Tiger Death: மாட்டிறைச்சியில் பூச்சி மருந்து.. துடிதுடித்து மடிந்த 5 புலிகள்; வனத்தில் என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டதில் உள்ள மலே மாதேஸ்வரா வனப்பகுதியில் நேற்று முன்தினம் 5 புலிகள் ஒரே இடத்தில் இறந்துக் கிடப்பதைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
தாய்புலி மற்றும் அதன் நான்கு குட்டிகளும் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 புலிகளின் உடல்களையும் கூறாய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் முதல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வரை இந்த விவகாரத்தில் களமிறங்கி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகின்றனர்.
இறைச்சியில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புலியால் கொல்லப்பட்ட பசுமாட்டின் சடலத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதைத் தற்போது உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூர பின்னணி குறித்து தெரிவித்துள்ள அம்மாநில வனத்துறை அதிகாரிகள், "இந்த வனப்பகுதியில் தாய் புலி ஒன்று தன்னுடைய நான்கு குட்டிகளையும் பராமரித்து வந்தது. வனப்பகுதிக்குள் நடமாடிய பசு மாட்டை தாய் புலி வேட்டையாடியிருக்கிறது.
அதன் இறைச்சியைக் குடும்பமாகத் தின்றுவிட்டு மிச்சம் வைத்துச் சென்றுள்ளன. இதைக் கண்டு ஆத்திரமடைந்த பசு மாட்டின் உரிமையாளர்கள், எஞ்சிய பசு மாட்டின் சடலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து விட்டு யாருக்கும் தெரியாமல் சென்றிருக்கிறார்கள்.
5 புலிகளும் குடும்பமாக வந்து மீண்டும் அந்த இறைச்சியைத் தின்றுள்ளன. உடல் முழுக்க விஷமேறி துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளன. விஷம் கலக்கப்பட்ட இறைச்சி, புலிகளின் வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புலிகள் இறந்துக் கிடந்த இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் பசு மாட்டின் சடலமும் கண்டறியப்பட்டுள்ளது . பசு மாட்டிற்கு ஈடாகப் புலிகளைக் கொல்ல வேண்டும் என்கிற கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கொப்பா கிராமத்தைச் சேர்ந்த மடராஜா, நாகராஜ், கொனப்பா ஆகிய 3 நபர்களைத் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தொடர் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும்" எனத் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


