வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.
இதற்கான ஒப்பந்தம் 2014 செப். 30-இல் கையொப்பமானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் சுமாா் ரூ. 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றன.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவ திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், இன்று(புதன்கிழமை) மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
நிசார் சிறப்பம்சங்கள்
நிசார் செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடார் செயற்கைக்கோளாகும். இதன் எடை 2,392 கிலோ. ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோள் பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும். அதாவது, பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களைக்கூட கண்டறிய முடியும்.
இந்தச் செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாள்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும். இதற்காக ‘எல்’ பேண்ட், ‘எஸ்’ பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறை. நிசார் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளா்களும் பெற முடியும்.
இதையும் படிக்க: பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்
The Earth observation satellite Nisar, developed by the Indian Space Research Organisation (ISRO) in collaboration with the US space agency NASA, was launched into space today (July 30) at 5.40 pm.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


