PMK ராமதாஸ் மீதான கொலை வழக்கு முதல், தீர்ப்பு வரை! - சி.வி.சண்முகம் வழக்கு கடந்து வந்த பாதை
2006, மே 8-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிந்து, வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் பரபரப்புகள் அடங்கியது என பெருமூச்சு விட நினைத்த தமிழகம், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அந்த சம்பவத்தால் பேச்சுமூச்சற்று நின்றது.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் அ.தி.மு.க அமைப்பாளராகவும், வந்தவாசியின் எம்.பி-யாகவும் இருந்த வேணுகோபாலின் மகன் சி.வி.சண்முகத்தை, 2001 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் முதன் முதலில் களமிறக்கினார் ஜெயலலிதா.
அந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சேதுநாதனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த சி.வி.சண்முகத்தின் பெயரை, தன்னுடைய அமைச்சரவை பட்டியலில் இணைத்தார் ஜெயலலிதா.
அதையடுத்து வந்த 2006 தேர்தலில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் சி.வி.சண்முகமும், பா.ம.க சார்பில் அக்கட்சியின் அப்போதைய நிலையச் செயலாளராக இருந்த எம்.கருணாநிதியும் களமிறங்கியிருந்தனர்.
முதல் முறையே அமைச்சரானதால் ஏற்பட்டிருந்த பலம், ஜெயலலிதாவிடம் இருந்த செல்வாக்கு பிரசாரத்தில் பம்பரமாக சுழன்றார் சி.வி.சண்முகம். அதனால் பா.ம.க வேட்பாளர் கருணாநிதியும், இவரும் பிரசாரக் களத்தில் பல இடங்களில் உரசிக் கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த மே 8-ம் தேதி இரவு, திண்டிவனத்தில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு அமர்ந்து கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் சி.வி.சண்முகம்.
அப்போது திடீரென அரிவாள்களுடன் வந்த ஒரு கும்பல், சி.வி.சண்முகத்தை நோக்கிப் பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட சி.வி.சண்முகம், அங்கு நின்றிருந்த தன்னுடைய காருக்கு அடியில் புகுந்தார்.
குற்றப்பத்திரிகையில் `மிஸ்’ஆன மருத்துவர் ராமதாஸ், அன்புமணி பெயர்கள்
அப்போது குறுக்கே வந்த சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தத்தை கொலை செய்த அந்தக் கும்பல், காருக்கு அடியில் இருந்த சி.வி.சண்முகத்தை நோக்கிச் சென்றது.
அதற்குள் அங்கு கூட்டம் கூடியதால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அவர்களிடம் இருந்து சி.வி.சண்முகமும் தப்பிப் பிழைத்தார். அதையடுத்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அவரின் சகோதரர் சீனுவாசன், அன்புமணி ராமதாஸ், வேட்பாளர் கருணாநிதி, குமரவேல் பிரதீபன், ரகு, குமரன் என 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது ரோசனை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் அதன்பிறகு அவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அவரின் சகோதரர் சீனுவாசன், அன்புமணி ராமதாஸ் போன்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. அதனால் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சென்றார் சி.வி.சண்முகம்.

அவரை மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 29.10.2011 அன்று வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியதுடன், நான்கு மாதங்களில் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதையடுத்து சீனுவாசனையும், கருணாநிதியையும் கைது செய்த சி.பி.ஐ, அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.
ஆனால் அதன்பிறகு சீனுவாசனை காவலில் எடுத்து விசாரிக்க, செங்கல்பட்டு தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். அதனால் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் சென்ற சி.பி.ஐ. `இந்த வழக்கின் தீவிரத்தன்மையை உணராமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனுவாசனை விசாரித்தால்தான் முக்கிய விவரங்கள் தெரியவரும். அதை வைத்துதான் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். கைது செய்யப்பட்டவரை போலீஸ் காவலில் எடுப்பதற்கு உரிமை இருக்கிறது.
மருத்துவர் ராமதாசிடம் தூது சென்ற சி.வி.சண்முகம்
எனவே சீனிவாசனை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க மறுத்து, செங்கல்பட்டு தலைமை மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். சீனிவாசனை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும்’ மனு தாக்கல் செய்தது.
அதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், மருத்துவர் ராமதாசின் சகோதரர் சீனுவாசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கொடுத்தது.
அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை, திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு எண்.1 நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையின்போதே 5 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதுதான், கடந்த 2021-ல் கூட்டணிக்காக சி.வி.சண்முகத்தை ராமதாசிடம் தூது அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி.

15 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2025 ஏப்ரல் 28-ம் தேதி வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவு பெற்றதாக அறிவித்தது நீதிமன்றம். அத்துண்ட வழக்கின் தீர்ப்பு ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அதையடுத்து தீர்ப்பை ஜூன் 16-ம் தேதிக்கு மாற்றிய நீதிபதி முகமது ஃபாரூக், அதன் பின்னர் மீண்டும் ஜூன் 25-ம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதனடிப்படையில் நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ``குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை.
அதனால் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி முகமது ஃபாரூக். அதையடுத்து விடுதலை பெற்றவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


