`கயிறுக்கு முன்னால் ஊசலாடும் உயிர் - மன்னிப்பா? மரணமா? - நிமிஷா பிரியாவின் வழக்கில் நடந்தது என்ன?
``எப்படி துருதுருனு திரிஞ்சிட்டு இருந்த புள்ள அது தெரியுமா... ட்ராக்டர் ஓட்டும், வயலுக்கு போயி விவசாய வேலைக்கூட பார்க்கும். படிப்புலயும், எதிர்காலம் பத்தின சிந்தனையும் ரொம்ப அதிக கவனமா இருப்பா. எப்படியாவது முன்னுக்கு வந்துடமாட்டோமானு யோசிச்சிட்டே இருப்பா" இப்படித்தான் நிமிஷா பிரியாவைப் பற்றி அவரின் சொந்த ஊரான பாலக்காட்டின் மக்கள் கூறுகிறார்கள்.
ஆனால் 2017-ம் ஆண்டு ``நிமிஷா பிரியா கொலை செய்துவிட்டார் என வெளியான செய்திகள் அவரின் ஊரை மட்டுமல்ல கேரளாவையே அதிரச்செய்தது.
இதை அவரின் கிராம மக்கள் நம்பவே இல்லை. ``அந்த ஏமன் தம்பி இங்க வந்திருக்கு... நிமிஷா கூடவும், அவங்க புருஷன் கூடவும் நட்பா அன்பாதான் இருந்தாரு... 15 - 20 நாளுக்கு மேல இங்க தானே தங்கியிருந்தார்... அதனால ஏமன்-ல என்ன நடந்ததுனு தெரியாம எங்க புள்ளையை எப்படி குத்தம் சொல்ல முடியும்? என நிமிஷாவுக்காக முதலில் குரல் கொடுத்தவர்கள் அவரின் கிராம மக்கள்தான்.
இந்தியாவின் சராசரி மனிதனின் கனவுகளுடன் வலம் வந்தவர்தான் நிமிஷா பிரியா. கிராமத்தில் பெற்றோருக்கு உதவிக்கொண்டே செவிலியர் பணிக்கு படித்து வந்தார். அப்போது நிமிஷாவின் பெரும் கனவு சொந்தக்காலில் நிற்க வேண்டும் எனபதுதான்.
மிகவும் அமைதியானவர், படிப்பில் கவனமாக இருப்பவர், கடுமையான உழைப்பாளி என்றெல்லாம் அவரைச் சார்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். வீட்டு வேலைகளுக்குச் செல்லும் அம்மா, வறுமையில் வாடும் குடும்பம் என தன் பொறுப்புகளைச் தானே சுமந்தார். வறுமைக்கு எதிரான போருக்காக, தன் கனவின் முதல் முயற்சியாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்கும் 2 மில்லியனுக்கும் அதிகமான மலையாளிகளில் ஒருவராக 2008-ம் ஆண்டு ஏமனுக்கு பயணமானார் நிமிஷா பிரியா. அப்போது அவருக்கு வயது 19.
திருமணம்:
நினைத்தது போலவே நல்ல மருத்துவமனையில் செவிலியராக வேலைக்குச் சேர்ந்த நிமிஷா பிரியா, 2011-ம் ஆண்டும் இந்தியா திரும்பினார். உடனே அவருக்கு வரன் பார்க்கப்பட்டு, டோமி தாமஸ் என்பவருக்கும் நிமிஷா பிரியாவுக்கும் திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு நிமிஷாவும், டோமி தாமஸும் ஏமன் புறப்பட்டார்கள். நிமிஷா செவிலியராக பணியாற்ற, டோமி எலக்ட்ரீசியனாக வேலை செய்தார்.
2012-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதற்குப் பிறகு நிமிஷாவும் தாமஸும் ஏமனில் வாழ்க்கை நடத்த கடுமையாகப் போராடியதாகத் தெரிகிறது. எனவே, பொருளாதாரச் சூழல் சரியாகும்வரை கணவனும் - குழந்தையும் இந்தியாவில் இருக்கட்டும் என முடிவு செய்து, 2014-ம் ஆண்டு இருவரை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார் நிமிஷா பிரியா.
ஏமனில் ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் தலால் அப்து மஹ்தி. இவருக்கு திருமணமாகியிருந்த நிலையில், இவரின் மனைவி கர்பமாக இருந்தார். அவருக்கு நிமிஷா பிரியா பணி செய்யும் மருத்துவமனையில்தான் பிரசவம் நடந்தது. அப்போது நிமிஷா பிரியா அவரின் மனைவியை கவனித்துக்கொண்ட விதத்தில் தலால் அப்து மஹ்திக்கும் நிமிஷா பிரியாவுக்கும் நட்பு மலர்ந்தது.
அந்த நட்பின் அடிப்படையில்தான் தன் மகளின் ஞானஸ்தானத்திற்காக நிமிஷா இந்தியா வந்தபோது, தலால் அப்து மஹ்தியையும் உடன் அழைத்து வந்திருக்கிறார். அப்போதுதான் தன் குடும்பப் பொருளாதார சிக்கலை சரிசெய்வதற்கு ஒரு மருத்துவமனை தொடங்கலாம் என்றும், தன் குடும்ப எதிர்க்காலத்தை ஏமனில் அமைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார்.
உள்நாட்டுப்போரால் மாறிய திசை:
1990-களில் சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது "ஷபாப் அல்முமினீன் என்றக் குழு. இந்தக் குழுவின் தலைவராக இருந்த ஹுசைன் பத்ருத்தின் அல்-ஹூதி, 2004-ம் ஆண்டு ஏமன் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
அதனால், ஏமன் அரசு ஹுசைன் பத்ருத்தின் அல்-ஹூதியைத் தேடி கொலை செய்தது. அதைத் தொடர்ந்து உருவானது உள்நாட்டுப் போர். அரசுக்கும் ஹூதி அமைப்புக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்ததுவந்தது. இதன் விளைவாக 2014-ல் ஹூதிகள் ஏமனின் தலைநகர் சனாவை கைப்பற்றினர்.

அதன் பிறகு ஏமன் தெற்கு - வடக்கு என ஆட்சிப் பகுதிகள் பிரிந்து, இரண்டு ஆட்சிமுறை நடந்து வருகிறது. இதில் ஹூதிகள் ஆட்சி செய்யும் சனா பகுதியில்தான் நிமிஷா பிரியா மருத்துவமனைத் தொடங்க திட்டமிட்டார். அந்த சமயத்தில்தான் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடமிருந்தும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 லட்சம் புதிய மருத்துவமனைக்காக கடன்பெற்றிருக்கிறார்.
உள்நாட்டுப்போர் சூழல் காரணமாக அயல்நாட்டவர் ஏமனில் மருத்துவமனைத் தொடங்குவது சிக்கலானது. அதனால், அவருக்கு உள்நாட்டைச் சேர்ந்த ஒரு பார்ட்னர் தேவைபட்டது. எனவே, நீண்டநாள்களாக நட்புடன் பழகிவந்த தலால் அப்து மஹ்தியிடம், மருத்துவமனைத் திட்டம் குறித்துப் பேசியிருக்கிறார்.
2016-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் அல் அமான் என்ற மருத்துவமனையை தலால் அப்து மஹ்தி கூட்டணியில் நிமிஷா பிரியா தொடங்கினார். அதே வருடம், கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை நிமிஷா தொடங்கிய போதுதான், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமாகிறது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை.
நட்பு முதல் திருமணம் வரை - எது உண்மை?
மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாக செயல்படத் தொடங்கியதும் தலால் அல் மஹ்தியின் செயல்பாடில் மாற்றங்கள் தொடங்கியதாகவும், நிமிஷாவுக்கும் தலால் அப்து மஹ்திக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்ததாகவும் நிமிஷா அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏமன் நீதிமன்றத்தில் நிமிஷா தரப்பு, ``தலால் அப்து மஹ்தி நிமிஷா பிரியாவை திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யான வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மேலும், நிமிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக கொடுமைப்படுத்தினார். நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறித்துவைத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறவிடாமல் தடுத்து மிரட்டியிருக்கிறார்.
மருத்துவமனையின் பார்ட்னர் என்ற அடிப்படையில் நிமிஷாவிடம் கையெழுத்து வாங்கி, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையெல்லாம் எடுத்திருக்கிறார். சில நேரங்களில் துப்பாக்கி வைத்தும் மிரட்டியிருக்கிறார் என்கிறது.
அதே நேரம் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி பிபிசி அரபி செய்திக்கு அளித்த பேட்டியில், ``தலால், நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறித்துவைத்துக்கொண்டார், நிமிஷாவை மிரட்டினார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட நிமிஷா கூட தலால் மஹ்தி தன் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாக கூறவில்லை.

இந்தச் செய்திகள் வெறும் வதந்தி. தலாலுக்கும் நிமிஷாவுக்கும் இடையில் ஒரு இயல்பான உறவே இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துக்கொண்டப் பிறகே ஒரு கிளினிக் தொடங்குவதாக முடிவு செய்தனர். அவர்கள் திருமணம் செய்துகொண்டு, 2 -3 ஆண்டுகள் வரை திருமண உறவில் இருந்தனர்" என்கிறார். ஆனால், தலால் அப்து மஹ்தி திருமண ஆவணம் போலியாக உருவாக்கியது எனக் கூறப்படுகிறது.
2017-ம் ஆண்டு தலால் அப்து மஹ்தியின் உடல், ஒரு தண்ணீர் தொட்டியில் பலத் துண்டுகளாக கிடைக்கிறது. இந்தக் கொலையை யார் செய்தது என்றக் கோணத்தில் விசாரித்த காவல்துறை, ஒரு மாதம் கழித்து சவுதி - ஏமன் எல்லையில் நிமிஷா பிரியாவை கைது செய்கிறது. அப்போதே இந்தச் செய்திகள் ஊடக வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை கிளப்பின.
இந்தக் கொலை வழக்கை நடத்துவதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி தன் வீட்டை விற்று பணம் ஏற்பாடு செய்கிறார். வளைகுடா நாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதை சேவையாக செய்துவரும் சாமுவேல் என்பவரின் உதவியுடன் நிமிஷா தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ``இது கொலையல்ல... தலால் அப்து மஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்ட்டை மறைத்து வைத்திருந்தார். நிமிஷாவைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக நிமிஷா காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதனால், தலால் அப்து மஹ்தியிடமிருந்து பாஸ்போர்ட்டை எடுப்பதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். ஆனால், அது ஓவர் டோஸ் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
அதனால் தலால் அப்து மஹ்தி இறந்திருக்கிறார். அதற்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல், ஹனன் என்ற உள்ளூர் பெண் உதவியுடன் தலால் அப்து மஹ்தியின் உடலை சில துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். இதில், கொலை நோக்கம் இல்லா தவறுதலாக நடந்தக் கொலை." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய அரசு தலையீடு:
கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன் ஆஜராகி வாதாடி, நிமிஷாவின் நிலை குறித்து ஏமன் நீதிமன்றத்தில் வாதிட்டார். அப்போது, ``இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது நிமிஷா கையெழுத்திட்டுவிட்டார்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நிமிஷாவுக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டு நிமிஷாவின் தரப்பில் வாதாட ஒரு ஏமன் நாட்டு வழக்கறிஞரை இந்திய வெளியுறவுத் துறை நியமித்தது. ஆனாலும், 2020-ம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.
சனாவில் உள்ள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நிமிஷா தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 2023-ல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.
ஏமனில் இருக்கும் அரசு ஷரியா எனும் இஸ்லாமிய சட்டத்தின்படி ஆட்சி செய்துவருகிறது. அதன் அடிப்படையில், ஒருவர் கொலைக் குற்ற நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்றால், இரண்டு வழிகள் இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பம் மனமுவந்து குற்றம் செய்தவரை மன்னிக்க வேண்டும். அல்லது இந்தக் கொலைக்கு பகரமாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு Blood Money எனும் தொகை வழங்கி இந்தக் குற்றத்திலிருந்து விடுதலைப் பெறலாம். இந்த இரண்டும் இல்லை என்றால் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
எனவே, நிமிஷா பிரியா வழக்கில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு மரண தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என 2023-ம் ஆண்டு Save Nimisha Priya International Action Council - (SNPIACl) என்ற தன்னார்வலர் குழு தொடங்கப்பட்டது.
ஏமன் சென்ற நிமிஷாவின் தாய்:
2023-ம் வருடம் நிமிஷாவின் தாயார் ஏமன் அனுப்ப அனுமதி கோரி, SNPIACl குழு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதே நேரம் இந்தக் குழு நிமிஷாவை மீட்பதற்கு தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டி வந்தது.
திரட்டப்பட்ட பணத்தில், மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் 40,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.34 லட்சம்) இரு தவணைகளாக, இந்திய வெளியுறவுத் துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் நாட்டின் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தப்பட்டது. இதற்கு மத்தியில் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்றார்.
2025 ஜனவரியில் 2023-ல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மஹ்தி அல் மஷாத் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். அதனால் மீண்டும், தலால் அப்து மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் முடக்கிவிடப்பட்டன. இதற்கிடையில், கேரள அரசு மத்திய அரசுக்கு நிமிஷா பிரியா மரண தண்டனை தொடர்பாக கடிதம் எழுதியது.


