணி, NDA கூட்டணி. தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார். இங்கே கூடும் கூட்டம் சட்டமன்றத்திலே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மோடி தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் 100 சதவிகிதம் உறுதி" என்று பொதுக்கூட்ட மேடையில்
நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார்.
NDA பொதுக்கூட்ட மேடையில் மோடி
NDA பொதுக்கூட்டம் தொடங்கிவிட்டது. பிரதமர் மோடி மேடையில் அமர்ந்திருக்கிறார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர்.
மதுராந்தகம் வந்த மோடி; தொடங்கிய NDA கூட்டணியின் பொதுக்கூட்டம்

NDA கூட்டணியின் பொதுக்கூட்டம் தொடங்கிவிட்டது. மேடையில் அண்ணாமலை உரையாற்றி வருகிறார். இதனிடையே மதுராந்தகம் வந்தடைந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல். முருகன் போன்றோர் வரவேற்றிருக்கின்றனர்.
மதுராந்தாகம் புறப்பட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, தலைமைச் செயலர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். பிறகு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மதுராந்தாங்கம் புறப்பட்டிருக்கிறார்.
NDA பொதுக்கூட்ட மேடையில் மாம்பழம் சின்னம்; ராமதாஸ் கண்டனம்
NDA கூட்டணியின் பொதுக்கூட்டப் பிரசார மேடையில் பாமகவின் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, "தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தை (மாம்பழம்) மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்வில், இத்தகைய சட்டவிரோதச் செயல்களைச் செய்வது பிரதமரின் பதவிக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் இழைக்கப்படும் அவமரியாதையாகும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?- அண்ணாமலை கேள்வி
தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் நீட் விலக்கு, கீழடி அறிக்கை , எய்ம்ஸ் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
Tamil Nadu counts the betrayals of NDA.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 23, 2026
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள்… https://t.co/tapt7nMS4p

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்?
நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?
உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?
AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்?
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? " என்ற கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே,
— K.Annamalai (@annamalai_k) January 23, 2026
Samagra Shiksha திட்டத்தின் ஒரு… https://t.co/siAlRGZ2bX
கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு


NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர்.
ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், " தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக இன்ச் இன்ச்சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!" என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
"ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது" - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன்.

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று பதிவிட்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது.
மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

