டபுள் பீன்ஸ் கிரேவி
டபுள் பீன்ஸ் என்பது புரதம், நார்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் விட்டமின் பி6, தயாமின், வைட்டமின் சி, போலிக் அமிலம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற பல முக்கிய சத்துகளை கொண்ட ஆரோக்கியமான உணவாகும். மேலும் இதில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் நிரம்பியுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய, இந்த டபுள் பீன்ஸ் கொண்டு சுவையான கிரேவி எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :
காய்ந்த டபுள் பீன்ஸ் – 1 கப் (ஊற வைத்தது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (துருவியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
தனியா தூள் – 1½ மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ மேசைக்கரண்டி
மசாலா தூள் / கறி மசாலா – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
புதினா / கொத்தமல்லி – அலங்கரிக்க
சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி செய்முறை விளக்கம் :
ஆரோக்கியம் நிறைந்த டபுள் பீன்ஸ் கிரேவி செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். டபுள் பீன்ஸ் காய்ந்ததாக இருந்தால், இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பச்சையாக இருந்தால் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் மெலிதாக பொடியாக நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும். இவை வதங்கியதும், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கறி மசாலா ஆகிய மசாலா தூள்கள் அனைத்தையும் மேற்கூறிய அளவின்படி சேர்த்து வதக்கவும். மசாலாக்களின் பச்சை வாசம் போனதும், வேக வைத்த டபுள் பீன்ஸ் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கெட்டியாக கிரேவி திரட்டும் வரை சமைத்துவிட்டு இறுதியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி / புதினா தூவி அலங்கரிக்கவும். சூடாக சப்பாத்தி, ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும். வேண்டுமானால் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம், இன்னும் ருசி கூடுதலாக கிடைக்கும். கிரேவி கொதிக்கும் பொழுதே தேங்காயை நைசாக அரைத்து சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின், கார்னிஷ் செய்து இறக்கினால் அற்புதமாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:
இன்று 8-7-2025 அதிசக்தி வாய்ந்த பிரதோஷ வழிபாடு
டபுள் பீன்ஸில் எல்லா சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதில் இருக்கும் விட்டமின் பி6, தயாமின், இரும்பு சத்து போன்றவை ரத்த சோகை நோய் வராமல் பாதுகாக்கும். பெருமளவு கால்சியம் நிரம்பியுள்ளதால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். சைவ உணவுகளில் மிகுந்த நல்ல சத்துள்ள பொருட்களில் ஒன்றாக இருக்கக் கூடிய, இந்த டபுள் பீன்ஸை இதுவரை நீங்கள் சமைக்கவில்லை என்றால், இனி அடிக்கடி சமைக்க பழகுங்கள், ஆரோக்கியமாக இருக்கலாம். சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என்று எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.
The post டபுள் பீன்ஸ் கிரேவி appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

