கூந்தலை அள்ளிச்சொறுகிட்டு உனக்காக ஓடத்தொடங்கினேன் சாமி! - அம்மாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்புள்ள ராசுகுட்டி எம்பட தமிழரசனுக்கு,

சாமி நீ நல்லாருப்ப சாமி எல்லா மதத்து சாமிகள்ட்டயும் என்னோட ஒரே ஒரு வேண்டூதல்

எம்புள்ளய பத்திரமா பாத்துக்குங்க என்பதுதான் சாமி.

சாகறதுக்காக தயாராகிட்டு இருந்தவளுக்கு நீ தரித்துள்ளாய் என்கின்ற அற்புத செய்திதான்

இல்லை வாழப்போறன் என் புள்ளைக்காக வாழப்போறேன்னு

கூந்தலை அள்ளிச்சொறுகிட்டு

உனக்காக ஓடத்தொடங்கினேன்

எஞ்சாமி எனக்கு அதிக நேரம் வலி கொடுக்காமலே பொறந்த சுகப்பிரசவமா!

உனக்கு தமிழரசன் என்று பெயர் வைக்க அவ்வளவு போராட்டம்

ஏன் உங்கப்பன் அடிக்க கை ஓங்கிட்டு வந்தான், ஆனாலும் உறுதியாக பிறப்புச் சான்றிதழ் முதல் பள்ளிச் சேர்க்கை விண்ணப்பம் வரை தமிழரசன் என்றே பெயரை பதிவு செய்தேன் சாமி

உன்கூடவே சேர்ந்து நானும் வளர்ந்தேன் சாமி.

உன்னை மடிய விட்டு கீழயே இறக்கமாட்டேன்

உனக்கு புரியுதோ புரியலயோ உன்டதான் பேசிட்டு இருப்பேன்

ஆனால் நீ அத்தூணுன்டுலயே என்னைய கவனிப்ப

வீட்டு வேலைக்கு போற இடத்துக்கு உன்னையும் தூக்கிட்டுதான் போவேன் பொடுவாட்டம் உட்கார்ந்துருப்ப

நீ பால்குடி மறக்காம இருந்த சமயம்

உங்கப்பன் சொல்லாம கொள்ளாம

வெளியூர் போய்ட்டான்

சோத்துக்கு காசும் தராம போய்ட்டான்

ரேசன் அரிசியில கஞ்சி சோறே வைச்சி குடிச்சதால

எனக்கு பால் சுரக்கல

நீ தாய்ப்பாலுக்கு அழுதத தாங்கமுடியாம

உனக்கு பால் கொடுத்தேன்

வத்திப்போன மார்ல பால் வராததால

அழுது மார்க் காம்ப கடிச்சி

வலி தாங்காம உன்னை ஆத்திரம் இயலாமையில அடி சாத்திட்டேன் பச்சபுள்ள னு கூட பார்க்காம

மார்ல இருந்து ரத்தம் சொட்டுற வலியவிட உன்னை அடிச்சிட்டனேனுதான் கதறி அழுதேன்

என் கஷ்டத்த பார்த்து பொறுப்போடு வளர்ந்த சாமி நீ.

சோறு தவிர வேற எதுவும் கேட்டு அடம்புடிக்க மாட்ட

உனக்கு புடிச்சதெல்லாம் மணி கடை பரோட்டாவும் சினிமா டிவிடி கேசட்டும்தான்.

உங்கப்பன் என்னை கைவிட்டு போனப்ப

நான் நோயாளியாக படுக்கையில கிடந்தப்ப

உனக்கு 16வயசு,

அப்போ எனக்கு எல்லா பணிவிடையும் செஞ்ச

ஏன் என்னோட மாதவிடாய் நாட்களில்

நாப்கின் முதற்கொண்டு அணிவித்து

பத்ரமா பாத்துக்கிட்ட எஞ்சாமியடா நீ

இதோ இன்று நீ எனக்கு சோறு போடுற

என் அப்பன் கையில சாப்டதவிட

என் புருசன் கையில சாப்டதவிட

உன் கையில சாப்டறதுதான் மனசார வயிறார சாப்டறேன் சாமி

இதோ இன்று கவிஞர் தனசக்தியாக நான்கு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன் வெள்ளை மல்லிகை என்கின்ற ஆவணப்படம் இயக்கியுள்ளேன்

இதற்கெல்லாம் எஞ்சாமி நீதான் காரணம்

எனக்கென்று அடையாளத்தை கொடுத்த எந்தையுமானவன் சாமி நீ

எனக்கு நண்பனும் நீயே தங்கம்.

நீ உன் லட்சியத்தை அடைய

பிரபஞ்சத்திடமும் ஊர்ல இருக்க அத்தனை சாமிகிட்டயும் மண்டியிட்டு தொழுவேன் தங்கமே என் ராசுகுட்டியே

இப்படிக்கு

உன் அம்மா

தனலட்சுமி என்கின்ற கவிஞர் தனசக்தி

Letter Contest

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.