``எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை - அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கல்வி உதவித் தொகை
இந்நிகழ்ச்சிக்கு, பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ஓபிஎஸ், எடப்பாடி மத்திய அரசை கண்டிக்கப் போவதில்லை. தேர்தல் வரவுள்ளதால் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். பின் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டபூர்வமாக நமக்கு வரக்கூடிய கல்வி உதவித் தொகை வரவேண்டும். கல்வி உதவித் தொகையை கொடுக்காமல் நிறுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்த அதிகாரமும் இல்லை.
டீக்கடை, பெட்டிக்கடைக்கு லைசன்ஸ்
கிராமத்தில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடை அனைத்திற்கும் லைசன்ஸ் வாங்க வேண்டும் என திமுக அரசு கூறுகிறது என்று எடப்பாடி கூறியது குறித்த கேள்விக்கு,
"திமுக அரசு லைசன்ஸ் வாங்க வேண்டும் என கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை. அதனால் அவருக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை. 1958-க்கு முன்வரை சாதாரண டீக்கடைகளுக்கு லைசன்ஸ் கிடையாது. 1958 க்கு பின்பு இந்த சட்டம் உள்ளது.

அதன் பின்பு 1994-ல் இந்த சட்டம் திருத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்திலும் பஞ்சாயத்து யூனியனில் வசூல் செய்து கொண்டு தான் இருந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு பஞ்சாயத்து யூனியன் சட்டம் பற்றி தெரியவில்லை.
1958-ல் பஞ்சாயத்து யூனியன் சட்டத்தில் டீக்கடை அனுமதியில் ஆபத்து மற்றும் குற்றம் என்று இருந்தது. முன்பு டீக்கடையில் பாய்லர் வைத்திருந்தால் அது வெடித்து இறப்பதற்கான வாய்ப்பு இருந்தது என்பதினால் ஆபத்து மற்றும் குற்றம் என்று வைத்திருந்தனர். நான் அமைச்சர் ஆன பின்பு அபாயம், குற்றம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு வியாபாரம் என மாற்றப்பட்டது.
3,45,000 நபர்கள் 1958-ல் இருந்து லைசன்ஸ் வாங்கி பணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டிற்கு 24 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. அவர் ஆட்சி காலத்திலும் இருந்தது. புதிதாக நாங்கள் எந்த வரியும் போடவில்லை. வியாபார உரிமம் என டீக்கடை ரூ.250 கட்டினால் மூன்று வருடத்திற்கு அதனை வைத்துக் கொள்ளலாம்.

பழைய ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களை, பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு திமுக அரசு கட்டாயப்படுத்துகிறது என்று ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு,
`யாரையும் இந்த அரசு கட்டாயப்படுத்தாது. நம்முடைய முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். மத்திய அரசு கல்விக்கு வரக்கூடிய பணத்தை கொடுக்காமல் அடம் பிடிக்கவில்லை. ஆனால் நமது முதல்வர் தாராளமாக இருக்கிறார். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வூதியம் குறித்து ஆலோசனை பெற்று வழங்கிட தயாராக இருக்கிறார். பிரச்னைகளை அனைவரிடமும் கலந்து பேசி முடிவு எடுக்கின்ற ஒரே முதலமைச்சர் நமது ஸ்டாலின் மட்டுமே என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


