Plane Crash: DNA அடையாளம் மூலம் 80 உடல்கள் ஒப்படைப்பு.. விபத்து இடத்தில் தயாரிப்பாளர் மாயம்?

அகமதாபாத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் 29 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிய நிலை இருக்கிறது. இதனால் டி.என்.ஏ சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த நாளில் இருந்து சினிமா தயாரிப்பாளர் மகேஷ் ஜிராவாலா காணாமல் போய் இருக்கிறார். கடைசியாக மகேஷ் போன் விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து 700 மீட்டர் தூரத்திற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து பிற்பகல் 1.39 மணிக்கு நடந்துள்ளது. அதேசமயம் மகேஷ் போன் 1.40 மணிக்கு ஆப் ஆகி இருக்கிறது. எனவே விமான விபத்தில் தனது கணவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக மகேஷ் மனைவி ஹேதல் அச்சம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் விமான விபத்து நடந்த பி.ஜெ.மருத்துவமனையில் டி.என்.ஏ.மாதிரி கொடுத்துள்ளனர். இது குறித்து ஹேதல் கூறுகையில், கடைசியாக அவர் என்னிடம் 1.14 மணிக்கு போனில் பேசினார். வேலை முடிந்துவிட்டதாகவும், வீட்டிற்கு வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு போன் செய்து பார்த்தபோது போன் ஆப்பாகி இருந்தது.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளோம். அவரது ஸ்கூட்டர் மற்றும் போனையும் காணவில்லை. போன் சிக்னலை பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது. அவர் வழக்கமான வழியில் வராமல் ஒரு நாளும் வராத புது வழியில் பயணம் செய்துள்ளார். டி,என்.ஏ மாதிரி கொடுத்திருக்கிறோம்என்று கவலையுடன் தெரிவித்தார்.

விபத்து நடந்து 4 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இது வரை 80 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ. மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 33 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் முதன்மை செயலாளர் மிஸ்ரா விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அதோடு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி இறந்தவர்கள் உடல்களை விரைவாக உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.