Helmet: இனி புது பைக் வாங்கும்போது, ஷோரூம்ல 2 ஹெல்மெட் கேளுங்க!
டூ-வீலர்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் ஆர்சி புக் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இனி ABS-ம் முக்கியம்.
என்ன பாஸ் சொல்றீங்க? என ஆச்சரியப்படாதீர்கள்.
பைக் ரைடர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் இனி அனைத்து டூ-வீலர்களிலும் ABS கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
சடர்ன் பிரேக் புடிக்கும்போது நமது வாகனம் ஸ்கிட் ஆகாமல் நிலையாக வைத்துக்கொள்ள இந்த ABS உதவுகிறது.
150 சிசி இன்ஜின்களைக் கொண்டுள்ள பைக்குகளுக்கு மட்டுமே ABS கட்டாயமாக இருந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளும் ABS தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சகம் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமில்லை; இனி டூவீலர்கள் வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு BIS அங்கீகாரம் பெற்ற இரண்டு ஹெல்மெட்களையும் கட்டாயம் கொடுக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

”இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் 44 சதவிகித விபத்துகளுக்கு பைக்குகளே காரணம். இப்படி நடக்கும் விபத்துகளிலும் தலையில் காயமடைந்து இறப்பவர்களே அதிகம்.” என்கிறார்கள் அதிகாரிகள். இதைக் குறைக்க இந்த விதிகள் நிச்சயம் உதவும் எனவும் நம்பிக்கை கூறுகிறார்கள்.
இதைப்பற்றி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்,``இப்போது இந்தியாவில் 65% பைக்குகளில் ABS உள்ளது. இந்தப் புதிய விதி எல்லா பைக்குகளுக்கும் பொருந்தும். இதன் மூலம் சாலை விபத்துக்களைக் குறைக்கலாம்” எனக் கூறியுள்ளது.
ஆய்வறிக்கைகளும் ABS பயன்படுத்தினால் 35-45% வரை சாலை விபத்துகளைக் குறைக்கலாம் எனக் கூறுகின்றன. ஏற்கனவே டூவிலர் வாங்கும்போது வாடிக்கையாளருக்கு ஒரு ஹெல்மெட் கொடுக்கும் விதி நடைமுறையில் உள்ளது. (உள்ளதா?)
ABS பொருத்திய வாகனங்கள் சந்தைக்கு வரும்போது அதன் விலை சராசரியாக ரூ.2500- ரூ.5000 வரை உயரலாம்.
இந்தப் புதிய விதிகள் விரைவில் நம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் மக்களே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


