ஸ்ரீகாந்த் வழக்கு: கானாவிலிருந்து வந்த கொக்கைன்; காவல்துறைக்குள் பிரசாந்தின் கிரிமினல் நெட்வொரக்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் உடன் தொடர்புடையதாக நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். சப்ளை செய்ததாக பிரதீப் என்பவர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
காவல்துறை அளித்துள்ள அறிக்கையின்படி, இரவு விடுதி ஒன்றில் நடந்த தகராறுக்காக கைது செய்யப்பட்ட பிரசாத், முன்னதாக வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக ஏமாற்றி பலரிடம் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இவர் சுமார் 200 நபர்களிடம் 2 முதல் 20 லட்சம் வரை பெற்றுள்ளதாகக் காவல்துறைக் கூறுகிறது. இந்த குற்றத்தில் இவருக்கு உதவியதாக மதுரை மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றம் தொடர்பாக பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் புகார்களைப் பெற்று வருகிறது காவல்துறை.
இது மட்டுமல்லாமல பிரசாத், சந்தோஷ் என்ற நபர் மூலம் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் உதவியுடன் பலரது தனிப்பட்ட விவரங்களைப் பெற்று மிரட்டி பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வழக்கு பதியப்பட்டு 2 உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணையில் பிரசாத் பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரது வெளிநாட்டு நண்பர் கானாவைச் சேர்ந்த ஜான் மற்றும் சில நபர்களிடமிருந்து கடந்த 3 ஆண்டுகளாக கொக்கைன் பெற்று, தனது நண்பர்கள் பலருக்கு விற்று வந்துள்ளார். இதற்காக சில போதை விருந்துகளை நடத்தியுள்ளார்.

இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை உரிய மருத்துவ சோதனை செய்து, அவரது பரிவர்த்தனைகள் மற்றும் வீட்டில் சோதனை செய்து உரிய ஆவணங்களுடன் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை புலன் விசாராணை மூலம் தேடிப் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் என்பவர் சென்னையிலும் மற்றும் சில இடங்களிலும் நில உரிமையாளர்களை மிரட்டியும், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தோடு, போலி ஆவணங்கள் தயார் செய்து, நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த குற்றங்களை செய்ய உதவியாக இருந்த நாகேந்திர சேதுபதி மற்றும் சந்திரசேகர் (எ) செந்தில், சிவசங்கரன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஜய் வாண்டையார் என்பவரின் அமைப்பின் மூலம் இந்த பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட குற்ற செயலுக்காக அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதியப்பட்ட வழக்குகளில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டும், 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்திலும், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தொடர்விசாரணையில் பிரசாத், அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து அரசு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு மோசடி, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் காவல்துறை அறிக்கையில், "கொக்கைன், ஒஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றியும், விருந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்துபவர்கள் பற்றியும் தகவல் தெரிந்தும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும்" என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


