டயாலிசிஸ் செய்யும் போது மின்தடை; பாதியில் நின்று போன ரத்தம்.. பரிதாபமாக உயிரிழந்த நோயாளி
உத்தரபிரதேச மாநிலம் புல்சந்தா கிராமத்தைச் சேர்ந்த சர்பராஸ் அஹமது (26). இவருக்கு சிறுநீரக நோய் இருந்தது. அதனால் அவருக்கு ரத்தமாற்று சிகிச்சையான டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார்.
அதன்படி பிஜ்னோரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை, அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அதே தினம் தலைமை மேம்பாட்டு அதிகாரி (CDO) பூர்ணா போரா மருத்துவமனையின் வசதிகள் குறித்து ஆய்வு செய்துக்கொடிருந்தார்.
இந்த நிலையில், சர்பராஸ் அஹமதுக்கு டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. அதனால் டயாலிஸிஸ் இயந்திரம் திடீரென நின்றுவிட்டது. அவரின் உடலில் செலுத்தப்பட்ட ரத்தம் அப்படியே நின்றுவிட்டது. அதனால் சர்பராஸ் அஹமது பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் போது, மேலும் ஐந்து டயாலிசிஸ் நோயாளிகளும் காற்றோட்டம் இல்லாத அறைகளில் படுக்கையில் படுத்துக் கிடந்தனர்.
இது தொடர்பாக பேசிய மருத்துவமனை ஊழியர்கள், ``டயாலிசிஸ் பிரிவை பராமரிக்கும் பொறுப்பை ஏற்ற தனியார் நிறுவனம் ஜெனரேட்டரை இயக்க தேவையான எரிபொருளை வழங்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.
உயிரிழந்த சர்பராஸ் அஹமதுவின் தாயார், ``மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது, இயந்திரம் நின்றுவிட்டது, அவரது இரத்தத்தில் கிட்டத்தட்ட பாதி அதற்குள் சிக்கியது. ஜெனரேட்டரை இயக்குமாறு ஊழியர்களிடம் நான் கெஞ்சினேன், ஆனால் யாரும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. என் மகன் இறந்துவிட்டான்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த விளக்கத்தில், ``டயாலிசிஸ் இயந்திரத்தின் மூலம் சுமார் 200 முதல் 250 மில்லி இரத்தம் மட்டுமே சுற்றுகிறது என்றாலும், திடீரென மின்சாரம் தடைபட்டால் அது ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை நிலைகுலையச் செய்யலாம்" என்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் மருத்துவமனைக்குச் சென்றார். டயாலிசிஸ் பிரிவின் நிலையைப் பார்த்து மிகவும் வருத்தமடைந்த அவர், ``தெளிவான நிர்வாகத் தவறும், அடிப்படை சுகாதாரப் பற்றாக்குறையும் இருந்தது. அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்," என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


