வீடு, கடைகளுக்கு ரசாயனம் கலந்த பால்; தென்காசியில் 2 ஆண்டுகள் விற்றது அம்பலம்.. பகீர் பின்னணி

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில்  அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் சாப்பிட்ட கெட்டுப்போன அசைவ உணவால் ஒவ்வாமை ஏற்பட்டதில் நான்கு பேர் பலியான நிலையில், தென்காசி பகுதி முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கடந்த  இரண்டு ஆண்டாக நாள்தோறும் சுமார் 1,000 லிட்டர் பால் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

விற்பனைக்கு அனுப்ப இருந்த ரசாயனம் கலந்த பால்

இங்கு இருந்து எடுத்துச் செல்லப்படும் பால் தென்காசி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வீடுகள் மற்றும் டீ கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கெமிக்கல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவலை அடுத்து தென்காசி நகராட்சி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முகமது பால் வியாபாரம் நடைபெற்ற வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

 அப்போது சாப்பிடுவதற்கு உகந்தது இல்லை எனப்படும் கெமிக்கல் பவுடர் கலக்கப்பட்ட300 லிட்டர் பால் விற்பனைக்காக ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்லப்பட இருந்தது அதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உடனடியாக தென்காசி காவல் நிலையத்திற்கு அளித்த தகவல் பேரில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் தலைமையில் போலீஸார் பால் விற்பனை நடைபெற்ற இடத்திற்கு விரைந்தனர்.

ரசாயனம் கலந்த பால் பறிமுதல்

அந்த வீட்டில் கடந்த இரண்டு ஆண்டாக பால் விற்பனையில் ஈடுபட்டு வந்த தென்காசி மாவட்டம் மேலப்பாவூரை சேர்ந்த கோமதி சங்கர் என்பவரை கைது செய்தனர்.

மேலும், இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் பால் எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்ப்பாலுக்கு மாற்றாக பச்சிளங்குழந்தைகளுக்கு பசும்பால் வழங்கப்படுகிறது. சற்று வெளிர் நிறம் கலந்த பால் சுத்தமான பசும்பால் என நம்பப்படுகிறது. இதனால் கலப்படம் செய்துள்ளது மக்களுக்கு தெரிவதில்லை.

இதுகுறித்து கீழப்பாவூர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஹக்கீமிடம்  பேசினோம், “ மெட்டானில் மஞ்சள் பொடி தொழிற்சாலைகளில் சாயமேற்றவும், லிப்ஸ்டிக் உள்ளிட்டவற்றில் நிறம் கொடுப்பதற்காகவும் பயன்படுத்தக்கூடிய கேடுவிளைவிக்கக்கூடிய வர்ணப்பொடி. அனுமதிக்கப்பட்ட வர்ணங்கள் கூட லட்சத்தில் ஒரு பங்கு என்ற அளவில்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

உணவுப் பொருள்களில் இவற்றை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்டால், வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளிட்ட பிரச்னைகள் உடனடியாகவும், நாளடைவிலும் ஏற்படும். நெடு நாட்களாக பயன்படுத்தி வந்தால் கேன்சர் வரவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக பாலில் யூரியா, காஸ்டிக்சோடா, சோப் ஆயில் கலந்து விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது.

ரசாயனம் கலந்த பால் பறிமுதல்

லாக்டோ மீட்டர் எனப்படும் பால் மானியின் மூலம் சோதனையிடும் போது பாலில் அடர்த்தி குறைவாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காக யூரியா, காஸ்டிக் சோடா சேர்க்கப்படுகிறது. நுரை வருவதற்காக சோப் ஆயில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு கலக்கப்பட்ட பாலை லாக்டோ மீட்டரை வைத்து சோதனை செய்தாலும் தண்ணீரில் கலக்கப்பட்டது வெளியே தெரியாது. ஆனால், மெட்டானில் மஞ்சள் போன்ற சாயப்பொடிகளை கலப்பது தற்போதுதான் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வட மாநிலங்களில்தான் இது போன்று கலப்படம் நடக்கும். ஆனால், தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. இந்த கலப்படப் பாலின் மாதிரியை சென்னையிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்றனர்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.