Doctor Vikatan: ஆசனவாயில் வெடிப்பு, வலி.. அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: என் மனைவிக்கு 36 வயதாகிறது. அவருக்கு கடந்த 6 மாதங்களாக மலம் கழிக்கும்போது கடுமையான வலி இருப்பதாகச் சொல்கிறார். சில நேரங்களில் ரத்தமும் வெளியேறுவதாகச் சொல்கிறார். இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்றும், அப்படியே ஆபரேஷன் செய்தாலும் மீண்டும் இந்தப் பிரச்னை வரலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை... இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

மலம் கழிக்கும்போது தாங்க முடியாத வலியோ, மலத்துடன் ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதோ ஆசனவாய் வெடிப்பு (Anal Fissures) என்ற பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். 

மலச்சிக்கல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும். அதன் விளைவாக ஆசனவாய் வெடிப்பு ஏற்படலாம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும் வாய்ப்புகள் அதிகம்.  பிரச்னை வந்துவிட்டால், அதற்கான தீர்வுகளில் முதலிடம் பெறுவது மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறுவதுதான். அதற்கு சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் உணவு உண்பதைத் தள்ளிப்போடக் கூடாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட நார்ச்சத்தும் நீர்ச்சத்தும்  மிகமிக முக்கியம். அதாவது நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதன் மூலம் மலச்சிக்கல் தவிர்க்கப்படும். அதன் தொடர்ச்சியாக ஆசனவாய் வெடிப்பும் சரியாகும். 

பிரச்னை வந்தவர்களுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அறுவைசிகிச்சை என்ற கடைசி தீர்வுக்கு முன்பாக வேறு சிகிச்சைகள் நிறைய உள்ளன. வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுவதுடன், குறுகிய காலம் எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளே இந்தப் பிரச்னையிலிருந்து விடுவிக்கும். அந்த மருந்துகளில் ஆன்டிபயாடிக்கும், லாக்ஸேட்டிவ்ஸ் (Laxatives) என்று சொல்லக்கூடிய மலமிளக்கிகளும் முக்கியமாக இடம்பெறும்.

சிட்ஸ் பாத் (Sitz Bath) என்ற சிறப்புக் குளியலும் நல்ல நிவாரணம் தரும். இதில் ஒருவர் இடுப்பு மற்றும் பிட்டப் பகுதிகள் மட்டும் மிதமான சூடுள்ள வெந்நீரில் மூழ்கும்படி அமர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.

சிட்ஸ் பாத் (Sitz Bath) என்ற சிறப்புக் குளியலும் நல்ல நிவாரணம் தரும். இதில் ஒருவர் இடுப்பு மற்றும் பிட்டப் பகுதிகள் மட்டும் மிதமான சூடுள்ள வெந்நீரில் மூழ்கும்படி அமர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் கற்றுத் தருவார். ஆசனவாய் வெடிப்பு என்பது இன்று பரவலாக பலரையும் பாதிக்கிற பிரச்னையாக இருக்கிறது. அது ஆபத்தான பிரச்னையல்ல என்றாலும், அளவுக்கதிகமான அசௌகர்யத்தைக் கொடுப்பதால், அதை வராமல் தடுப்பது, அப்படியே வந்துவிட்டாலும் மீண்டும் வராதபடி வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.