கடலூர்: `கிரிம்சன் ஆர்கானிக்’ தொழிற்சாலையில் கசிந்த ரசாயன புகை! -அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்
கடலூர் - சிதம்பரம் சாலையில் இருக்கும் சிப்காட் தொழில் மையத்தில் 50-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததாலும், அரதப் பழசாகிப் போன இயந்திரங்களாலும் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகின்றன. அப்போதெல்லாம் அப்பாவி மக்களும், ஊழியர்களும் உயிரிழக்கவும் செய்கின்றனர். அதன்படி இங்கு செயல்பட்டு வரும் `கிரிம்சன் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற தொழிற்சாலைக்குள் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், ரசாயனப் புகை வெளியேறியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தொழிற்சாலையை ஒட்டியிருக்கும் குடிகாடு கிராமம் முழுவதும் புகைமண்டலமாக மாறியதுடன் அதையடுத்து அப்பகுதியில் இருந்த அந்த மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் இருமல் ஏற்பட்டு, அடுத்தடுத்து மயங்கி விழு ஆரம்பித்தனர். அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி கூச்சலிட்டனர். அதற்கடுத்த சில நிமிடங்களில் அவர்களும் மயங்கி விழுந்தனர். தொடர்ந்து மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதையடுத்து மூக்கைப் பிடித்துக் கொண்டு தொழிற்சாலையை சூழ்ந்த மக்கள், தொழிற்சாலையின் கண்ணாடிக் கதவுகளை அடித்து நொறுக்கியதுடன், கடலூர் – சிதம்பரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவலர்களுடன் அங்கு விரைந்த எஸ்.பி ஜெயக்குமார், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். தொடர்ந்து கோட்டாட்சியர் சுந்தரராஜன், வட்டாட்சியர் மகேஷ், வருவாய்த் துறை மற்றும் மாசுக்கட்டுபாட்டுத் துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த 2021-ல் இந்த தொழிற்சாலையின் பாய்லர் வெடித்ததில் ஒரு பெண் உட்பட நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ச்சியாக விபத்துகளை ஏற்படுத்தி வரும் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

