Sri Aurobindo: கடவுளும் ரோஜாவும்... - ஸ்ரீ அரவிந்தர் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 17

தத்துவ ஞானி, யோகி, குரு, கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட அரவிந்தர் எப்போது எனக்கு அறிமுகமானாரென்று சரியாக நினைவுக்கு வரவில்லை. பள்ளியில் படிக்கும்போது பேச்சுவாக்கில் வந்தவரென நினைக்கிறேன்.

மூட்டமான கவிதையனுபவத்தை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் உருவாக்கியிருக்க வேண்டும். காற்றிலாடும் சருகினைப் போல் ஞாபகத்துக்குள் இறங்கி கவித்துவம், ஆன்மீகத் தன்மையோடு சிறகுகளை விரிக்கத் தொடங்கின.

கவிஞர்கள் தாம் கண்ட வாழ்வினை, உணர்ந்ததை, கோட்டோவியமாக விட்டுவிட்டுச் செல்கிறார்கள். சில நேரங்களில் சித்த மனநிலையுடனும் தனிமையிலும் எழுதும் படைப்புகள் பெரும்பாலும் சுய அனுபவங்களோ என்று தோன்றவைக்கின்றன.

கவிதை தனது நீட்சியாக ஆன்மீக எத்தனத்தையும், அந்த உலகிலிருந்து உத்வேகத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அரசியலும் ஆன்மீகமும், அரசியலும் கவிதையும் ஒன்றையொன்று அரவணைத்துக் கொள்ளும்போது கவிதையும் அரசியலும் ஆன்மீகமும் சுடர்விடுகின்றன.

கவிதைக்குள் புழங்கிய மனம் தனக்குத்தானே அன்னியமாகி, ஒட்டாத மனநிலையில் புரட்சிகர அரசியலையும் விட்டு, ஞானநெறியில் கவனம் சென்றிருக்கிறது, ஒருவேளை அவருக்கு இந்தச் சுழிப்புகள் சுலபமாக இருந்திருக்கக்கூடும்.

ஸ்ரீ அரவிந்தர்

தத்துவார்த்த ரீதியில் தன்னெழுச்சியாக இந்திய வேதத் தத்துவங்களைக் கவிதைகளின் அடிநாதமாகக் கொண்டு, கடல் போன்ற மனத்துக்குள் பயணித்து ஆழ்ந்த அமைதியை அரவிந்தர் கண்டடைந்திருக்கிறார்.  

அரவிந்தரை வாசிக்க அவரது ஆழ்ந்த சிந்தனைகளும் ஆன்மீகக் கருத்துகள் அடங்கிய விரிவான பார்வைகளும் காரணம் என நினைக்கிறேன். அவை பெரிய உத்வேகத்தைத் தந்தனவா என்றால் பெரும்பாலானவை சிந்தனைகளாகவே எனக்குத் தொனிக்கின்றன.

கல்கத்தாவில் அரவிந்தர் 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்தார். தந்தை கிருஷ்ணதன் கோஸ், அக்காலத்தில் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர். தாயார், இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மிகச்சிறந்த ஆளுமையாக அறியப்பட்ட ரிஷி ராஜ்நாராயண்போஸின் மகள் ஸ்வர்ணலதா தேவி. 1879-இல் தனது இரண்டு மூத்த சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்று, சுமார் 14 ஆண்டுகள் தங்கி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் படித்தார்.

மான்செஸ்டரில் வில்லியம் எச்.டெவெட் தம்பதியரிடம் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றார். ஆங்கிலம், லத்தீன், பிரஞ்சுடன் வரலாற்றையும் கற்றார். உதவித் தொகையுடன் கேம்பிரிட்ஜ் சென்று ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

1893-இல் இங்கிலாந்தை விட்டுச் சென்றபின் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவரது ஆங்கிலப் புலமை அனைவரையும் அக்காலத்தில் வியக்கவைத்தது.

ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

அரவிந்தரை ஞானியாக, குருவாக, வேதாந்தியாக, தேச பக்தராக இன்னும் சொல்லப்போனால் தீர்க்கதரிசியாகப் பார்த்தவர்கள் பலருண்டு. டபிள்யூ.பி. யேட்ஸிற்கு இணையாக ஆங்கில இலக்கியத்தில் மிகச்சிறந்து விளங்கியவர்.

தாகூரும் சரோஜினி நாயுடுவும் இவரது சகாக்கள். கவிஞராக, நாடகக் கலைஞராக, சுமார் 60 ஆண்டுகாலம் எழுத்துப்பணியில் ஈடுபட்டு மூவாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதி தன்னை ஒரு இலக்கியவாதியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர்.

1940களின் பிற்பகுதியில், பார்வை மங்கிக்கொண்டிருந்தபோதும் கூட, நண்பரின் உதவியோடு திருத்தங்களைச் செய்து இறுதிவரை அதனைச் செழுமைப்படுத்தினார்.

அரவிந்தர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. அதில் கவிதை, பிற இலக்கிய வடிவங்கள், ஓவியம், இதர கலைகள், யோகம் பற்றி எழுதப்பட்டுள்ளன.

பெரும்பாலானவற்றை அவர் 1930, 40களில் தனது ஆசிரம உறுப்பினர்களுக்காக எழுதினார். பிறகு சாவித்ரி குறித்த கடிதங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டன. இக்கடிதங்களில் பாதி மட்டுமே அவர் இருக்கும்போது வெளியீடு கண்டன.

மீதமுள்ள கையெழுத்துப் பிரதிகளைத் தேடியெடுத்து பிறகு தொகுத்தனர். கவிதை, இலக்கியம் மற்றும் கலை பற்றிய நூலில் அவரது விரிந்த பார்வை வியக்கவைக்கிறது. புராணங்கள் தந்த உத்வேகம்தான் கவிதைக்கான சாரம்சம், வார்த்தைகளற்ற உத்வேகமாகவும் இருக்கலாம். அறிவின் சக்தியும் சாரமும் தீவிரமுமே தொடந்து எழுதுவதற்கு உத்வேகம் தரக்கூடியவை என்கிறார்.

மனிதனின் முதல் ஒழுங்கீனமென்பது

தடைசெய்யப்பட்ட மரத்திலிருந்து

விழுகின்ற பழம் போன்றது

என்ற மில்டன் எவ்வளவு தடைகளிருந்தாலும் பழம் பழுத்தவுடன் தரையைச் சேர்வதுபோல் கவிதையும் வந்தே தீரும். அதிலும் நுட்மான சிந்தனைகள் உயர்ந்த எண்ணங்களுடன் இருக்கும்போது மனத்தை எளிதில் வென்றுவிடுகிறது.

ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

கவிதை பற்றி அரவிந்தர் எழுதியிருக்கக்கூடிய கருத்துகள் கவனிக்கக்கூடியவை. அதிலிருக்கும் விரிவான நுணுக்கங்களைப் படிக்கும்போது மா.அரங்கநாதனின் பொருளின் பொருள் கவிதை என்ற கட்டுரை நினைவுக்கு வந்தது.

ஒருவேளை அரவிந்தரின் நூல்கூட அவருக்கு அடிப்படையாகவும் தூண்டுகோலாகவும் இருந்திருக்கக்கூடுமென நினைக்கிறேன்.

அரவிந்தர் தன்னைப் பொறுத்தவரையில் உலகின் மிகச்சிறந்த கவிஞர்களின் பட்டியலில் முதல் வரிசையில் ஹோமர், ஷேக்ஸ்பியர், வால்மீகி ஆகியோரையும், இரண்டாவது வரிசையில் தாந்தே, காளிதாசர், விர்ஜில், மில்டனையும், மூன்றாவது வரிசையில் கதேயையும் குறிப்பிடுகிறார்.

முதல் மூன்று பேரும் ஒரே காலத்தில் அதீதக் கற்பனைத் திறன், உயர்ந்த கவிதை ஆற்றல், பரந்துபட்ட பார்வையோடு படைப்புகளைத் தந்தவர்கள். ஒவ்வொருவரும் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கியவர்கள். கவிமனத்தால் கட்டமைக்கப்பட்டவர்கள், அவர்களின் பக்கத்தில் காளிதாசனும் ஒரு தீர்க்கதரிசியே என்று குறிப்பிடுகிறார். 

ஆன்மீகத்தைக் கடந்து பின் ஒருங்கிணைந்த யோக சாதனையையும் முன்வைத்தவர். யோகம் பற்றிய தத்துவ ஆய்வுக்கட்டுரைகளையும், கடிதங்களையும் எழுதியவர். அவருடைய ஆன்மீகக் கருத்துகளை விளக்கும் கட்டுரைகள், கடிதங்கள் விரும்பிப் படிக்கப்பட்டன.

அவர் மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், கணவரின் லட்சியப் பாதையில் சென்று கடவுளை அடைய வேண்டுமெனும் முயற்சியில், மனைவி தடையாக இல்லாதிருக்கவும், அதற்குத் துணையாகவும் கருவியாகவும் இருப்பதற்குக் கடவுளிடம் வேண்டிக்கொள்ளவும் சொல்கிறார்.

அன்றைய சூழலில் அரவிந்தருக்காக அன்றாடச் சுகங்களை விட்டுக்கொடுத்துக் காத்திருக்கும் பொறுமை கொண்ட மிருணாளினி தேவி தனது 31ஆவது வயதிலேயே காலமானார்.

ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

அரவிந்தர் தொடக்கத்தில் பரோடா மகாராஜாவின் பணிகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டார். பின் பதிமூன்று வருடங்கள் பரோடா கல்லூரியில் பிரெஞ்சு மொழியைக் கற்பித்தார், பின்னர் ஆங்கிலப் பேராசிரியராகவும் துணை முதல்வராகவுமானார்.

சமஸ்கிருதம், வங்களாத்தில் ஆழமான நுண்ணறிவைப் பெற்றவர். மராத்தி, குஜராத்தி போன்ற மொழிகளையும் அறிந்துகொள்ள ஆர்வத்துடன் படித்து ஏராளமாக எழுதிக் குவித்தார்.

கவிதை மற்றும் அரசியல் வகுப்புகளைத் தொடங்கி, பிறருக்குக் கற்றுத்தருவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும் இந்தியாவில் நிலவிய அடிமைநிலை மனச்சோர்வடையச் செய்தது.

வந்தேமாதரம் ஆங்கில நாளிதழின் பொறுப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். ஒரு வருடம் கழித்துச் சில கட்டுரைகளை அதில் வெளியிட்டதன் தொடர்பில் கைது நடவடிக்கைக்கு உள்ளானார்.

சூரத் மாநாட்டில் கலந்து கொண்டபோது, தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நிரபராதியெனப் பின்பு விடுவிக்கப்பட்டார்.

1910-ல் கல்கத்தாவை விட்டு மாறுவேடத்தில் புதுவைக்குச் சென்று தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தார். அங்குதான் வ.வே.சு ஐயர், பாரதியார் ஆகிய ஆளுமைகளின் நட்பு கிடைத்தது. அரவிந்தரின் சீடர்கள் மெல்ல மெல்ல அவரைச் சுற்றித் திரள, அங்கேயே ஆசிரமம் ஒன்றையும் தொடங்கினார். 

இப்போது ‘மதர்’ என்று பக்தர்களிடம் புகழ்பெற்றிருக்கும், பாண்டிச்சேரியின் அடையாளமாக விளங்கும் அன்னையான மேடம் மிர்ரா ரிச்சர்ட் பாண்டிச்சேரியில்தான் அரவிந்தரைச் சந்தித்தார். அவரது ஆன்மீகச் சந்தேகங்களைக் கேட்டுக் கடிதங்கள் எழுதி, பின் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவரைச் சரணடைந்தார்.

அரவிந்தர் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் மகா சமாதியடைந்தார். மரணத்திற்குப் பின் நான்கு நாட்கள் இறுதி அஞ்சலி முடித்து அவரது ஆசிரமத்திலேயே கருங்காலி மரப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்தனர்.

ஆசிரமத்தை நிர்வகித்து வந்த அன்னை மகா சமாதி அடைந்தபோது அரவிந்தரின் சமாதிக்கு அருகிலேயே அவரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அரவிந்தர் யோக சித்திக்காகத்தான் புதுவைக்கு வந்தார். அவரிடம் பாரதியார் பேரன்பு கொண்டிருந்தார். அவரோடிருந்த நட்புறவினால் பாரதியார் கவிதையில் ஞானசக்தி கனலேறி, சக்திப்பாட்டு, வேள்விப்பாட்டு, முருகன்பாட்டு, கண்ணன் பாட்டு முதலியவற்றை எழுதியிருக்கிறார். தனது ஆடு பாம்பே என்ற பாடலில்,

ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே-எங்கள்

அரவிந்தப் பேர்புனைந்த அன்புப் பாம்பே !

என அரவிந்தரைப் போற்றிய பாடல், இது பாரதிதாசனால் எழுதப்பட்டதெனவும் சொல்லப்படுகிறது.

அரவிந்தர் நடத்திய கர்மயோகின், தர்மா இதழ்களை, பாரதி கர்மயோகி, தர்மம் என்ற பெயர்களில் சில காலம் வெளியிட்டார் பாரதியார். அக்காலத்தில் அரவிந்தரின் சொல்லும், பாரதியின் பாடலும் நாட்டை ஆளுமை செய்தன.

அரவிந்தரின் உரைநடைக் கவிதைகள் ஈர்க்கக் கூடியவையாக இருந்தன. ஆனாலும் வாசிப்புக்குக் கடினமானவை. எதிர்காலக் கவிதைகள் என்ற தொகுப்பு, கவிதை பற்றிய ஆராய்ச்சியோடு எதிர்காலத்தைப் பற்றிய அவரது தரிசனமாகவும் இருந்தது.

எதிர்காலக் கவிதைகள் பாரம்பரிய வடிவங்களிலிருந்து விடுபட்டு, தனக்கேயுரிய வகையில் புதிய, ஆன்மீகச்  சக்திமிக்க வடிவத்தை எடுத்துக்கொள்ளுமென அவதானித்தார்.

தி லைஃப் டிவைன் என்பது மெஞ்ஞானம் பற்றிய ஆய்வுக் கட்டுரை. ஆயிரம் பக்கங்களுக்கு மேலான இந்நூல் ஆகச்சிறந்த தத்துவநூலாகப் பார்க்கப்படுகிறது. தி டைகர் அண்ட் தி டியர் என்ற கவிதையில் புலி மற்றும் மான் என்ற இரண்டு எதிர்மறை சக்திகளின் வேறுபட்ட அம்சங்களைச் சொல்லும் கவிதை இது. புலி கொடூரமான, சக்தி வாய்ந்த ஆதிக்க உணர்விற்கும், மான் அமைதியாகவும் பாதுகாப்பற்றத் தன்மை, அச்சத்திற்கும் உருவமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இரண்டு எதிர்மறை சக்திகளுக்கிடையிலான முரணைப் பேசுகிறது.

இந்த எதிர்மறை சக்திகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருந்தாலும், இப்பிரபஞ்சத்தில் ஒருங்கிணைந்த சமநிலையை உருவாக்க முக்கியமானவை என மார்க்சிய சிந்தனையோடு ஒத்துப்போக வைக்கும் பொதுவுடைமை கவிதையாகவும் பார்க்கலாம்.

காற்றானது இலைகளின் வழியாக நழுவி மெதுவாகவும் அமைதியாகவும் வீசுகிறது. காடு அடர்ந்து பசுமையான மரங்கள் மற்றும் கொடிகளுடன் உள்ளது. புத்திசாலித்தனமான புலி வலிமைமிக்க மார்புடன் அதன் கண்கள் பிரகாசிக்க, அதன் பாதங்களோ கொலைக்கான சக்தியைச் சேர்த்து வைத்திருக்கின்றன. புலியைச் சீற்றத்திற்கு ஆளாக்கிவிடக்கூடாது என்பதற்காக வேகமாக வீசுவதற்குக் காற்று அஞ்சுகிறது. காட்டுக்குள் கம்பீரமாக நடந்து செல்லும் புலி, சத்தமில்லாமல் தவழ்ந்து குனிந்து மெல்ல செல்கிறது. அழகான காட்டு மான், மரங்களின் நிழல்களினடியிலுள்ள குளத்தில் குளிர்ந்த நீரைக் குடித்துக்கொண்டிருக்கிறது.

வளைந்து நெளிந்து தவழ்ந்து, கடைசியாகச் சத்தமின்றி அந்த அழகான காட்டு மானின் மீது பாய்ந்து திடீரென்று மரணபயத்தைக் காட்டுகிறது. காட்டின் குளிர்ச்சியிலும் நிழலிலும் மூழ்கியிருந்த பெரிய குளத்திலிருந்த நீரைக் குடித்த மான், காட்டில் தன்னை மட்டும் தனியாக விட்டுச் சென்ற துணையை நினைத்தபடியே இறந்துபோகிறது. இயற்கையில் வலுவான கொடூரமான அழகு, பலவீனமான அழகை அழித்துவிடுகிறது. காடுகளின் ஆபத்தான இடத்தில் புலி குதித்துக்கொண்டு வரமுடியாத ஒரு நாள் வரக்கூடும். அப்போது அழகிய காட்டு மான்கள் &#

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.