மினிபஸ்ஸை கடலுக்குள் இழுத்துச் சென்ற ராட்சத அலைகள்; 6 பேர் பத்திரமாக மீட்பு... மும்பையில் அதிர்ச்சி!
மும்பை நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் எப்போதும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள கோராய் கடற்கரையில் மினி பஸ் ஒன்றை அதன் டிரைவர் நிறுத்தி இருந்தார். பஸ்சில் பெண்கள் உட்பட 6 பேர் இருந்தனர். அந்நேரம் கடல் அலைகள் சீற்றம் அதிகமாக இருந்தது. வேகமாக வந்த அலை ஒன்று கடற்கரையில் நிறுத்தி இருந்த மினி பஸ் மீது மோதிச்சென்றது. இரண்டாவது அலை வந்து பஸ் மீது மோதியபோது அலையோடு சேர்ந்து பஸ்சும் கடலுக்குள் சென்றது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். பஸ் கடலில் மிதந்து கொண்டிருந்தது. உடனே கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கடலோர பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு மினி பஸ்சில் இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதோடு மினி பஸ்சையும் அங்கிருந்து பத்திரமாக கரைக்கு மீட்டுக்கொண்டு வந்தனர். வாகனத்தை கடற்கரையோரம் நிறுத்திய டிரைவர் மற்றும் மினி பஸ் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டி வாகனங்களை உள்ளே கொண்டு செல்லவேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை அறிவிப்புகளை வைத்திருக்கின்றனர்.
அப்படி இருந்தும் அதிகமானோர் தங்களது கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை கடற்கரையையொட்டி கொண்டு செல்கின்றனர். சமீபத்தில் கூட இதே பகுதியில் கார் ஒன்று கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுவிட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


