Doctor Vikatan: குழந்தைக்கு அதிகம் சுரக்கும் உமிழ்நீர்; நார்மல் தானா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என்  10 வயதுக் குழந்தைக்கு  சமீபகாலமாக உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது. காரணம் என்ன... அது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... அப்படியே விடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

பல் மருத்துவர் மரியம் சஃபி

உமிழ்நீர் அதிகம் சுரக்கும் பிரச்னையை மருத்துவத்தில் ஹைப்பர்சலைவேஷன் (Hypersalivation) அல்லது சயலோரியா (Sialorrhea) என்று சொல்வோம். பொதுவாக, குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்துவரும் நேரத்தில்  இப்படி உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அது நார்மலானதுதான்.

மற்றபடி, குழந்தைகளுக்கு கட்டுப்பாடின்றி உமிழ்நீர் சுரந்து வழிகிறது என்றால், அது செரிப்ரல் பால்சி (Cerebral palsy) அல்லது மனநலம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏதேனும் காரணமாக இருக்கலாம். உமிழ்நீர் சுரப்பிகளில் (Salivary glands) ஏதேனும் இன்ஃபெக் ஷனோ, இன்ஃப்ளமேஷன் எனப்படும் வீக்கமோ இருந்தாலும், ஹைப்பர்சலைவேஷன் என்கிற அதிக உமிழ்நீர் சுரப்பு பிரச்னை இருக்கலாம்.

வயதானவர்களில் சிலருக்கும் இதுபோல உமிழ்நீர் அதிகம் சுரக்கும் பிரச்னை இருக்கலாம். அதற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்.

ஆன்டிசைக்கோட்டிக் மருந்துகளின் பக்க விளைவாகவும் இப்படி வரலாம்

ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் பாதிப்பு உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் இருந்தாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். வாய்ப்பகுதியில் உள்ள தசைகளில் தளர்வும் சோர்வும் இருக்கும். அதுபோன்ற நிலைகளில் உமிழ்நீர் சுரப்பும் அதிகமிருக்கும். அது வெளியே வழிவதும் அதிகமாக இருக்கும். சில மருந்துகளின் பக்க விளைவாகவும் உமிழ்நீர் அதிகம் சுரக்கலாம்.

உதாரணத்துக்கு, ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia), மனநல பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் ஆன்டிசைக்கோட்டிக் மருந்துகளின் பக்க விளைவாகவும் இப்படி வரலாம். எனவே, உங்கள் குழந்தைக்கு எந்தக் காரணத்தால் இப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உறுதிசெய்து கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.