என் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆட்கொள்ள பிறந்த என் அன்பு மகளுக்கு! - அம்மாவின் மடல் |#உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆட்கொள்ள பிறந்த என் அன்பு மகளுக்கு,
நீ என்றும் நலமாக இருக்க வேண்டும். நீ என் வாழ்வில் வந்த பிறகு என்னுள் தோன்றிய புது புது உணர்வுகளை உன்னோடு பகிர விரும்புகிறேன். உன் அம்மா ஒரு வயதாகிய குழந்தை.தாய்மை என்ற ஸ்தானத்தை முழுமையாக அடைய பயிற்சி பட்டறையில் பழகிக் கொண்டே உன்னையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எப்போது தெரியுமா?
பிரசவ அறையில் வலியோடு துடிக்கும்போது "இந்தாம்மா பாத்துக்கோங்க பெண் குழந்தை"என்று மருத்துவர் முதல் முறை உன்னை தூக்கி காட்டிய தருணம் தான். அந்த விடிய காலை நேரத்தில் இந்த உலகத்தில் யாருமே என்ன விட அதிக சந்தோசமா இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
அடுத்த நிமிஷமே உன்ன சுத்தம் செய்ய வேண்டும் என்று எடுத்துச் சென்று விட்டார்கள். அப்போது தான் பிரிவின் வலி பிரசவ வலியை விட கொடுமையானது என்று உணர்ந்தேன்.
உன்னை முதன் முதலில் தொட்ட நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போல என் நெஞ்சில் உள்ளது. அந்த நிகழ்வை நினைக்கும் போது அன்று இருந்த சந்தோஷம் இன்றும் என்னுள் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. நான் எதற்கும் பொருத்ததில்லை எல்லாம் அவசரம் தான். ஆனால் உனக்கு ஏழு மாதம் இருக்கும் போது தட்டம்மை ஏற்பட்டு மூச்சு திணறல் வந்துவிட்டது. மருத்துவமனையில் நீ இருந்த அறையின் வெளியே கதவின் ஓரத்தில் இரண்டு பகல் ஒரு இரவு தவமாக உட்கார்ந்து இருந்தேன்.
நீ நல்ல குறும்புக்கார குழந்தை நீ செய்வதை பார்த்தால் எனக்கு கோபம் வரும் சில நேரம் அடிக்க கூட செய்வேன். ஒரு நாள் உன் அப்பாவுக்கு சாப்பாடு போட்டு வைத்தேன் அவர் எப்போதும் தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடுவார்.
எதர்ச்சியாக நீ விளையாடிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் குழம்பு இருந்ததை முழுவதுமாக கீழே கொட்டி விட்டாய்
உடனே எனக்கு வந்த கோபத்திற்கு உன்னை அடிக்க கை ஓங்கினேன் அப்போ உன்முகத்தில் ஒரு நிமிஷம் என்னை நானே பார்த்தேன். தெரியாமல் செய்த தவறிற்காக பயத்துடன் பாவமாக இருந்த உன் முகத்தில் தெரிந்த என் முகம். உடனே கோபம் எல்லாம் குறைந்து உன்னை அள்ளி கட்டி அணைத்துக் கொண்டேன்.
நீ என் கூடவே இருந்த அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நான் தான் எப்பவுமே உன் கூடவே இருந்தேன். காலையில எழுந்ததுல இருந்து நைட் தூங்குற வரைக்கும். தூக்கத்துல நடுவுல எந்திருச்சு அழும்போது கூட நான் தான் உன் பக்கத்திலேயே இருந்தேன். திடீர்னு ஒரு நாள் உன்னை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு ஜன்னல் கம்பி புடிச்சுகிட்டு நீ உள்ள அம்மா அம்மான்னு அழறத பார்த்து அந்த ஜன்னல் கம்பியும் அழுதது அது உனக்கு தெரியுமா? இப்ப இத எழுதும்போது கூட கண்ணின் ஓரம் ஈரமாகத்தான் இருக்கு.
நீ நல்லா வளர்ந்து பெரியவள் ஆனதுக்கு அப்புறம் பெத்தவங்களுக்குன்னு நீ எதுவும் செய்ய வேண்டாம். நீ மட்டும் எப்பவுமே நல்லா சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.
இப்படிக்கு
உனக்கு உதிரம் கொடுத்தவள்.

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


