ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கவுன்சிலரின் கணவன் சுதாகர்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதனால், சுதாகரைச் சுற்றி எப்போதுமே பத்து, பதினைந்து இளைஞர்கள் அடியாட்களைபோல சூழ்ந்திருப்பார்கள். அதில் ஒருவராக இருந்தவர் தான் அவினேஷ் என்ற 28 வயது இளைஞன்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சுதாகருடன் சேர்ந்து அவினேஷ் உட்பட மேலும் சிலர் மது அருந்தியபோது, அவினேஷின் தாய் குறித்து சுதாகர் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், சுதாகர் மீது கோபமடைந்த அவினேஷ் ஏப்ரல் 19-ம் தேதி சுதாகரை வெட்டிக் கொலை செய்ய முயன்றார். இதில் சுதாகருக்கு இடது கை மணிகட்டு துண்டானது. தாக்குதலில் படுகாயமடைந்த சுதாகர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 மாத சிகிச்சைக்குப் பிறகு சுதாகர் வீடு திரும்பினார்.
பழிக்கு பழியாக நடந்த சம்பவம்
கொலை முயற்சி வழக்கில், அவினேஷும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நிபந்தனை ஜாமீன் பெற்று அவரும் வெளியே வந்தார். நிபந்தனையின்படி, தினமும் ரத்தினகிரி காவல் நிலையம் சென்று கையெழுத்துப் போட்டு வந்தார் அவினேஷ்.
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி காலை கையெழுத்துப்போட சென்ற அவினேஷ் காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் அருகிலேயே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திலேயே உடலை கிடத்திவிட்டு, கொலை செய்த கும்பல் தப்பிஓடியது. ரத்தினகிரி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பழிக்குப் பழியாக கொலை நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து, கொலையை நிகழ்த்திய தி.மு.க கவுன்சிலரின் கணவர் சுதாகர் மற்றும் அவரின் ஆட்கள் ரீகன், ஆனந்த், வினீத், சுரேஷ், சஞ்சய், ஜெயபிரசாத் ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
`இமேஜ் போய்டுச்சி, போட்டு தள்ளு - தூண்டிய கவுன்சிலர்
இந்த நிலையில், தி.மு.க கவுன்சிலர் அஸ்வினியையும் போலீஸார் கைது வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.
`கையை இழந்து சும்மா இருக்கியே. உன்னோட இமேஜ் போய்டுச்சி. அவினேஷை சும்மா விடக்கூடாது. போட்டு தள்ளு..’ என்று தனது கணவனை கொலை செய்ய தூண்டியதே கவுன்சிலர் அஸ்வினி தான் எனத் தெரியவந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கான தூண்டுதலால் காரணமாக, கவுன்சிலர் அஸ்வினி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 4 கத்திகளையும் பறிமுதல் செய்த போலீஸார், அதனை விற்பனை செய்த அரக்கோணம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த விஜயன் (65) என்பவரையும் கைது செய்திருக்கின்றனர்.

தடுக்கத் தவறிய இன்ஸ்பெக்டர்
இந்த நிலையில், அரக்கோணம் நகரக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்க குருநாதனையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க். கடந்த ஏப்ரல் மாதம் கவுன்சிலரின் கணவன் வெட்டுப்பட்டபோதே அவினேஷை பழிதீர்க்க கவுன்சிலர் தரப்பு சபதம் எடுத்திருக்கிறது. வெளிப்படையாகவே `அவினேஷ் கொல்லப்படுவான்’ எனக் கூறிவந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அவினேஷ் சிறையிலிருந்து வெளியே வந்த சூழலில், பட்டப்பகலில் அதுவும் காவல் நிலையம் அருகில் வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர். கவுன்சிலர் தரப்பினரின் இந்த கொலை திட்டத்தை தடுக்கத் தவறி, பணியில் அலட்சியமாக செயல்பட்ட காரணத்தினால் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


