வந்தே பாரத் ரயில்: பாஜக எம்எல்ஏ-க்கு சீட் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்.. உ.பி.,யில் அதிர்ச்சி

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் குறுகிய தூரத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் பா.ஜ.க., எம்.எல்.ஏ வாக இருப்பவர் ராஜீவ் சிங். இவர் டெல்லியில் இருந்து போபால் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் ஜான்சி செல்ல தனது மனைவி மற்றும் மகனுடன் ரயிலில் ஏறினார். இதில் எம்.எல்.ஏ.வு-க்கு ரயில் பெட்டியின் பின்புறமும், அவரது மனைவி, மகனுக்கு பெட்டியின் முன்பகுதியிலும் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

எம்.எல்.ஏ.சிங்

முன்பகுதியில் மூன்று இருக்கையில் இரு இருக்கை எம்.எல்.ஏ. மனைவி, மகனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. மற்றொரு இருக்கை வேறு ஒரு பயணிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. உடனே எம்.எல்.ஏ. சிங் அந்த நபரிடம் பேசி தனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கையில் மாறி அமரும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த நபர் தனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கையில்தான் அமர்வேன் என்று பிடிவாதமாக கூறி அமர்ந்திருந்தார். இதனால் எம்.எல்.ஏ. வேறு வழியில்லாமல் தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.

இது குறித்து ஜான்சியில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளிடம் எம்.எல்.ஏ. போன் மூலம் தெரிவித்ததாக தெரிகிறது. ரயில் ஜான்சி ரயில் நிலையத்தில் நின்றதும் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் திமுதிமுவென ரயிலில் ஏறினர். அவர்கள் எம்.எல்.ஏ. மனைவி மற்றும் மகன் அருகில் இருந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். சிலர் தங்களது செருப்பை கழற்றி அந்த நபரை அடித்தார்.

வந்தே பாரத் விரைவு ரயில்

இதனால் எம்.எல்.ஏ.விற்கு இருக்கை கொடுக்க மறுத்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரின் சட்டை முழுக்க ரத்தமானது. இதையடுத்து அந்த பயணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரயில்வே போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீஸ் அதிகாரி விபுல் குமார் தெரிவித்தார்.

இது குறித்து பின்னர் எம்.எல்.ஏ.சிங் கூறுகையில்,தனது மனைவி மற்றும் மகன் அருகில் அமர்ந்து பயணம் செய்த சக பயணிகள் என் குடும்ப உறுப்பினர்களிடம் தவறுதலாக நடந்து கொள்ள முயன்றார் என்று தெரிவித்தார். தொண்டர்கள் பயணியை அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.