திருச்செந்தூர்: கப்பலில் தவறி விழுந்த பணியாளர்; குணமானதும் வெள்ளி வேல் காணிக்கை செலுத்திய உரிமையாளர்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள்.
அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியதும் அங்கப்பிரதட்சணம், காவடி, பால்குடம், துலாபாரம், காணிக்கை செலுத்துதல், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களையும் செலுத்துவார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த பணியாளர் உடல் நலம் பெற வேண்டி 7 அடி உயர வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜய். 24 வயதான இவர், துருக்கியில் இருந்து இத்தாலி நாட்டிற்கு இயக்கப்பட்டு வரும் கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு துருக்கி நாட்டில் கப்பலில் பணியில் இருந்த போது அஜய், எதிர்பாராத விதமாக கப்பலின் மேல் தளத்தில் இருந்து தவறி தரைத்தளத்தில் விழுந்தார்.
இதில் அஜய்யின் கை, கால், முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் படுகாயம் அடைந்த அஜய் நடக்க முடியாமலும் பேச முடியாமலும் பாதிப்பு அடைந்தார்.

45 நாட்களுக்கு மேலாக துருக்கி நாட்டில் அஜய்க்கு மருத்துவம் பார்த்த கப்பலின் உரிமையாளர், அஜய்யின் உடல் நலம் சரியானதும் திருச்செந்தூர் முருகனுக்கு 7 அடி உயரத்தில் வெள்ளியால் வேல் செய்து அஜய்யின் கைகளாலேயே முருகன் சன்னதியில் ஒப்படைப்பதாக வேண்டியிருந்தாராம். இந்த நிலையில், தற்போது அஜய் முழுமையாகக் குணமடைந்துள்ளார்.
இதையடுத்து அஜய், தன்னுடன் துருக்கி நாட்டில் வேலை பார்த்த நாகர்கோவிலைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்தார்.
7 அடி உயரத்தில் ’ஓம்’ எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கிலோ எடை உடைய 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளியால் ஆன வேலுடன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயிலின் வெளிபிரகாரத்தில் வேலுடன் சுற்றி வந்த அஜய்யை கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அதைத் தொடர்ந்து அஜய், வேலுடன் கோயிலுக்குள் சென்று முருகன் சன்னதியில் வைத்து வேண்டிக்கொண்டு அதன்பின் திருக்கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
தனது பணியாளரின் உடல் நலம் பெற வேண்டி கப்பல் உரிமையாளர், திருச்செந்தூர் முருகனுக்கு 7 அடி உயரத்தில் வெள்ளியால் ஆன வேல் வழங்கிய நிகழ்வு கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


